முருகனின் அறுபடை வீடுகளில் நான்காம் படை வீடான சுவாமி மலையில் சித்திரைத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
பிரபவ முதல் அட்சய முடியவுள்ள 60 தமிழ் வருடத் தேவதைகள் 60 படிக்கட்டுகளாக அமையப்பெற்ற கட்டுமலைக்கோயிலாகும்.
நக்கீரரால் திருமுருகாற்றுப்படையிலும், அருணகிரிநாதரால் திருப்புகழிலும் பாடல் பெற்ற தலம்.
சுவாமிமலையில் ஒவ்வொரு ஆண்டும் சித்திரைத் திருவிழா பத்து நாள்கள் சிறப்பாக நடைபெறுவது வழக்கம்.
அதுபோல இவ்வாண்டு சித்திரைத் திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.
விழாவினை முன்னிட்டு கொடிமரம் அருகே சுப்பிரமணியசுவாமி வள்ளி தெய்வானையுடனும், விநாயகர், சண்டிகேஸ்வரர் ஆகியோர் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினர்.
கொடிமரத்துக்குச் சிறப்பு அபிஷேகம் நடத்தப்பட்டு மங்களவாத்தியங்கள் முழங்கக் கொடியேற்றப்பட்டது.
விழாவின் முக்கிய நிகழ்ச்சியான 2 ஆம் தேதி திருத்தேரோட்டம், நடைபெறுகிறது. 3 ஆம் தேதி வெள்ளி மயில் வாகனத்தில் சுவாமி வீதி உலா காவிரியில் தீர்த்தவாரியம் நடைபெறுகிறது.