பிப். 23, 24-ல் மழைக்கு வாய்ப்பு! நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம் ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்சட்டப்பேரவைத் தேர்தல் : பிப். 26-ல் சிபிஎம் உடன் திமுக பேச்சுவார்த்தை!ஆப்கனில் பாகிஸ்தான் விமானப்படை தாக்குதல்! இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீதான வரியை 15% ஆக உயர்த்தினார் டிரம்ப்!
/

அடிப்படை வசதிகளின்றி பரிதவிக்கும் அங்கன்வாடி மையங்கள்!

திருச்சி, ஜூன் 18: கழிப்பறையின்றி, குடிநீர் வசதியின்றி, மேல் - கீழ்த் தளங்கள் சிதைந்தும் பரிதாபமாகக் காட்சி தருகின்றன, திருச்சியிலுள்ள அங்கன்வாடி மையங்கள்.   முன்னாள் முதல்வரும், அதிமுகவின் நிறுவனருமா

News image
Updated On :28 டிசம்பர் 2023, 5:53 pm

சா. ஜெயப்பிரகாஷ்

திருச்சி, ஜூன் 18: கழிப்பறையின்றி, குடிநீர் வசதியின்றி, மேல் - கீழ்த் தளங்கள் சிதைந்தும் பரிதாபமாகக் காட்சி தருகின்றன, திருச்சியிலுள்ள அங்கன்வாடி மையங்கள்.

  முன்னாள் முதல்வரும், அதிமுகவின் நிறுவனருமான எம்ஜிஆர் காலத்தில் கொண்டு வரப்பட்டதுதான் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்டம் (அங்கன்வாடி மையங்கள்). அப்போது இது வெறும் பால்வாடிகள் என்றழைக்கப்படும் சத்துணவு மையங்களாகத்தான் தொடங்கப்பட்டன.

  தொடர்ச்சியாக இங்குள்ள பணியாளர்களைக் கொண்டு தனியார் பள்ளிகளில் சொல்லித் தரும் (பிரி கேஜி'க்கு இணையாக) பாடங்களைச் சொல்லித் தரவும் அரசாணைகள் பிறப்பிக்கப்பட்டன.

  அதோடு மட்டுமன்றி, குறிப்பிட்ட அங்கன்வாடி மையங்கள் உள்ள பகுதியில் வசிக்கும் கர்ப்பிணித் தாய்மார்கள், பாலூட்டும் தாய்மார்கள், வளரிளம் பெண்கள் போன்ற எத்தனை பேர் எனக் கணக்கெடுத்து, அவர்களுக்கு தேவையான சத்துமாவு உள்ளிட்ட பொருள்களை வழங்கும் பணியும் அளிக்கப்பட்டது.

  இவ்வாறாக வளர்ச்சி பெற்ற ஓர் அங்கன்வாடி மையத்தில் ஒரு சமையலர் உள்ளிட்ட மூவர் பணியில் இருக்க வேண்டும். ஆனால், மூன்று பேர் பணியில் இருக்கும் இடங்கள் அரிதாகிவிட்டன.

  திருச்சி மாநகரிலுள்ள அங்கன்வாடி மையங்கள் அடிப்படை வசதிகளின்றி, குழந்தைகளின் ஆரோக்கிய வளர்ச்சியைக் கேள்விக்குள்ளாக்கும் நிலையில் காட்சிதருகின்றன.

  எடுத்துக்காட்டுக்கு சில அங்கன்வாடி மையங்களின் நிலை:

  திருச்சி 19-வது வார்டு பகுதியைச் சேர்ந்த பாலக்கரை நெல்பேட்டையிலுள்ள அங்கன்வாடி மையத்தில் 15 குழந்தைகள் பதிவு செய்யப்பட்டு வந்து சென்று கொண்டிருக்கிறார்கள். இந்த வளாகத்திலுள்ள மாநகராட்சி தொடக்கப் பள்ளிக்கும் சேர்த்து - இருந்த கழிப்பறைகள் அனைத்தும் இடிந்து - பிறகு இடித்து மூடப்பட்டுவிட்டன.

