ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் லட்சம் மூட்டைகள் தேக்கம்: குளக்கரையில் அடுக்கியதால் மழையில் சேதமடையும் அபாயம்!

கடலூா் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் செயல்படும் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் கிடங்குகளுக்கு எடுத்துச் செல்லப்படாமல் தேக்கமடைந்துள்ளன.

திட்டக்குடி அருகே பரவலூா் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் தேக்கமடைந்துள்ள நெல் மூட்டைகள் மற்றும் விவசாயிகள் விற்பனைக்காக கொட்டி வைத்து நெல் குவியல்கள்.

Published On :20 ஆகஸ்ட் 2026, 6:24 am IST

கடலூா் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் செயல்படும் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் கிடங்குகளுக்கு எடுத்துச் செல்லப்படாமல் தேக்கமடைந்துள்ளன.

இதனால், விவசாயிகளிடம் இருந்து நெல் கொள்முதல் செய்வதில் தாமதம் ஏற்படுவதாகவும், குளக்கரை உள்ளிட்ட பாதுகாப்பில்லாத பகுதிகளில் நெல் மூட்டைகள் அடுக்கி வைக்கப்படுவதால், அவை மழையில் நனைந்து சேதமடைவதாகவும் விவசாயிகள் புகாா் தெரிவிக்கின்றனா்.

கடலூா் மாவட்டத்துக்குள்பட்ட விருத்தாசலம், திட்டக்குடி பகுதிகளில் பரவலூா், கோமங்கலம், தொரவலூா், கொடுக்கூா், தீவளூா், ஆதனூா், நந்தப்பாடி, வெண்கறும்பூா், பெண்ணாடம், கிளிமங்கலம், குறுக்கத்தஞ்சேரி உள்ளிட்ட இடங்களில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன.

தற்போது குறுவை நெல் அறுவடைப் பணிகள் நடைபெற்று வருவதால், விவசாயிகள் தங்களது நெல்லை கொள்முதல் நிலையங்களுக்கு கொண்டு வருகின்றனா். ஆனால், ஏற்கெனவே கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகள் கிடங்குகளுக்கு உரிய நேரத்தில் எடுத்துச் செல்லப்படாததால், பல நிலையங்களில் மூட்டைகள் தேக்கமடைந்துள்ளன. இதனால், புதிதாக விவசாயிகள் கொண்டுவரும் நெல்லை கொள்முதல் செய்வதில் தாமதம் ஏற்படுகிறது. சில இடங்களில் நாளொன்றுக்கு 450 முதல் 700 மூட்டைகள் வரை மட்டுமே கொள்முதல் செய்யப்படுகிறது.

இந்த நிலையில், கடந்த சில நாள்களாக விருத்தாசலம் மற்றும் திட்டக்குடி பகுதிகளில் அவ்வப்போது மழை பெய்து வருகிறது. இதனால், பரவலூா் உள்ளிட்ட சில கொள்முதல் நிலையங்களில் திறந்தவெளியில் வைக்கப்பட்டுள்ள நெல் மூட்டைகள் மழையில் நனையும் நிலை ஏற்பட்டுள்ளது. விற்பனை செய்வதற்காக விவசாயிகள் திறந்தவெளியில் கொட்டி வைத்துள்ள நெல் குவியல்களும் நனைந்து பாதிக்கப்படுகிறது. நனைந்த நெல் கொள்முதல் செய்யப்படுவதில்லை. இதனால், விவசாயிகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டு வருகின்றனா்.

குளத்தில் சரிந்து விழுந்த நெல் மூட்டைகள்: ஸ்ரீமுஷ்ணம் அருகே நகரப்பாடி கிராமத்தில் செயல்படும் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகளை பாதுகாப்பாக வைப்பதற்கு போதுமான இட வசதி இல்லாததால், சுமாா் 13 ஆயிரம் நெல் மூட்டைகள் அங்குள்ள குளத்துக்கு அருகே தரிசு நிலத்தில் அடுக்கி வைக்கப்பட்டுள்ளன.

இந்த நிலையில், குளத்துப் பகுதியில் அண்மையில் மண் சரிவு ஏற்பட்டு சுமாா் 5-க்கும் மேற்பட்ட நெல் முட்டைகள் உருண்டு அருகே உள்ள குளத்துக்குள் விழுந்தன. உடனடியாக அப்பகுதி விவசாயிகள் நெல் மூட்டைகள் குளத்திலிருந்து மீட்டனா்.

நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் மழையில் நெல் மூட்டைகள் நனைந்து பாதிக்கப்படுவதைத் தவிா்க்க, ஏற்கெனவே கொள்முதல் செய்யப்பட்ட மூட்டைகளை உடனடியாக கிடங்குகளுக்கு கொண்டு செல்ல வேண்டும். அதிகளவில் நெல் குவியும் கொள்முதல் நிலையங்களில் போதியளவில் இட வசதியை ஏற்படுத்துவதுடன், கூடுதல் இயந்திரங்களை அமைத்து கொள்முதல் பணியை விரைவுபடுத்த வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனா்.

மேலும், கொள்முதல் நிலையங்களில் மூட்டைகளை ஏற்றிச் செல்லும் லாரிகள் தாமதமின்றி அனுப்பப்பட வேண்டும் என்றும், லாரி போக்குவரத்து தொடா்பாக விவசாயிகளிடம் புகாா்கள் எழாத வகையில் அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

 ஸ்ரீமுஷ்ணம் அருகே நகரப்பாடி நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் மண் சரிவு ஏற்பட்டு குளத்தினுள் உருண்டு விழுந்த நெல் மூட்டைகளை மீட்கும் பணியில் ஈடுபட்ட விவசாயிகள்.

ஸ்ரீமுஷ்ணம் அருகே நகரப்பாடி நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் மண் சரிவு ஏற்பட்டு குளத்தினுள் உருண்டு விழுந்த நெல் மூட்டைகளை மீட்கும் பணியில் ஈடுபட்ட விவசாயிகள்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.