சில ஆண்டுகளுக்கு முன்புவரை "எண்மக் கைது' என்ற சொல் பொதுமக்களுக்கு அறிமுகமே இல்லை. இன்று அது நாட்டில் வேகமாகப் பரவி வரும் இணையவழி மோசடிகளின் புதிய முகமாக மாறியுள்ளது.
இந்திய இணையவழி குற்ற ஒருங்கிணைப்பு மையம் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த அறிக்கையின்படி, 2024-இல் 1.23 லட்சத்துக்கும் அதிகமாக இருந்த எண்மக் கைது மோசடி புகார்கள், 2025-இல் சுமார் 58 ஆயிரமாகக் குறைந்துள்ளன.
2026 ஜூன் மாத இறுதிவரை சுமார் 16 ஆயிரம் புகார்கள் மட்டுமே பதிவாகியுள்ளன. மேலும், 36 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வழக்குகளில் ரூ.18.05 கோடி பாதிக்கப்பட்டவர்களிடம் திரும்ப வழங்கப்பட்டிருப்பதாகவும் அறிக்கை தெரிவிக்கிறது.
இந்த எண்ணிக்கைகள் பிரச்னை முடிந்துவிட்டதைக் காட்டவில்லை; ஆனால், ஒருங்கிணைந்த நடவடிக்கைகள் பலன் தரத் தொடங்கியுள்ளதை உணர்த்துகின்றன.
இதன் பின்னணியில் கவலைக்குரிய ஓர் உண்மையும் உள்ளது. அண்மையில் பெரும் கவனம் பெற்ற ஒரு வழக்கில், ஹரியாணாவைச் சேர்ந்த முதிய தம்பதியரிடம் ரூ.1.05 கோடி மோசடி செய்யப்பட்டது.