  இந்தக் குழந்தைகளுடன், சுற்றுப் பகுதியிலுள்ள குழந்தைகள் - இரவு நேரங்களில் பெரியவர்கள் (!) எல்லாம் இந்தச் சுவரை ஒட்டித்தான் இயற்கை உபாதைகளைக் கழிக்கின்றனர். இதனாலேயே அங்கன்வாடி மையத்தில் அப்படியொரு, மூக்கைத் துளைக்கும் "வாடை'.

  ஒரு பணியாளர், ஓர் உதவியாளர். குடிநீர்க் குழாய் வசதியில்லாததால் ஒருவர் வெளியே எங்காவது (!) சென்று குடிநீர் எடுத்து வர வேண்டும். நவீனமயமாக்கல் என்ற திட்டத்தின் புண்ணியத்தால் கிடைக்கப் பெற்ற சமையல் எரிவாயு அடுப்பு இருக்கிறது. குவிந்து கிடக்கும் புத்தகங்கள், ஆவணங்களைப் பாதுகாக்க எந்த ஏற்பாடும் இல்லை.

  திருச்சி 23-வது வார்டு பாலக்கரை பருப்புக்காரத் தெருவிலுள்ள அங்கன்வாடி மையத்தில் 20 குழந்தைகள் பதிவு செய்திருக்கிறார்கள். ஆனால், எல்லோரும் வீட்டிலேயே இருந்து கொள்ள வேண்டியது, முட்டையுடன் உணவு வீடுகளுக்குச் சென்று கொண்டிருக்கிறது.

  இதுதான் நல்லதும்கூட. ஏனென்றால், தரைத்தளம், மேல்தளம் எல்லாம் உடைந்து கொட்டி- குழியாகிக் கிடக்கின்றன.

கழிப்பறைக்கான ஓர் அறையும் உடைந்து மூடப்பட்டிருக்கிறது. சமையல் நடைபெறுகிறது என்பதற்கான அடையாளமே அங்கு அடுக்கிவைக்கப்பட்டிருக்கும் முட்டைகள் மட்டும்தான்.

  "இவை மட்டுமல்ல, மாநகரம் முழுவதும், ஏன் மாவட்டம் முழுவதுமே இதுதான் நிலை' என்கிறார் மனித உரிமைக்கான குடிமக்கள் இயக்கத்தின் வட்டார அமைப்பாளர் வீ. ராமதாஸ்.

  "ஏறத்தாழ அகதிகள் முகாம்களைப் போல, சிறைச்சாலைகளைப் போல அங்கன்வாடி மையங்கள் காட்சி தருகின்றன. இதுதொடர்பாக மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனுவும் அளித்திருக்கிறோம். சில மையங்கள் ஆஸ்பெஸ்டாஸ் கூரையைக் கொண்டவை.

  கல்விக்கு முதல் அறிமுகமாகத் திகழும் அங்கன்வாடி மையங்களை இந்த அரசு கவனத்தில் கொண்டு சீரமைக்க வேண்டும்.

பாதுகாப்பையும், சுகாதாரத்தையும் இந்த வயதிலிருந்தே குழந்தைகளுக்குக் கற்றுத் தரவும் நல்ல வாய்ப்பாக அங்கன்வாடி மையங்களை மாற்ற வேண்டும்.

  தனியார் மழலையர் பள்ளிகளின் மோகத்தைக் குறைக்கும் ஆயுதமாக இந்த மையங்களை மாற்றவும் முடியும் என்பதை அரசு உணர வேண்டும்' என்கிறார் ராமதாஸ்.

  இப்படி எந்தவொரு வசதியுமில்லாத ஓர் அங்கன்வாடி மையத்தில்தான் எழுதப்பட்டிருக்கிறது:

"குழந்தையின் ஆரோக்கியமே

குடும்ப ஆரோக்கியம்

குடும்ப ஆரோக்கியமே

தேசத்தின் ஆரோக்கியம்'.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.