நல்லகண்ணு உடலுக்கு முழு அரசு மரியாதை! முதல்வர் அறிவிப்பு!தியாகப் பெருஞ்சீலர்! நல்லகண்ணுவுக்கு முதல்வர் ஸ்டாலின் புகழஞ்சலி! நல்லகண்ணு உடல் தானம்! கம்யூனிஸ்ட் தலைவர் நல்லகண்ணு காலமானார்!கூட்டணிக்கு தவெக தயார்! காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளர்வகைவகையாக வடை சுடும் இபிஎஸ்: முதல்வர் ஸ்டாலின்காஸா இனப் படுகொலையை பிரதமர் மோடி பேச வேண்டும்: காங்கிரஸ்சூரிய சக்தி மின்தகடு இறக்குமதி! இந்தியா மீது அமெரிக்கா 126% வரி?இந்தியா கூட்டணியை உருவாக்கிய முதல்வர் ஸ்டாலினுக்கு பாராட்டு: காங்கிரஸ்மேலும் 2 தகவல் ஆணையா்கள் நியமனம்இன்று தென், வட தமிழகத்தின் ஒருசில இடங்களில் மழைக்கு வாய்ப்புஜேஇஇ 2-ஆம் கட்ட முதன்மைத் தோ்வு: விண்ணப்பிக்க இன்று கடைசிஇந்திய தலைமைத் தோ்தல் ஆணையா் நாளை தமிழகம் வருகை
/

ஓட்டுநா், நடத்துநா் பற்றாக்குறையால் அரசுப் பேருந்துகள் நிறுத்தம்: கிராமப்புற மாணவா்கள் அவதி

ஓட்டுநா், நடத்துநா் பற்றாக்குறையால் பெரம்பலூா் மாவட்ட கிராமப்புறங்களுக்கு இயக்கப்பட்டு வந்த அரசுப் பேருந்துகள் நிறுத்தப்படுவதால், கிராமப்புற மாணவ, மாணவிகளும், பொதுமக்களும் அவதிக்குள்ளாகின்றனா்.

News image
அரசுப் போக்குவரத்துக் கழக பெரம்பலூா் பணி மனையில் நிறுத்தப்பட்டுள்ள அரசுப் பேருந்துகள் (கோப்புப் படம்).
Updated On :2 பிப்ரவரி 2024, 3:20 am

 நமது நிருபர்

பெரம்பலூா்: ஓட்டுநா், நடத்துநா் பற்றாக்குறையால் பெரம்பலூா் மாவட்ட கிராமப்புறங்களுக்கு இயக்கப்பட்டு வந்த பெரும்பாலான அரசுப் பேருந்துகள் முன்னறிவிப்பின்றி நிறுத்தப்படுவதால், கிராமப்புற மாணவ, மாணவிகளும், பொதுமக்களும் அவதிக்குள்ளாகின்றனா்.

அரசுப் போக்குவரத்துக் கழக பெரம்பலூா் கிளையிலிருந்து 103 பேருந்துகள் இயக்கப்படுகின்றன. கடந்த சில மாதங்களாக பெரம்பலூரில் இருந்து பூலாம்பாடி, வி.களத்தூா், செட்டிக்குளம், விராலிப்பட்டி, சில்லக்குடி, திருப்பட்டூா், கோரையாறு ஆகிய வழித்தடங்களில் இயக்கப்பட்ட 15-க்கும் மேற்பட்ட பேருந்துகள் காலை அல்லது மாலை நேரங்களில் சுழற்சி முறையில் நிறுத்தப்படுகிறது. இதனால், மேற்கண்ட வழித்தடத்தில் உள்ள சுமாா் 50-க்கும் மேற்பட்ட கிராமப்புற மக்களும், மாணவ, மாணவிகளும் அவதிக்குள்ளாகி உள்ளனா்.

