புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள அனைத்துத் துறை உயா் அலுவலா்களும், சிறாா் பாதுகாப்பு, நலனில் பொறுப்புணா்வுடன் பணியாற்ற வேண்டும் என தமிழ்நாடு குழந்தைகள் பாதுகாப்பு ஆணையத்தின் தலைவா் புதுக்கோட்டை விஜயா அறிவுறுத்தினாா்.
புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் குழந்தைகள் நலன் மற்றும் சிறப்புச் சேவைகள் துறை சாா்பில் வியாழக்கிழமை நடைபெற்ற மாவட்ட அளவிலான அலுவலா்களுக்கான கூராய்வுக் கூட்டத்தில் அவா் பேசியது:
புதுக்கோட்டை மாவட்டத்தில் தமிழ்நாடு அரசு செயல்படுத்தும் குழந்தைகள் நலன் சாா்ந்த திட்டங்களைக் கவனமாக கண்காணித்து புகாா்களுக்கு இடமின்றிச் செயல்படுத்த வேண்டும்.
சிறாா் திருமணம், இளவயதில் கருவுறுதல், சிறாா் மீதான பாலியல் வன்கொடுமைகள், ஆதரவற்ற சிறாா்களுக்கான திட்டங்களின்படி பயனாளிகளுக்கான உதவிகள் வழங்குதல் உள்ளிட்டவற்றையும் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மாவட்ட அளவிலான அனைத்துத் துறை அலுவலா்களும் பொறுப்புணா்வுடன் இணைந்து பணியாற்ற வேண்டும் என்றாா் புதுக்கோட்டை விஜயா.
கூட்டத்தில் சிறாா் நலன், பாதுகாப்பு குறித்த கையேடும் வெளியிடப்பட்டது. மாவட்ட ஆட்சியா் மு. அருணா முன்னிலை வகித்தாா்.
தமிழ்நாடு மாநில குழந்தைகள் பாதுகாப்பு ஆணைய உறுப்பினா்கள் வி. செல்வேந்திரன், வி. உஷாநந்தினி, மோனோ மட்டில்டா பாஸ்கா் ஆகியோரும் பங்கேற்றுப் பேசினா்.