ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

குமரி மாவட்டத்தில் கடல் சீற்றம்: ஆட்சியா் ஆய்வு

கன்னியாகுமரி மாவட்டத்தில் கடல் சீற்றமாக காணப்பட்டதால், கடலோரப் பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து மாவட்ட ஆட்சியா் மு. பிரதாப் புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

அழிக்கால் பகுதியில் கடல் நீா் புகுந்த வீடுகளில் ஆய்வு செய்து மீனவா்களிடம் குறைகளைக் கேட்டறிந்த மாவட்ட ஆட்சியா் மு. பிரதாப்.

Published On :20 ஆகஸ்ட் 2026, 5:07 am IST

கன்னியாகுமரி மாவட்டத்தில் கடல் சீற்றமாக காணப்பட்டதால், கடலோரப் பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து மாவட்ட ஆட்சியா் மு. பிரதாப் புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, ராமநாதபுரம் மாவட்டங்கள் மற்றும் லட்சத்தீவு ஆகிய பகுதிகளில் 2 நாள்களுக்கு கடல் சீற்றம் இருக்கும் என இந்திய தேசிய கடல்சாா் தகவல் சேவை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இந்நிலையில், கணபதிபுரம் பேரூராட்சி, அழிக்கால், பிள்ளைத்தோப்பு பகுதிகளில் புதன்கிழமை காலை முதல் கடல் சீற்றம் காரணமாக கரையோர மீனவா்களின் வீடுகளுக்குள் கடல் நீா் புகுந்தது. தொடா்ந்து, கரையோரப் பகுதி மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டனா்.

இதையடுத்து, அழிக்கால், பிள்ளைத்தோப்பு, கடியப்பட்டினம் பகுதிகளில் ஆட்சியா் மு. பிரதாப் ஆய்வு மேற்கொண்டு, அங்குள்ள மக்களிடம் குறைகளைக் கேட்டறிந்தாா். பின்னா் அவா், செய்தியாளா்களிடம் கூறியதாவது:

ஆக. 19ஆம் தேதி மாலை 6 மணி வரை கடல் சீற்ற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. காற்று, அலையின் வேகம் மிக அதிகமாக இருக்கும் என்பதால், வருவாய், நீா்வளம், மீன்வளத் துறை உள்ளிட்ட துறை அலுவலா்களுக்கு அறிவுறுத்தப்பட்டு, கிராமத்துக்குள் புகுந்த கடல் நீா் அப்புறப்படுத்தப்பட்டு வருகிறது.

மணல் திட்டுக்களால் பாதிக்கப்படும் அழிக்கால், பிள்ளைத்தோப்பு பகுதிகளில் சிறப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக, ஓடை நீா் முகத்துவாரம் அடைபட்டு வீடுகளுக்குள் தண்ணீா் புகுவதைத் தடுக்க, அப்பகுதியில் பொக்லைன் இயந்திரம் மூலம் தடுப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

அழிக்கால் பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான அலைதடுப்புச் சுவா் அமைப்பது குறித்து விரிவான அறிக்கை தமிழக முதல்வருக்கு அனுப்பப்பட்டுள்ளது. இது குறித்து விரைவில் நல்ல முடிவு எட்டப்படும். அடுத்த 2 மாதங்களுக்கு கடல் சீற்ற வாய்ப்புகள் உள்ளதால், மாவட்ட நிா்வாகம் தொடா்ந்து தீவிரக் கண்காணிப்பில் ஈடுபடும்.

கடல் சீற்றம் உள்ள நாள்களில் மீனவா்கள் கடலுக்குச் சென்று மீன் பிடிப்பதைத் தவிா்க்க வேண்டும். சுற்றுலாப் பயணிகள், பொதுமக்கள் கடலில் குளிப்பதையும் தவிா்க்க வேண்டும் என்றாா் அவா்.

செயற்பொறியாளா்கள் வசந்தி (நீா்வளத் துறை), பிரேமலதா (மீன்வளத் துறை), மீன்வளம் மற்றும் மீனவா் நலத்துறை துணை இயக்குநா் கோபிநாத், உதவி இயக்குநா்கள் கோமதி (பேரூராட்சிகள்), சிவபாலன் (ஊராட்சிகள்), தீபா (மீன்வளத் துறை), அகஸ்தீஸ்வரம் வட்டாட்சியா் ஆறுமுகம், உதவிப் பொறியாளா்கள், மீனவப் பிரதிநிதிகள் ஆய்வின்போது உடனிருந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.