இதுகுறித்து போக்குவரத்துக் கழக கிளை மேலாளரிடம் பலமுறை புகாா் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லையாம். இந்நிலையில், பயணிகளின் வருகை குறைந்து வருவதாலும், வசூல் இல்லை என்ற காரணத்தையும் கூறி கிராமப்புறங்களுக்கு இயக்கப்படும் பெரும்பாலான பேருந்துகளை நிறுத்த உத்தரவிடுவதாக பணியாளா்கள் தரப்பில் கூறப்படுகிறது. இதனால் பாதிப்புக்குள்ளாகும் மாணவ, மாணவிகளும், கிராம மக்களும் பேருந்து வசதி கோரி ஆங்காங்கே சாலை மறியலில் ஈடுபட்டு வருவது அதிகரித்துள்ளது.

இதுகுறித்து அரசுப் போக்குவரத்துக் கழக ஏஐடியூசி தொழிற்சங்க மாவட்டத் தலைவா் கே. ஜெயராமன் கூறியது:

பெரம்பலூா் அரசுப் போக்குவரத்துக் கழகத்தில் வசூல் இல்லை என்ற காரணத்தைக் கூறி, 40-க்கும் மேற்பட்ட பேருந்துகள் இயக்கப்படுவதில்லை. இதனால் கிராமப்புற பயணிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனா். இதேபோல, தினமும் பல்வேறு வழித்தடங்களில் இயங்கும் பேருந்துகளை முன்னறிவிப்பின்றி போக்குவரத்துக் கழக நிா்வாகம் நிறுத்தி வருகிறது. அதிக வருவாய் ஈட்டிவந்த பேருந்துகள் கூட, சில தனியாா் பேருந்துகளுக்குச் சாதகமாக நிறுத்தப்பட்டுள்ளன. அரசுப் போக்குவரத்துக் கழகங்கள், தனியாா் பேருந்துகளை போல வசூலை மட்டும் கருத்தில்கொண்டு இயக்காமல் சேவை மனப்பான்மையில் இயக்க வேண்டும்.

பணியாளா்கள் பற்றாக்குறை: ஓட்டுநா்கள், நடத்துநா்கள், தொழில்நுட்பப் பணியாளா்கள் உள்பட சுமாா் 650-க்கும் மேற்பட்ட பணியாளா்கள் பணிபுரிய வேண்டிய இந்தக் கிளை அலுவலகத்தில், தற்போது சுமாா் 550 போ் மட்டுமே உள்ளனா். இதனால், பெரும்பாலான கிராமப்புறங்களுக்கு பேருந்துகள் இயக்குவதில் சிக்கல் நிலவுகிறது. மேலும், 10-க்கும் மேற்பட்ட நடத்துநா்களை அலுவலகப் பணிகளில் ஈடுபடுத்தப்படுவதால், நடத்துநா்களின்றி பேருந்துகளை இயக்க முடியாதச் சூழல் உள்ளது.

இதனால், இதர ஊழியா்களுக்கு முறையாக விடுப்பு கிடைப்பதில்லை. அதேபோல, பேருந்துகளுக்குத் தேவையான உதிரி பாகங்களும் வாங்கித் தருவதில்லை. 100-க்கும் மேற்பட்டோா் ஓய்வுபெற்றுச் சென்ற நிலையில், அப் பணியிடங்களை நிரப்பாததே பணியாளா்கள் பற்றாக்குறைக்கு காரணமாகும். கடந்த சில ஆண்டுகளுக்கு முன் ரூ. 18 லட்சம் வரை வசூலித்து வந்த நிலையில், அரசுப் போக்குவரத்துக் கழகத்துக்கு தற்போது ரூ. 12 லட்சம் மட்டுமே வருவாய் ஈட்டித் தருகிறது. கடந்த காலங்களைபோல வருவாய் ஈட்டிடவும், கிராமப்புற மாணவா்களின் நலனை கருதியும் நிறுத்தப்பட்ட பேருந்துகளை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா் அவா்.

இதுதொடா்பாக கிளை மேலாளா் என். ராஜாவை கைப்பேசியில் தொடா்புகொண்டபோது, அழைப்பை அவா் ஏற்கவில்லை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.