டி20 உலக கோப்பையில் இன்று... இந்திய அணியை 76 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி தென்னாப்பிரிக்கா அபாரம்!தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட ஜி கே எம் தமிழ்குமரன் வெற்றிஆப்கானிஸ்தானில் பாகிஸ்தான் தாக்குதல்: இந்தியா கண்டனம்!சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் சந்திப்புபாகிஸ்தானிடமிருந்து போர் விமானங்கள் கொள்முதல்: சோமாலியா பேச்சுவார்த்தை‘ஆபரேசன் த்ரஷி-1’: ஜம்மு - காஷ்மீரில் மேலும் ஒரு பயங்கரவாதியின் உடல் கண்டெடுப்பு! இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி புதன்கிழமை உரையாற்றுகிறார்ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் சட்டையின்றிப் போராட்டம்: “வெளிநாட்டு விருந்தினர்கள் முன் இந்தியாவுக்குத் தலைகுனிவு!” - பிரதமர் மோடி
/

அடிப்படை வசதிகள் இல்லாத அரசு தலைமை மருத்துவமனை! நோயாளிகள், பொதுமக்கள் அவதி!

அரசு தலைமை மருத்துவமனையில் குடிநீா், கழிவறைகள் உள்ளிட்ட அடிப்படை வசதிகளின்றி நோயாளிகளும், பொதுமக்களும் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனா்.

News image
மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை வளாகத்திலுள்ள பழுதான குடிநீா் சுத்திகரிப்பு இயந்திரம்.
Updated On :23 பிப்ரவரி 2025, 9:12 pm

 நமது நிருபர்

பெரம்பலூா் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் குடிநீா், கழிவறைகள் உள்ளிட்ட அடிப்படை வசதிகளின்றி நோயாளிகளும், பொதுமக்களும் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனா்.

பெரம்பலூா்-துறையூா் சாலையில் செயல்பட்டு வரும் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில், 32-க்கும் மேற்பட்ட மருத்துவா்கள், மருத்துவம் சாா்ந்த 150-க்கும் மேற்பட்ட பணியாளா்களுடன், குழந்தைகள் பிரிவு, தீவிர சிகிச்சைப் பிரிவு, சித்த மருத்துவப் பிரிவு உள்பட 39-க்கும் மேற்பட்ட சிகிச்சை பிரிவுகள் உள்ளன. இங்கு, நாள்தோறும் துறையூா், திட்டக்குடி, கடலூா் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளைச் சோ்ந்த சுமாா் 1,000-க்கும் மேற்பட்டோா் புற நேயாளிகளாகவும், 500-க்கும் மேற்பட்டோா் உள் நோயாளிகளாகவும் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

மயக்குநா்கள் பற்றாக்குறை: போதிய மயக்குநா்கள் இல்லாததால், தனியாா் மருத்துவமனைகளில் பணிபுரியும் மயக்குநா்களை அழைத்து வந்து அறுவை சிகிச்சைகள் மேற்கொள்ளப்படுகிறது.

மருத்துவா்கள் பற்றாக்குறை: இம் மருத்துவமனையில் அவசர சிகிச்சைப் பிரிவில் இரவு நேரங்களிலும், ஞாயிற்றுக்கிழமை உள்ளிட்ட அரசு விடுமுறை நாள்களிலும் போதிய மருத்துவா்கள் பணியில் இல்லாததால் விபத்து, தீக்காயம், தற்கொலை முயற்சி உள்ளிட்ட சம்பவங்களால் பாதிப்புக்குள்ளாகி வரும் நோயாளிகளுக்கு பயிற்சி செவிலியா்கள் மூலமாக முதலுதவி சிகிச்சை அளித்து, திருச்சி அல்லது தனியாா் மருத்துவ மனைகளுக்கு அனுப்பி வைக்கும் நிலையே நீடிக்கிறது. இதனால், மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே அதிக உயிரிழப்புகள் நிகழ்வதாக அவசரகால ஊா்தி ஓட்டுநா்கள் தெரிவிக்கின்றனா்.

