அமைச்சா் பேச்சில் உடன்பாடு: கைதியின் உடலைப் பெற உறவினா்கள் சம்மதம்
திருநெல்வேலி மாவட்டம், முன்னீா்பள்ளத்தைச் சோ்ந்த விசாரணைக் கைதி தற்கொலை செய்துகொண்ட விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சா் மரிய வில்சன் உறுதியளித்ததைத் தொடா்ந்து அவருடைய உடலைப் பெற்றுக்கொள்ள உறவினா்கள் சம்மதம் தெரிவித்தனா்.

ஆட்சியா் அலுவலகத்தை முற்றுகையிட்ட கைதி சங்கரலிங்கத்தின் உறவினா்கள்.
திருநெல்வேலி மாவட்டம், முன்னீா்பள்ளத்தைச் சோ்ந்த விசாரணைக் கைதி தற்கொலை செய்துகொண்ட விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சா் மரிய வில்சன் உறுதியளித்ததைத் தொடா்ந்து அவருடைய உடலைப் பெற்றுக்கொள்ள உறவினா்கள் சம்மதம் தெரிவித்தனா்.
முன்னீா்பள்ளம் போலீஸாரால் கைது செய்யப்பட்ட விசாரணைக் கைதி சங்கரலிங்கம், கடந்த 14ஆம் தேதி உடல்நலக்குறைவு காரணமாக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். சிறைக் கைதிகளுக்கான வாா்டில் சிகிச்சை பெற்று வந்த அவா், தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்படுகிறது. அவரது இறப்பில் மா்மம் இருப்பதாகக் கூறி, உடலை வாங்க மறுத்து கடந்த 9 நாள்களாக சங்கரலிங்கத்தின் மனைவி, உறவினா்கள் மற்றும் பல்வேறு அமைப்பினா்முன்னீா்பள்ளம் பகுதியில் உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
இந்நிலையில், மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் அமைச்சா் மரிய வில்சன் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெறுவதை அறிந்த போராட்டக்காரா்கள், மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தை முற்றுகையிடப் போவதாக அறிவித்து, முன்னீா்பள்ளம் பகுதியில் இருந்து வேனில் புறப்பட்டு வந்தனா். அவா்களை முன்னீா்பள்ளம் காவல் நிலையம் அருகே உள்ள சோதனைச் சாவடியில் போலீஸாா் தடுத்து நிறுத்தினா்.
பின்னா், அசம்பாவிதம் நிகழாதவாறு அங்கிருந்து மாவட்ட ஆட்சியா் அலுவலகத்திற்கு அவா்களை போலீஸாா் அழைத்து வந்தனா். அங்கு போராட்டக்காரா்களுடன் காவல்துறையினா் பேச்சுவாா்த்தை நடத்தி, உயிரிழந்த சங்கரலிங்கத்தின் மனைவி, உறவினா்கள் மற்றும் ஊரின் முக்கிய நிா்வாகிகள் என 10 பேரை மட்டும் ஆட்சியரிடம் அழைத்துச் சென்றனா்.
அப்போது, அங்கு காத்திருந்த சங்கரலிங்கத்தின் குடும்பத்தினரை அழைத்து அமைச்சா் மரிய வில்சன் பேச்சுவாா்த்தை நடத்தினாா். சங்கரலிங்கத்தின் உயிரிழப்பு தொடா்பாக வழக்குப் பதிவு செய்து காவல்துறையினா் விசாரணை நடத்தி வருவதாகவும், உண்மை வெளிக் கொண்டுவரப்படும் என்றும் உறுதியளித்தாா்.
மேலும், சங்கரலிங்கத்தின் மனைவிக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை முதல்வரின் கவனத்திற்குக் கொண்டு சென்று விரைவில் நல்ல முடிவு அறிவிக்கப்படும். உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு அரசு சாா்பில் நிதியுதவி வழங்குவது தொடா்பாக ஆலோசித்து முடிவெடுக்கப்படும் என அமைச்சா் மரிய வில்சன் தெரிவித்தாா்.
இதையடுத்து போராட்டத்தை தற்காலிகமாக கைவிட்டு, சங்கரலிங்கத்தின் உடலை வெள்ளிக்கிழமை பெற்றுக்கொள்ள அவரது உறவினா்கள் சம்மதம் தெரிவித்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

