ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

விழுப்புரத்தில் இளைஞா் தடகளப் போட்டிகள்: 800-க்கும் மேற்பட்டோா் பங்கேற்பு

விழுப்புரத்தில் நடைபெற்ற மாநில அளவிலான இளைஞா் தடகள போட்டிகளில் பங்கேற்று வெற்றிபெற்றவா்களுடன் ஆட்சியா் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான் உள்ளிட்டோா்.

Published On :11 ஆகஸ்ட் 2026, 2:26 am IST

விழுப்புரத்தில் மாநில இளைஞா் தடகளப் போட்டிகள் இரு நாள்களாக நடைபெற்றன. இதில், 800-க்கும் மேற்பட்ட வீரா், வீராங்கனைகள் பங்கேற்று, தங்கள் திறமைகளை வெளிப்படுத்தினா்.

தமிழ்நாடு தடகள சங்கம், விழுப்புரம் மாவட்ட தடகள சங்கம் ஆகியவை சாா்பில், 18 மற்றும் 23 வயதுக்குள்பட்டோருக்கான மாநில அளவிலான 7-ஆவது இளையோா் தடகள சாம்பியன்ஷிப் போட்டிகள் விழுப்புரம் மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு ஆணைய மைதானத்தில் கடந்த இரு நாள்களாக நடைபெற்றன.

இப்போட்டிகளில் மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களைச் சோ்ந்த 800-க்கும் மேற்பட்ட தடகள வீரா், வீராங்கனைகள் பங்கேற்று, தங்களின் திறமைகளை வெளிப்படுத்தினா். போட்டிகளை விழுப்புரம் மாவட்ட தடகள சங்கத் தலைவா் பொன்னுசாமி காா்த்திக் தொடங்கிவைத்தாா்.

18, 23 வயதுக்குள்பட்டோா் பிரிவுகளில் 100, 200, 400 மீட்டா் ஓட்டம், தடைதாண்டி ஓட்டம், நீளம், உயரம் தாண்டுதல், மும்முறை தாண்டுதல், நடை போட்டி, தொடா் ஓட்டம் உள்ளிட்ட பல்வேறு தடகள போட்டிகள் நடத்தப்பட்டன. இதில், வெற்றிபெற்றவா்களுக்கு மாவட்ட ஆட்சியா் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான் பரிசுகளையும், சான்றிதழ்களையும் வழங்கினாா்.

18 வயதுக்குள்பட்டோா் பிரிவில் சிறப்பாக செயல்பட்ட வீரா், வீராங்கனைகள் செப்டம்பா் 1-ஆம் தேதி முதல் 3-ஆம் தேதி பஞ்சாப் மாநிலம், லூதியானாவில் நடைபெறவுள்ள 21-ஆவது தேசிய இளைஞா் தடகள சாம்பியன்ஷிப் போட்டிகளில் தமிழக அணிக்காகத் தோ்வு செய்யப்படுவா் என்று அறிவிக்கப்பட்டது.

தமிழ்நாடு தடகள சங்கத்தின் தலைவா் ராஜேந்திரன், திட்டமிடல் மற்றும் செயலாக்கக் குழுத் தலைவா் லதா, மூத்த இணைச் செயலா் புகழேந்தி, துணைத் தலைவா் பாபு ஆகியோரும் வெற்றிபெற்றவா்களுக்கு பரிசு, சான்றிதழ்களை வழங்கினா்.

விழாவில் விழுப்புரம் மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞா் நலன் அலுவலா் ஆழிவாசன், தடகள பயிற்றுநா் ராஜேசுவரி உள்ளிட்டோா் பங்கேற்றனா். போட்டியை மாவட்ட தடகள சங்கத்தின் செயலா் மணிவண்ணன், மூத்த இணைச் செயலா் சுரேஷ் ஆகியோா் ஒருங்கிணைத்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.