பிப். 23, 24-ல் மழைக்கு வாய்ப்பு! நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம் ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்சட்டப்பேரவைத் தேர்தல் : பிப். 26-ல் சிபிஎம் உடன் திமுக பேச்சுவார்த்தை!ஆப்கனில் பாகிஸ்தான் விமானப்படை தாக்குதல்! இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீதான வரியை 15% ஆக உயர்த்தினார் டிரம்ப்!
/

ஓவியக் கல்வி ஆசிரியர்கள் நியமனம் எப்போது?

திருச்சி, பிப். 2: ஏறத்தாழ பத்தாண்டுகளுக்கும் மேலாக தமிழ்நாட்டிலுள்ள பள்ளிகளில் ஓவிய ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படாமல் இருக்கின்றன. இதனால், அடுத்த தலைமுறைக்கு ஓவியக் கலைப் பயிற்சி இல்லாமலே போகும் என

News image
Updated On :28 டிசம்பர் 2023, 4:21 pm

சா. ஜெயப்பிரகாஷ்

திருச்சி, பிப். 2: ஏறத்தாழ பத்தாண்டுகளுக்கும் மேலாக தமிழ்நாட்டிலுள்ள பள்ளிகளில் ஓவிய ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படாமல் இருக்கின்றன. இதனால், அடுத்த தலைமுறைக்கு ஓவியக் கலைப் பயிற்சி இல்லாமலே போகும் என்று அஞ்சப்படுகிறது.

    தமிழ்நாட்டில் மேல்நிலை, உயர்நிலைப் பள்ளிகளிலுள்ள தையல், இசை, உடல்பயிற்சி மற்றும் ஓவிய ஆசிரியர் காலிப் பணியிடங்களை நிரப்ப 2009-ல் மாநில அரசு உத்தரவிட்டது. இதன் தொடர்ச்சியாக, பள்ளிகளிலுள்ள காலிப் பணியிடங்களின் பட்டியலும், வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து காத்திருப்போரின் பட்டியலும் 2009, டிசம்பர் 14-ம் தேதி வெளியிடப்பட்டது.

    மாநில அளவில் அந்தந்த மண்டலங்களில் கடந்த 2010 மே 27, 28, 29 ஆகிய தேதிகளில் சான்றிதழ் சரிபார்ப்புப் பணி நடைபெற்றது. அதைத் தொடர்ந்து, தையல் ஆசிரியர்களாக 113 பேருக்கும், இசை ஆசிரியர்களாக 89 பேருக்கும், உடல்கல்வி ஆசிரியர்களாக 665 பேருக்கும் பணி நியமனம் வழங்கப்பட்டது.

    தொடர்ந்து, அடுத்தடுத்து 114 பேருக்கும், 42 பேருக்கும் உடல்கல்வி ஆசிரியர் பணியிடங்கள் வழங்கப்பட்டன. இந்த புதிய ஆசிரியர்கள் அனைவரும் கடந்த நவம்பர் 5-ம் தேதி பணியில் சேர்ந்துவிட்டனர். ஆனால், ஓவிய ஆசிரியர் பணியிடங்கள் மட்டும் இன்னமும் நிரப்பப்படவில்லை.

    2009, டிசம்பரில் அறிவிக்கப்பட்டபடி ஓவிய ஆசிரியர் காலிப் பணியிடங்கள் 231. அதன்பிறகு மேலும் 68 பணியிடங்கள் உருவாகிவிட்டதாக எண்ணிக்கையில் சேர்த்துக் கொள்ளப்பட்டது. இப்போதைக்கு மொத்த காலிப் பணியிடங்கள் 350-ஐத் தாண்டலாம்.

     இந்த நிலை தொடர்ந்தால், ஒரு தலைமுறை மாணவர்கள் "ஓவியம் என்பதும் பாடமா?' எனக் கேட்கும் நிலை வரலாம்.

     என்ன ஆனது காலிப் பணியிடம் நிரப்பும் பணி? தமிழ்நாடு வேலையில்லா ஓவிய ஆசிரியர்கள் நலச் சங்கத்தின் திருச்சி மாவட்டப் பொருளாளர் எஸ். ஜான்சன் விளக்குகிறார்:

     "2009-ல் 231 ஓவியர் ஆசிரியர் பணியிடங்களுக்காக வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு மூப்பிலுள்ளவர்களைக் கணக்கிட்டு 1150 பேரின் பட்டியல் இறுதி செய்யப்பட்டது. இவர்கள் அனைவரும் சான்றிதழ் சரிபார்ப்புக்காக அழைக்கப்பட்டனர்.

