பிப். 23, 24-ல் மழைக்கு வாய்ப்பு! நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம் ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்சட்டப்பேரவைத் தேர்தல் : பிப். 26-ல் சிபிஎம் உடன் திமுக பேச்சுவார்த்தை!ஆப்கனில் பாகிஸ்தான் விமானப்படை தாக்குதல்! இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீதான வரியை 15% ஆக உயர்த்தினார் டிரம்ப்!
/

மாணவர் சேர்க்கை குறைவதால் தள்ளாடும் ரயில்வே தமிழ் வழிப் பள்ளி

திருச்சி, ஜூன் 24: மாணவர் சேர்க்கை குறைந்து வருவதால், ரயில்வே தமிழ்வழிக் கல்விப் பள்ளி தொடர்ந்து செயல்படுவதில் சிக்கல் நிலவி வருகிறது.  ரயில்வே துறையில் பணிபுரியும் ஊழியர்களின் வசதிக்கா

News image
Updated On :26 டிசம்பர் 2023, 6:26 am

தி. இன்பராஜ்

திருச்சி, ஜூன் 24: மாணவர் சேர்க்கை குறைந்து வருவதால், ரயில்வே தமிழ்வழிக் கல்விப் பள்ளி தொடர்ந்து செயல்படுவதில் சிக்கல் நிலவி வருகிறது.

 ரயில்வே துறையில் பணிபுரியும் ஊழியர்களின் வசதிக்காக பள்ளிகள் நடத்தப்பட்டு வருகின்றன. தெற்கு ரயில்வே நிர்வாகத்துக்கு உள்பட்ட பகுதிகளில் 11 ரயில்வே பள்ளிகள் உள்ளன. இவற்றில், நான்கு மேல்நிலைப் பள்ளிகள். 7 உயர்நிலைப் பள்ளிகள். இதில் 8 பள்ளிகள் ஆங்கிலோ இந்தியன் பாடப்பிரிவைக் கொண்டவை.

 தமிழகத்தில் பெரம்பூர், திருச்சி பொன்மலை, அரக்கோணம், ஜோலார்பேட்டை, ஈரோடு, விழுப்புரம், மதுரை ஆகிய இடங்களில் ரயில்வே பள்ளிகள் உள்ளன.

 பெரம்பூரில் உள்ள பள்ளி கடந்த 1890 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது. பெரம்பூர், பொன்மலை ஆகிய இடங்களில் மட்டும் ஆங்கிலம் மற்றும் தமிழ் வழிக் கல்விக்கென தனித் தனி பள்ளிகள் உள்ளன.

 இந்தப் பள்ளிகளைப் பொருத்தவரையில் ரயில்வே பணியாளர்களின் குழந்தைகளுக்கு மட்டும்தான் முன்னுரிமை வழங்கப்படும். ரயில்வே ஊழியர் அல்லாதவர்களின் குழந்தைகளைச் சேர்க்க பல விதிமுறைகள் உள்ளன என்பதால், மற்றவர்கள் இந்தப் பள்ளிக்கு அதிகம் செல்வதில்லை.

 திருச்சி பொன்மலையில் ஆங்கில வழிக் கல்விக்கென தனியாக உள்ள பள்ளி கடந்த 2006-07 ஆம் ஆண்டு மண்டல அளவில் சிறந்த பள்ளியாகத் தேர்வு செய்யப்பட்டது. இந்தப் பள்ளியில் தங்களது குழந்தைகளைச் சேர்க்க பெற்றோர்கள் போட்டிப்போடுவது வழக்கம்.

 ஆனால், இதே வளாகத்தில் உள்ள தமிழ் வழிக் கல்வி பள்ளிதான் தற்போது போதிய மாணவ, மாணவிகள் இல்லாத நிலையில் உள்ளது. 80 ஆண்டுகள் பழைமையான இந்தப் பள்ளியில் 6 முதல் 12 ஆம் வகுப்பு வரை உள்ளது.

