வாழ்வில் மிளிராத நாட்டுப்புறக் கலைஞர்கள்
திருச்சி, ஆக. 5: திரையரங்குகளே "காத்துவாங்கும்' போது பெரிய நகரங்களில் தெருக்கூத்து நடப்பதென்பது அரிதாகிவிட்டது. இந்தச் சூழலில்தான் ஏறத்தாழ 25 ஆண்டுகளுக்குப் பிறகு, திருச்சி மாநகரின் மைய


திருச்சி, ஆக. 5: திரையரங்குகளே "காத்துவாங்கும்' போது பெரிய நகரங்களில் தெருக்கூத்து நடப்பதென்பது அரிதாகிவிட்டது. இந்தச் சூழலில்தான் ஏறத்தாழ 25 ஆண்டுகளுக்குப் பிறகு, திருச்சி மாநகரின் மையப் பகுதியில் "பொன்னர்- சங்கர்' வரலாற்று நாடகம்.
திருச்சி தென்னூர், மல்லிகைபுரத்திலுள்ள ஸ்ரீ பாலக்காட்டு மாரியம்மன் கோயில் திருவிழாவில் கடந்த 11 நாள்களாக நடைபெற்று வருகிறது இந்தக் கூத்து.
தெருக்கூத்து போன்ற கலைவடிவங்கள் வழக்கொழிந்து போய்விட்டதாகக் கூறப்பட்டாலும், 12 நாள்கள் நடத்தப்படும் இதற்கும் கணிசமான கூட்டம் இருக்கத்தான் செய்கிறது.
திருச்சி, கரூர் மாவட்டப் பகுதிகளுக்குள் கரிகால் சோழனின் ஆட்சிக் காலத்தில் நிலவியதாகக் கருதப்படும் "பொன்னர்- சங்கர்' கதை, ஆன்மிகப் பின்புலத்தில் சுட்டப்பட்டு மிகுந்த வரவேற்பைப் பெற்றது.
காளத்தா கவுண்டர் மகன் கோலத்தா கவுண்டர். இவரது மகன் குன்னுடையா கவுண்டர். குன்னுடையானின் மனைவி தாமரை. இவர்களின் வாரிசுகள்தான் பொன்னர், சங்கர், அருக்கானித் தங்காள்.
கொங்கு வேளாளர்களுக்கும், வேட்டுவர்களுக்கும் நடைபெற்ற போராக இந்தக் கதை இருந்தாலும்கூட, கதையின் பிரதான களமான மணப்பாறைக்கு அருகேயுள்ள "வீரப்பூர் மலை' ஏறக்குறைய அனைத்துச் சாதியினரின் குடிப்பாட்டுக் கோயிலாகவே விளங்குகிறது.
இந்தக் கதையை ஓலைச்சுவடியிலிருந்து படித்த மூத்தவர்களின் வாயிலாக கேட்டுப் பெற்ற பயிற்சியே இப்போதுள்ள கலைஞர்களிடம் கலையம்சத்துடன் மிளிர்கிறது. கதையைப் பாடலாகவும், வசனங்களாகவும் சொல்லும் விதம் மெய்சிலிர்க்க வைக்கிறது. திருச்சி பேட்டைவாய்த்தலை அருகேயுள்ள கீழ ஆரியம்பட்டியைச் சேர்ந்த எம். தங்கராஜ்தான் (60) ஸ்ரீ பெரியக்காண்டியம்மன் நாடகக் கலைக் குழுவின் தலைவர். இந்தக் கூத்தில் குன்னுடையானின் மனைவி தாமரையின் பாத்திரத்தை ஏற்றிருப்பவர்.
ஒப்பனைக்குப் பிறகு தாமரையாகவே மாறியிருக்கிறார். அழும் காட்சிகளில் அழுகிறார்; வருந்தும் காட்சிகளில் வருந்துகிறார் (திரைப்பட நடிகர்களைப் போல, "கிளிசரின்' போடுவதெல்லாம் கிடையாது).
"சோகமான காட்சிகளின்போது ஒப்பனை செய்துகொண்டு, தெய்வங்களை வணங்கி நின்றால், கண்களில் தானே தண்ணீர் வரும்' என்கிறார் தங்கராஜ்.
வள்ளித் திருமணம், பவளக்கொடி, மதுரைவீரன், அரிச்சந்திரா போன்ற எத்தனையோ நாடகங்கள் இருந்தாலும், பொன்னர்- சங்கருக்குத்தான் அதிக வரவேற்பு இருக்கிறதாம்.