     136 பேரைத் தவிர மற்ற அனைவரும் சான்றிதழ் சரிபார்ப்பில் பங்கேற்று வேலை வருமெனக் காத்திருந்தோம். இதற்கிடையே எஸ்எஸ்எல்சி தேர்ச்சி பெற்ற அனைவரும் இந்தப் பணிக்கு பொருந்துவார்கள் என்ற பொதுவான விதி, 2007-ல் ஓர் அரசாணை மூலம் மாறியது. அதாவது, பிளஸ் 2 முடித்தவர்களுக்கு மட்டுமே ஓவிய ஆசிரியர் பணி வழங்க முடியும் என்று மாறியது.

     எஸ்எஸ்எல்சி முடித்தவர்களை பரிந்துரைப் பட்டியலில் சேர்த்தது எப்படி? எனக் கேட்டு 2010 ஜூலையில் ஒருவர் நீதிமன்றத்துக்குச் சென்றார். புதிய விதிமுறைகளின்படி தேர்வு செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்பிறகு பரிந்துரைப் பட்டியலில் இருந்து எஸ்எஸ்எல்சி முடித்தவர்களை நீக்க வேண்டும் எனக் கோரி மீண்டும் அவரே நீதிமன்றத்துக்குச் சென்றார்.    வேலைவாய்ப்பு அலுவலக விதிப்படி பெயர்ப் பட்டியல் பரிந்துரை செய்யப்பட்டிருப்பதால் மனுவைத் தள்ளுபடி செய்தார் நீதிபதி. இதுதான் நடந்தது. முதல்வர் தலையிட்டு ஏற்கெனவே பரிந்துரை செய்யப்பட்ட பட்டியலில் இருந்தே ஓவிய ஆசிரியர்களைத் தேர்வு செய்ய உத்தரவிட வேண்டும்.

     படித்துவிட்டு ஏறத்தாழ 25 ஆண்டுகள் நிறைவடையப் போகிறவர்களும் இந்தப் பணிக்காகக் காத்திருக்கிறோம் என்பதை அரசு கருணையுடன் கவனத்தில் கொள்ள வேண்டும்' என்றார் ஜான்சன்.

    நெசவு ஆசிரியர் பணியிடம் ஒழிக்கப்பட்டதைப் போல, ஓவிய ஆசிரியர் பணியிடங்களும் ஒழிக்கப்படும் அபாயம் இருப்பதாக கவலை தெரிவிக்கிறார் தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்ற மாநிலச் செயலர் திருவண்ணாமலை பெ. அன்பு.

     இதுதொடர்பாக அவர் மேலும் கூறியது:

     "பள்ளிகளில் தொழில் கல்வி ஆசிரியர்களின் பட்டியலில் இருந்த நெசவு ஆசிரியர் பணியிடம் ஒழிக்கப்பட்டுவிட்டது.

இப்போது 10 ஆண்டுகளுக்கும் மேலாக ஓவிய ஆசிரியர்களை நியமிப்பதில்லை.

     மனிதகுல தோற்றம் குறித்து நாசா வெளியிட்ட ஆய்வு ஒலிப்பேழையின் தொடக்கத்தில் வருவது தமிழ்ப் பெண்கள் கோலமிடும் காட்சிதான்.

தமிழ்ப் பண்பாட்டின் கூறு மட்டுமல்ல, மனிதகுல வரலாற்றின் முக்கியமான கூறு ஓவியம். பண்பாட்டு ஆய்வுகளுக்கு பல சான்றுகளைக் கொடுத்து வருபவை ஓவியங்கள்தான். எனவே, இந்தத் துறையை ஏனோதானோவென்று கவனித்து வருவது கவலை தருகிறது. பெரிய அளவில் ஆய்வுகள் நடைபெற வேண்டும், கல்லூரிகளை உருவாக்க வேண்டும் என்ற கோரிக்கைகளுக்கு முன்னதாக செய்ய வேண்டிய அவசியமான பணி தமிழ்நாட்டிலுள்ள அனைத்துப் பள்ளிகளிலும் ஓவிய ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பதுதான்' என்றார் அன்பு.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.