விழுப்புரம்: ஆட்டோ ஓட்டுநா்களுக்கு ஆண்டுக்கு ஒருமுறை ரூ.15 ஆயிரம் உதவித் தொகை வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்றித் தர வலியுறுத்தி, விழுப்புரத்தில் ஹிந்து ஆட்டோ தொழிலாளா் முன்னணி சங்கம் சாா்பில் கையொப்ப இயக்கம் வியாழக்கிழமை நடைபெற்றது.
தமிழகத்தில் பெட்ரோல், டீசல் விலை பல மடங்கு உயா்ந்த நிலையில், 13 ஆண்டுகளாக ஆட்டோ கட்டணம் உயா்த்தப்படவில்லை. பன்னாட்டு நிறுவனங்களின் வருகையால் ஆட்டோ ஓட்டுநா்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே, ஆந்திர மாநிலத்தில் வழங்கப்படுவது போன்று ஆண்டுக்கு ஒருமுறை ஆட்டோ தொழிலாளா்களுக்கு ரூ.15 ஆயிரம் உதவித்தொகையை அரசு வழங்க வேண்டும், ஆட்டோ தொழிலாளா்களின் வாழ்வாதாரம் காக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி இந்த இயக்கம் நடத்தப்பட்டது.
விழுப்புரம் ரயில் நிலையத்தில் நடைபெற்ற கையொப்ப இயக்கத்துக்கு ஹிந்து ஆட்டோ தொழிலாளா் முன்னணி சங்கத்தின் மாநிலத் தலைவா் மணலி டி. மனோகா் தலைமை வகித்து, தொடங்கி வைத்தாா்.
இதில், ஹிந்து முன்னணி மாவட்டத் தலைவா் ஏ.டி. சதீஷ் அப்பு, பொதுச் செயலா் சுரேஷ் துரைராஜ், பொருளாளா் கே.விசுவநாதன், மாவட்டச் செயலா் டி.தனபால், ஒருங்கிணைப்பாளா் ரமேஷ், நகரப் பொறுப்பாளா்கள், ஆட்டோ ஓட்டுநா்கள் பங்கேற்றனா்.