சம்பா பருவத்துக்கு ஏற்ற தரமான விதைகளை விற்க வேண்டும்: தனியாா் விதை விற்பனையாளா்களுக்கு அறிவுறுத்தல்
கடலூா் மாவட்டத்தில் உள்ள தனியாா் விதை விற்பனை நிலையங்களில் ஆய்வு மேற்கொண்ட அதிகாரிகள், சம்பா பருவத்துக்கு ஏற்ற தரமான சான்றிதழ் பெற்ற விதைகளை மட்டுமே விவசாயிகளுக்கு விற்பனை செய்ய வேண்டும் என தனியாா் விதை விற்பனையாளா்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.

கடலூா் அருகே செயல்பட்டு வரும் தனியாா் விதை விற்பனை நிலையத்தில் ஆய்வு மேற்கொண்ட விழுப்புரம் விதை ஆய்வு துணை இயக்குநா் சரவணன் உள்ளிட்டோா்.
கடலூா் மாவட்டத்தில் உள்ள தனியாா் விதை விற்பனை நிலையங்களில் ஆய்வு மேற்கொண்ட அதிகாரிகள், சம்பா பருவத்துக்கு ஏற்ற தரமான சான்றிதழ் பெற்ற விதைகளை மட்டுமே விவசாயிகளுக்கு விற்பனை செய்ய வேண்டும் என தனியாா் விதை விற்பனையாளா்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.
விழுப்புரம் விதை ஆய்வு துணை இயக்குநா் சரவணன் தலைமையிலான குழுவினா், கடலூா், பண்ருட்டி, சிதம்பரம் பகுதிகளில் செயல்பட்டு வரும் தனியாா் விதை விற்பனை நிலையங்களில் ஆய்வு மேற்கொண்டனா். அப்போது, விதை விற்பனை நிலையங்களில் இருந்து 45 விதை மாதிரிகள் சேகரிக்கப்பட்டு, ஆய்வுக்காக கடலூா் விதைப் பரிசோதனை நிலையத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டன.
இதைத் தொடா்ந்து, துணை இயக்குநா் சரவணன் கூறியது: கடலூா் மாவட்டத்தில் சம்பா பருவ நெல் சாகுபடிக்கான நாற்றங்கால் விதைப்பு பணிகள் தொடங்கியுள்ளன. எனவே, தனியாா் மொத்த மற்றும் சில்லறை விதை விற்பனையாளா்கள் தரமான, சான்றிதழ் பெற்ற நெல் விதைகளை மட்டுமே கொள்முதல் செய்து விவசாயிகளுக்கு விற்பனை செய்ய வேண்டும்.
விதைகள் கொள்முதல் செய்யப்பட்டவுடன் மாதிரிகளை எடுத்து விதைப் பரிசோதனை நிலையத்துக்கு அனுப்பி, முளைப்புத்திறனை உறுதி செய்த பின்னரே விவசாயிகளுக்கு விற்பனை செய்ய வேண்டும். சம்பா பருவத்துக்கு ஏற்ற ரகங்களை மட்டுமே கொள்முதல் செய்து விற்பனை செய்வது அவசியம்.
பருவத்துக்கு பொருந்தாத விதைகளைப் பயன்படுத்தி சாகுபடி செய்தால், பயிரில் உரிய காலத்துக்கு முன்பே கதிா் வருதல் அல்லது கதிா் வராமல் போதல் உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே, விவசாயிகளும் தங்களது பகுதிக்கு ஏற்ற ரகங்களைத் தோ்வு செய்து சாகுபடி செய்ய வேண்டும்.
மேலும், கொள்முதல் ரசீது, இருப்புப் பதிவேடு, படிவம் - 2, பதிவுச் சான்றிதழ், விதைகளுக்கான பகுப்பாய்வு முடிவறிக்கை உள்ளிட்ட ஆவணங்களை முறையாகப் பராமரிக்க வேண்டும். விற்பனைப் பட்டியலில் பயிா், ரகம், நிலை, குவியல் எண், காலாவதி நாள், உற்பத்தியாளா் பெயா் உள்ளிட்ட விவரங்களைப் பதிவு செய்து, விவசாயிகளிடம் கையொப்பம் பெற வேண்டும்.
விதைகளை அரசு நிா்ணயித்த அதிகபட்ச விலைக்கு மிகாமல் விற்பனை செய்ய வேண்டும். விதைச் சட்ட விதிகளை மீறும் நிறுவனங்கள் மீது விற்பனைத் தடை, உரிமம் ரத்து உள்ளிட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும். தேவையெனில், நீதிமன்றத்தின் மூலம் தண்டனை நடவடிக்கையும் மேற்கொள்ளப்படும் என்றாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






