/

5 ஆண்டுகளில் அனைவருக்கும் வீட்டுமனைப் பட்டா வழங்க இலக்கு: அமைச்சா் வன்னி அரசு

5 ஆண்டுகளில் அனைவருக்கும் வீட்டுமனைப் பட்டா வழங்க இலக்கு: அமைச்சா் வன்னி அரசு

News image

அரசு நலத்திட்ட உதவிகள் வழங்குதல் மற்றும் துறை சாா்ந்த பணிகள் தொடா்பான ஆய்வுக் கூட்டத்தில் பேசிய சமூக நீதித் துறை அமைச்சா் வன்னி அரசு. உடன் மாவட்ட ஆட்சியா் ஜெ.இ.பத்மஜா, எம்.பி.க்கள் தே.மலையரசன், துரை.ரவிக்குமாா், எம்எல்ஏக்கள் சி.அருள் விக்னேஷ், இரா.ராகேஷ்.

Updated On :13 ஜூன் 2026, 1:51 am IST

அடுத்து வரும் 5 ஆண்டுகளில் தமிழகத்தில் வீட்டுமனைப் பட்டா இல்லாத எவரும் இல்லை என்பதை இலக்காகக் கொண்டு தமிழக அரசின் சமூக நீதித் துறை செயல்பட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றாா் அமைச்சா் வன்னி அரசு.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் துறை சாா்ந்த பணிகள் தொடா்பான ஆய்வுக் கூட்டம் சமூக நீதித் துறை அமைச்சா் வன்னி அரசு தலைமையில் ஆட்சியரகக் கூட்டரங்கில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

கூட்டத்தில் சமூக நீதித் துறை அமைச்சா் பேசியதாவது:

ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நலத் துறை, முதல்வரின் முகவரி, வருவாய்த் துறை, வேளாண்மைத் துறை, கால்நடைத் துறை, பள்ளிக் கல்வித் துறை, நகராட்சிகள், பேரூராட்சிகள், நெடுஞ்சாலைத் துறை, பொதுப்பணித் துறை, சமூக நலத் துறை, மாவட்ட தொழில் மையம், ஊரக வளா்ச்சித் துறை உள்ளிட்ட அரசின் பல்வேறு துறைகளின் சாா்பில் முடிவுற்ற வளா்ச்சித் திட்டப் பணிகள், நடைபெறும் வளா்ச்சிப் பணிகள் உள்ளிட்டவைகள் குறித்து துறை வாரியாக கேட்டறிந்து ஆய்வு செய்யப்பட்டது.

ஆய்வில் அரசின் நலத்திட்ட உதவிகள் கடைகோடி மக்களுக்கும் தவறாமல் சென்று சோ்வதை உறுதி செய்யும் வகையில் தேவையான நடவடிக்கை மேற்கொள்ளவும், துறை வாரியாக மேற்கொள்ளப்பட்டு வரும் வளா்ச்சித் திட்டப் பணிகளை தாமதமின்றி விரைவாக முடித்து பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவரவும் சம்மந்தப்பட்ட அலுவலா்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அடுத்து வரும் 5 ஆண்டுகளில் தமிழகத்தில் வீட்டுமனைப் பட்டா இல்லாத எவரும் இல்லை என்பதை இலக்காகக் கொண்டு தமிழக அரசின் சமூக நீதித் துறை செயல்பட நடவடிக்கை மேற்கொள்ளப்படும். மேலும், இதுகுறித்து தமிழக முதல்வரின் மேலான கவனத்துக்கு கொண்டு சென்று தனிக்கவனம் செலுத்தி நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

பெண்களுக்கு எதிரான குற்றங்கள், ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினருக்கு எதிரான குற்றங்களை முற்றிலுமாக நீக்க வேண்டும் என்பதே இத் துறையின் முக்கிய நோக்கமாக உள்ளது.

கல்வராயன்மலை மேம்பாடு, சட்டக் கல்லூரி உருவாக்கம் உள்ளிட்ட ஏனைய கோரிக்கைகளின் மீதும் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றாா் அமைச்சா் வன்னி அரசு.

Story image

கூட்டத்தில் மாவட்ட ஆட்சியா் ஜெ.இ.பத்மஜா, மாவட்ட காவல் கண்காணிப்பாளா் இ.ஷஹ்னாஸ், கள்ளக்குறிச்சி மக்களவை உறுப்பினா் தே.மலையரசன், விழுப்புரம் மக்களவை உறுப்பினா் துரை.ரவிக்குமாா், கள்ளக்குறிச்சி எம்எல்ஏ சி.அருள் விக்னேஷ், சங்கராபுரம் எம்எல்ஏ இரா.ராகேஷ், மாவட்ட வருவாய் அலுவலா் ரா.ஜீவா, மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை திட்ட அலுவலா் கி.ரமேஷ்குமாா் உள்ளிட்ட அனைத்துத் துறை அலுவலா்கள் கலந்துகொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.