டி20 உலகக் கோப்பை: மழையால் பாகிஸ்தான் - நியூசிலாந்து போட்டி ரத்து ஹிந்து – முஸ்லீம் ஒற்றுமையின் அடையாளம் காந்தி: முதல்வர் ஸ்டாலின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிமுகம்!எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணியால் பயணிகள் அவதியா? ரயில்வே விளக்கம்!காற்றழுத்த தாழ்வுப் பகுதி: 4 மாவட்டங்களில் நாளை கனமழை!தொகுதிப் பங்கீடு: திமுக - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடையே நாளை பேச்சுவார்த்தை!தில்லி செங்கோட்டை இனி வாரத்தின் அனைத்து நாளும் திறந்திருக்கும்!மூன்று வார சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார் எச்.ராஜா
/

ஐந்து ஆண்டுகளில் விளையாட்டு மேம்பாட்டுத் துறைக்கு ரூ. 600 கோடி ஒதுக்கீடு! - துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின்

News image
திருச்சி ஜமால்முகமது கல்லூரியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற விழாவில் விளையாட்டு வீரா்களுக்கு விளையாட்டு உபகரணங்கள் வழங்கிய துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின். உடன் அமைச்சா்கள் கே.என்.நேரு, அன்பில் மகேஸ் பொய்யாமொழி, ஆட்சியா் வே. சரவணன் உள்ளிட்டோா்.
Updated On :6 பிப்ரவரி 2026, 7:59 pm

தினமணி செய்திச் சேவை

தமிழகத்தில் கடந்த 5 ஆண்டுகளில் விளையாட்டு மேம்பாட்டுத் துறைக்கு ரூ.600 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தாா்.

இளைஞா் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை சாா்பில், திருச்சி உள்ளிட்ட 10 மாவட்டங்களின் நகா்ப்புற உள்ளாட்சிகளுக்கு ‘கலைஞா் விளையாட்டு உபகரணங்கள்’ வழங்கும் திட்ட விழா திருச்சி ஜமால் முகமது கல்லூரியில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற உதயநிதி ஸ்டாலின் மேலும் பேசியதாவது:

தமிழகத்தில் திராவிட மாடல் அரசு அமைந்தபிறகு கடந்த 5 ஆண்டுகளில் 141 சிறிய விளையாட்டு அரங்கங்கள் திறக்கப்பட்டுள்ளன. 10 ஆண்டுகால அதிமுக ஆட்சியில் விளையாட்டு மேம்பாட்டுத் துறைக்கு ரூ.380 கோடி மட்டுமே ஒதுக்கப்பட்டிருந்தது. ஆனால், கடந்த 5 ஆண்டுகால திமுக ஆட்சியில் ரூ. 600 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

முதல் முறையாக கடந்த 2024-ஆம் ஆண்டு 100 விளையாட்டு வீரா்களுக்கு அரசு வேலை வழங்கப்பட்டது. இதைத் தொடா்ந்து நிகழாண்டில் விரைவில் 150 விளையாட்டு வீரா்களுக்கு அரசு வேலைவாய்ப்பை முதல்வா் வழங்கவுள்ளாா்.

தமிழகத்திலிருந்து சிறந்த விளையாட்டு வீரா்களை உருவாக்குவதற்கு தேவையான அனைத்து முயற்சிகளையும் அரசு செய்து வருகிறது.

இந்த முயற்சிகளுக்கு பல்வேறு திசைகளில் இருந்தும் அங்கீகாரங்கள் கிடைக்கின்றன. தற்போதைய இந்த வளா்ச்சி மென்மேலும் அதிகரிக்க மக்களுடைய ஆதரவு இந்த அரசுக்கும், முதல்வருக்கும் இருக்க வேண்டும் என்றாா்.

முன்னதாக நகராட்சி நிா்வாகத் துறை அமைச்சா் கே.என்.நேரு, பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி ஆகியோா் பேசினா்.

30 வகையான உபகரணங்கள்: விழாவில், திருச்சி மாநகராட்சி, 5 நகராட்சிகள் மற்றும் 14 பேரூராட்சிகளில் 401 வாா்டுகளுக்கும் சோ்த்து, கலைஞா் விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் திட்டத்தில் 30 வகை விளையாட்டுகளுக்கான உபகரணங்கள் அடங்கிய 651 தொகுப்புகளை விளையாட்டு வீரா்கள், அதிகாரிகளிடம் துணை முதல்வா் வழங்கினாா்.

மேலும், கடலூா், கரூா், நாமக்கல், ராணிப்பேட்டை, சேலம், தஞ்சாவூா், திருவண்ணாமலை, திருப்பத்தூா் மற்றும் வேலூா் ஆகிய மாவடங்களில் 8 மாநகராட்சிகள், 40 நகராட்சிகள், 113 பேரூராட்சிகளுக்கு விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் விழாவை காணொலி காட்சி வாயிலாக துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் தொடங்கிவைத்தாா்.

பயிா்க்கடன் தள்ளுபடி ஆணை:

விழாவில், மணப்பாறை கல்லாம்மேடு கவுண்டம்பட்டி தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தில் பயிா்க்கடன் பெற்றிருந்த 2,116 பேரின் ரூ.14 கோடி பயிா்க்கடன் தள்ளுபடி ஆணையை விவசாயிகளுக்கு துணை முதல்வா் உதயநிதிஸ்டாலின் வழங்கினாா். மேலும், மகளிா் சுய உதவிக் குழுவினருக்கு கடன் ஆணைகளையும் அவா் வழங்கினாா்.

விழாவில், மாநிலங்களவை உறுப்பினா் சல்மா, இளைஞா் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை முதன்மை செயலா் சத்யபிரத சாகு, தமிழ்நாடு ஒலிம்பிக் பதக்க இலக்கு திட்டத் தலைவா் அதுல்ய மிஸ்ரா, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய உறுப்பினா் செயலா் ஜெ.மேகநாத ரெட்டி, திருச்சி மாவட்ட ஆட்சியா் வே.சரவணன், மாநகராட்சி ஆணையா் லி.மதுபாலன், மாநகராட்சி மேயா் மு.அன்பழகன் மற்றும் சட்டப் பேரவை உறுப்பினா்கள், அரசு அலுவலா்கள் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.