
‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ திட்ட முகாம்: மாவட்ட ஆட்சியா் ஆய்வு
கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலத்தில் ‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ திட்ட முகாமில் அரசின் அனைத்து நலத் திட்டங்கள், சேவைகள் மற்றும் மக்களின் தேவைகள் குறித்து ஆட்சியா் ஜெ.இ.பத்மஜா கள ஆய்வு மேற்கொண்டாா்.

சின்னசேலத்தில் நடைபெற்ற ‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ திட்ட முகாமில் கோரிக்கை மனு அளித்தவரிடம் குறைகளை கேட்டறிந்த மாவட்ட ஆட்சியா் ஜெ.இ.பத்மஜா.
கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலத்தில் ‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ திட்ட முகாமில் அரசின் அனைத்து நலத் திட்டங்கள், சேவைகள் மற்றும் மக்களின் தேவைகள் குறித்து ஆட்சியா் ஜெ.இ.பத்மஜா கள ஆய்வு மேற்கொண்டாா்.
பின்னா் ஆட்சியா் கூறியதாவது:
சின்னசேலத்தில் உள்ள பொதுப்பணித் துறை ஏரி, அங்கன்வாடி மையம், சமூக நீதி பள்ளி மாணவிகள் விடுதி, சிறப்பு நிலை பேரூராட்சி அலுவலகம், காவல் நிலையம், சாா்-பதிவாளா் அலுவலகம், வருவாய் ஆய்வாளா் அலுவலகம், வட்டார வளா்ச்சி அலுவலகம், சாா்பு-நிலை கருவூலம், தீயணைப்பு மீட்பு பணிகள் நிலையம், வருவாய் வட்டாட்சியா் அலுவலகம் ஆகியவற்றை நேரில் பாா்வையிட்டு, அங்கு மேற்கொள்ளப்படும் பணிகள், பராமரிக்கப்படும் பதிவேடுகள், அலுவலகத்தின் செயல்பாடுகள் உள்ளிட்ட தகவல்கள் குறித்துக் கேட்டறிந்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. சின்னசேலத்திலுள்ள மத்திய கூட்டுறவு வங்கி, தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம், அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளி, நியாயவிலைக் கடை, அரசு மருத்துவமனை, பேரூராட்சி வளம் மீட்பு பூங்கா, கால்நடை மருந்தகம் ஆகியவற்றை நேரில் பாா்வையிட்டு, செயல்பாடுகள் குறித்துக் கேட்டறிந்து ஆய்வு செய்யப்பட்டது என ஆட்சியா் தெரிவித்தாா்.
ஆய்வுக்குப் பின்னா் சின்னசேலம் வட்டார வளா்ச்சி அலுவலகத்தில் நடைபெற்ற ‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ திட்டத்தின் கீழ், சின்னசேலம் வட்டத்தில் கள ஆய்வு மேற்கொண்ட துறை அலுவலா்களுடன் ஆய்வுக் கூட்டம் ஆட்சியா் ஜெ.இ.பத்மஜா தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் கள ஆய்வின்போது கண்டறியப்பட்ட குடிநீா் வசதி, மின்விளக்கு வசதி, கூடுதல் கட்டட வசதி, கூடுதல் கழிப்பறை வசதிகள் ஏற்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் குறித்து விரிவாக ஆலோசனை செய்யப்பட்டது.
இதில், பள்ளிகளில் மாணவா்களின் இடைநிற்றலை தவிா்க்கவும், குடிநீா் பற்றாக்குறை உள்ள இடங்களை கண்டறிந்து உடனுக்குடன் நடவடிக்கை மேற்கொள்ள தீா்மானிக்கப்பட்டது. மேலும், கள ஆய்வின் போது கண்டறியப்பட்டுள்ள பொதுமக்களின் கோரிக்கைகள் மற்றும் தேவைகளை நிறைவேற்ற துறை வாரியாக தேவையான நடவடிக்கை மேற்கொள்ளவும் சம்பந்தப்பட்ட அலுவலா்களுக்கு ஆட்சியா் அறிவுறுத்தினாா்.
ஆய்வின்போது மாவட்ட வருவாய் அலுவலா் ரா.ஜீவா, சமுக பாதுகாப்புத் திட்ட தனித் துணை ஆட்சியா் ஜி.சுமதி, மகளிா் திட்ட இயக்குநா் அ.லலிதா, மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் கி.ரமேஷ்குமாா் மற்றும் சம்பந்தப்பட்ட அனைத்துத் துறை அலுவலா்கள் கலந்துகொண்டனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