அதேபோல, பொன்னர்- சங்கரில் பெண்கள் நடிப்பதில்லை. சில பத்தாண்டுகளுக்கு முன்பு அவ்வாறு நடித்த இரு பெண்கள் நாடகம் நிறைவுபெறுவதற்குள் இறந்துவிட்டனராம். எனவே, பெண் பாத்திரங்களையும் ஆண்களே ஏற்கின்றனர்.
முன்னோர்களின் வாழ்க்கையை மக்களின் கண் முன்னே கொண்டு வந்து நிறுத்தும் இவர்களின் வாழ்க்கை ஒன்றும் சொல்லிக் கொள்ளும்படியாக இல்லை. பெரும்பாலானோர் மேல்நிலைப் பள்ளிக் கல்வியைக்கூட தொட்டதில்லை; அவர்களின் குழந்தைகளும் அப்படியே.
தங்கராஜின் மகன் பிச்சைமுத்து 9-ம் வகுப்பு முடித்திருக்கிறார். குழுவை ஒருங்கிணைக்கும் இவர், இடையிடையே பொன்னர், பப்பூன் பாத்திரங்களையும் ஏற்பாராம்.
"30, 40 ஆண்டுகளுக்கு முன்பெல்லாம் தினமும் ஒரு பகுதியென 210 நாள்கள்கூட பொன்னர்- சங்கர் நடந்ததுண்டு. இப்போதெல்லாம் 12 நாள்களில் முடித்துவிடுகிறோம். ஒரு நாளில் கேட்போருக்கும் நடத்திக் கொடுக்கிறோம்' என்கிறார் பிச்சைமுத்து.
நிகழ்ச்சி அமைப்பாளர்களின் வசதிக்குத் தக்கவாறு கட்டணத்தை நிர்ணயம் செய்துகொள்ளும் இவர்கள், குறைந்த தொகை கிடைக்கும் இடங்களில் பார்வையாளர்களிடம் நிதி வசூல் செய்துகொள்கிறார்கள். என்றாலும், ஒப்பீட்டளவில் மோசமான கூலிதான். இதன் பின்னணியில் வாழ்விலும் பெரிய வசதியில்லை. காலத்தைக் கடத்துகிறார்கள் என்பதே மிகச் சரியாக இருக்கும். இதனால், தங்களின் வாரிசுகள் எங்காவது தினக் கூலிக்குச் சென்றாலும் பரவாயில்லை, நாடகக் கலைஞனாக வரக் கூடாது என்ற அச்சமும் இவர்களிடம் இருக்கிறது.
மாநகரில் பல ஆண்டுகளுக்குப் பிறகு...
தென்னூர் உக்கிரமாகாளியம்மன், புத்தூர் குழுமாயி அம்மன், உறையூர் குழுந்தலாயி, செல்லாண்டியம்மன் போன்ற பழைமையான கோயில் திருவிழாக்களின்போது இதுபோன்ற நாடகங்கள் பல ஆண்டுகளுக்கு முன்பு நடைபெற்றன.
குறிப்பாக, இந்த "பொன்னர் சங்கர்' நாடகம், சரியாக 25 ஆண்டுகளுக்கு முன்பு தென்னூர் மந்தையில் நடைபெற்றதாகக் கூறுகிறார் மல்லிகைபுரத்தைச் சேர்ந்த குன்னுடையான் (60).
அப்போது போலீஸ் வாகனம் ஒன்று மோதி இரு பெண்கள் இறந்த சம்பவத்துக்குப் பிறகு, இப்போதுதான் இங்கு நடைபெறுகிறது என்றும் அவர் குறிப்பிடுகிறார்.
பொன்னர்- சங்கர் கதையின் மீது மக்கள் கொண்டுள்ள ஆர்வம்தான் இந்த நாடகத்தை மீண்டும் நடத்த வேண்டும் என்று எங்களைத் தூண்டியது என்கிறார் மல்லிகைபுரம் கிராம துணைத் தலைவர் கர்ணா.
கோயில் திருவிழாவாக இல்லாமலிருந்தால் கலைஞர்களது மெய்சிலிர்க்கச் செய்யும் காட்சிகளையும் இடம்பெறச் செய்திருப்போம் என்கிறார் அவர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...