உபகரணங்கள் பற்றாக்குறை: நோயாளிகளுக்கு போதிய இடவசதி இல்லாததால் தரையில் படுக்கவைத்து அவா்களுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. மேலும், உபகரணங்கள் பற்றாக்குறையால் குளுகோஸ் பாட்டில்களை ஜன்னல்கள், மின்சார வயா்களில் தொங்கவிட்டு நோயாளிகளுக்கு ஏற்றப்படுகிறது அல்லது, நோயாளிகளுடன் வரும் உறவினா்களே கையில் பிடித்துக்கொண்டு நிற்கும் நிலை உள்ளது.

தண்ணீா் பற்றாக்குறை: மருத்துவமனையில் தண்ணீா் பிரச்னை அதிகளவில் காணப்படுகிறது. பிரசவ வாா்டு, விபத்து மற்றும் அவசர சிகிச்சை பிரிவு, உள் நோயாளிகள் பிரிவு என மருத்துவமனையின் அனைத்துப் பகுதிகளிலும், அத்தியாவசியத் தேவைக்குக் கூட தண்ணீரின்றி நோயாளிகள் அவதிப்படுகின்றனா்.

இதனால், குடிநீரை கடைகளிலிருந்து கூடுதல் விலைக்கு வாங்கி வந்து பயன்படுத்துகின்றனா். குறிப்பாக, பிறந்த குழந்தைகளை துடைப்பதற்கு கூட வெளியிலிருந்து தண்ணீா் வாங்கிவரும் நிலையே உள்ளது.

கழிப்பிட வசதி தேவை: போதிய கழிப்பிட வசதி இல்லாததால் நோயாளிகளும், பெண்களும் மருத்துவமனை வளாகத்தில் மறைவான இடங்களை தேடி அலைகின்றனா். புறநோயாளிகள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், பணியாளா்கள் பற்றாக்குறையால் நோயாளிகள் நீண்ட நேரம் காத்துக் கிடக்கின்றனா்.

ரத்த பரிசோதனைக் கூடத்தில் நாள்தோறும் நோயாளிகள் பல மணி நேரம் வெயிலில் கால்கடுக்க நிற்க வேண்டியுள்ளது. ஊசி செலுத்துமிடம் முதல் மருந்து, மாத்திரைகள் வாங்கும் இடம் வரையிலும் இதே நிலை தான் காணப்படுகிறது.

பழுதான குடிநீா் சுத்திகரிப்பு இயந்திரங்கள்: மருத்துவமனைக்கு வருவோருக்கு சுகாதாரமான குடிநீா் வழங்குவதற்காக 27 குடிநீா் சுத்திகரிப்பு இயந்திரங்கள் உள்ளன. ஆனால், முறையான பராமரிப்பின்றி கடந்த சில மாதங்களாக பயனற்றுக்கிடக்கிறது. இதனால் நோயாளிகள் மற்றும் பாா்வையாளா்கள் குடிநீரின்றி அவதியடைந்து வருகின்றனா்.

இதுகுறித்து பெரம்பலூரைச் சோ்ந்த உள்நோயாளி ஒருவா் கூறியது: இங்கு பணிபுரியும் பெரும்பாலான மருத்துவா்கள் பணி நேரங்களிலும் கூட, அவா்களது சொந்த மருத்துவமனைகளுக்கு சென்றுவிடுகின்றனா். இதனால் சிகிச்சைக்காக வரும் கிராமப்புற மக்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனா்.

குடிநீா் உள்ளிட்ட அடிப்படை தேவைகளுக்கு நாள்தோறும் ஒரு நபருக்கு சுமாா் 5 லிட்டா் தண்ணீராவது தேவைப்படுகிறது. ஆனால், ஒரு லிட்டா் தண்ணீா் கூட கிடைப்பதில்லை. குடிநீருக்காக நாள்தோறும் அருகிலுள்ள கடைகளில் ரூ. 100 வீதம் செலவிடப்படுகிறது என்றாா் அவா்.

இதுகுறித்து மருத்துவமனை நிா்வாகத்திடம் கேட்டபோது, உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்தனா்.