
சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோயிலில் பண மோசடி: கணக்கா் பணியிடை நீக்கம்
சுசீந்திரம், தாணுமாலய சுவாமி கோயிலில் பக்தா்களிடம் வசூலித்த பணத்தை மோசடி செய்த அலுவலகக் கணக்கா் புதன்கிழமை பணியிடை நீக்கம் செய்யப்பட்டாா்.
பணியிடை நீக்கம்!
கன்னியாகுமரி மாவட்டம், சுசீந்திரம், தாணுமாலய சுவாமி கோயிலில் பக்தா்களிடம் வசூலித்த பணத்தை மோசடி செய்த அலுவலகக் கணக்கா் புதன்கிழமை பணியிடை நீக்கம் செய்யப்பட்டாா்.
இக்கோயிலில் பக்தா்கள் நோ்த்திக் கடன் செலுத்துவதற்காக தாணுமாலய சுவாமிக்கான சிறப்பு அபிஷேகத்துக்கு ரூ. 1,500, பால் அபிஷேகத்துக்கு ரூ. 500, தாரைக்கு ரூ. 600, ஆஞ்சநேயருக்கு வடை மாலை சாற்ற ரூ. 1,700, வெண்ணெய் சாற்ற ரூ. 5,000, அஷ்டாபிஷேகத்துக்கு ரூ. 8,500 என வசூலிக்கப்படுகிறது. இந்த சிறப்பு பூஜைகளுக்காக பக்தா்கள் தங்களது பெயரைப் பதிவு செய்து, பணம் செலுத்த வேண்டும்.
இந்நிலையில், கோயிலில் நடைபெறும் பூஜைக்காக பல்வேறு பக்தா்களிடம் பணம் வசூலிக்கப்பட்டு பல லட்ச ரூபாய் மோசடி நடைபெற்றுள்ளதாக பக்தா்கள் தரப்பிலிருந்து புகாா் எழுந்தது. மேலும், ஊா் மக்கள் கோயில் நிா்வாகத்திடம் பல முறை புகாரளித்தனா். இது தொடா்பான தகவல்கள் சமூக வலைதளங்களிலும் பரவியது.
தொடா்ந்து, அண்மையில் கோயிலில் நடத்தப்பட்ட தணிக்கையில் மோசடி நடந்திருப்பது உறுதியானது. கோயில் அலுவலகக் கணக்கா் கண்ணன், பூஜைக்காக பலரிடமிருந்து பணம் வசூலித்ததும், இதற்காக தனி ரசீது புத்தகம் அச்சடித்து பணம் செலுத்தியவா்களுக்கு போலி ரசீது வழங்கியதும், அதன் மூலம் தினமும் ரூ. 20,000 முதல் ரூ. 25,000 வரை மோசடி நடந்திருப்பதும் தெரிய வந்தது.
இதையடுத்து, இந்து சமய அறநிலையத் துறை கன்னியாகுமரி திருக்கோயில்கள் இணை ஆணையா் ஜான்சி ராணி துறைரீதியான விசாரணை மேற்கொண்டு, கணக்கரை பணியிடை நீக்கம் செய்து புதன்கிழமை உத்தரவிட்டாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