 ஒரு காலத்தில் 2,000 மாணவ, மாணவிகள் படித்து வந்த இந்தப் பள்ளியில் தற்போதைய மாணவர்களின் எண்ணிக்கை 150-க்கும் குறைவே.

 நிகழாண்டில் 6-ம் வகுப்புக்கு இதுவரை ஒரு மாணவர்கூட வந்து சேரவில்லை. மேலும், 7-ம் வகுப்பில் 8 பேரும், 9-ம் வகுப்பில் 6 பேரும் மட்டுமே உள்ளனர்.

 பத்தாம் வகுப்பில் பத்துக்கும் குறைவான மாணவர்களே வருகை தரும் நிலை உள்ளது. 8-ம் வகுப்பிலும் இதுவரை மாணவர்கள் யாரும் வராத நிலை உள்ளது.

 மேல்நிலை வகுப்புகளில் ஓரளவுக்கு மாணவர் சேர்க்கை இருக்கிறது. 11-ம் வகுப்பில் இதுவரை 35 மாணவ, மாணவிகள் சேர்ந்துள்ளனர். இன்னும் சேர வாய்ப்பு உள்ளதாக பள்ளி அலுவலர்கள் தெரிவித்தனர். பிளஸ் 2 வகுப்பில் 55 பேர் படித்து வருகின்றனர்.

 மொத்தத்தில், 2,000 மாணவ, மாணவிகள் வரை பயில அனைத்து வசதிகளும் உள்ள இந்தப் பள்ளியில் தற்போது, 150-க்கும் குறைவான மாணவர்களே உள்ளனர் என்பதற்கு, தமிழ் வழிக் கல்வி பள்ளி என்பதே காரணம் எனத் தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

 ஆங்கிலம் மீதுள்ள மோகம் நாளுக்கு நாள் மக்களிடம் அதிகரித்து வருவதால், ஆங்கில வழிக் கல்விப் பள்ளிகளை மக்கள் நாடிச் செல்லும் நிலை உள்ளது.

 இதன் காரணமாகவே, தமிழ் வழிக் கல்விப் பள்ளியைவிட அருகில் உள்ள ஆங்கில வழிக் கல்விப் பள்ளி பத்து மடங்கு மாணவ, மாணவிகளைக் கொண்டதாக உள்ளது.

 மேலும், கடந்த சில ஆண்டுகளாகவே இந்தப் பள்ளியில் 10 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத் தேர்வில் தேர்ச்சி விகிதம் மிகவும் குறைவாகவே உள்ளது.

 பிளஸ் 1 வகுப்பில் 5 பாடப் பிரிவுகள் இருந்தும் மொத்த மாணவர்களின் எண்ணிக்கை 30-க்குள்தான் இருக்கின்றன.

 மேலும், இயந்திரப் பொறியியல் பிரிவுக்குத் தேவையான அனைத்து வசதிகளும் உள்ள பள்ளி இதுதான். ஆனால், தற்போது இந்தப் பள்ளியின் நிலைமை மிக மோசமான நிலைக்குத் தள்ளப்படுவது வேதனையளிக்கிறது என்கிறார் இந்தப் பள்ளியின் முன்னாள் மாணவர் ஒருவர்.

 இந்தப் பள்ளியின் நிலை குறித்து உயர் அதிகாரிகள் சிலரைத் தொடர்பு கொண்டு கேட்ட போது, தங்களால் தற்போது எதுவும் கூற முடியாது என நழுவிக் கொண்டனர்.

 பொன்மலை ரயில்வே பணிமனை நாளுக்கு நாள் வளர்ச்சி அடைந்து வரும் நிலையில், அந்த நிர்வாகத்துக்கு உள்பட்ட தமிழ் வழிக் கல்விப் பள்ளி மீதும் கவனம் செலுத்தி மாணவர் சேர்க்கையை அதிகப்படுத்த வேண்டும் என்கின்றனர் முன்னாள் மாணவர்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.