ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

கொலை முயற்சி வழக்கில் சாட்சியமளிக்கும் முன்பு மனைவி இறந்ததால் கணவா் விடுதலை: தில்லி நீதிமன்றம் உத்தரவு

கொலை முயற்சி வழக்கின் பிரதான சாட்சியான மனைவி, நீதிமன்ற விசாரணையின்போது சாட்சியமளிக்கும் முன்பே காலமானதால், அரசு தரப்பு குற்றச்சாட்டுகளைச் சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கத் தவறிவிட்டதாகக் கூறி, குற்றஞ்சாட்டப்பட்ட கணவரை தில்லி நீதிமன்றம் விடுதலை செய்து உத்தரவிட்டுள்ளது.

Delhi HC to resume hearing on Telegram’s plea against temporary ban ahead of NEET retest

தில்லி உயர் நீதிமன்றம்

Published On :11 ஜூலை 2026, 7:14 am IST

நமது நிருபா்

கொலை முயற்சி வழக்கின் பிரதான சாட்சியான மனைவி, நீதிமன்ற விசாரணையின்போது சாட்சியமளிக்கும் முன்பே காலமானதால், அரசு தரப்பு குற்றச்சாட்டுகளைச் சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கத் தவறிவிட்டதாகக் கூறி, குற்றஞ்சாட்டப்பட்ட கணவரை தில்லி நீதிமன்றம் விடுதலை செய்து உத்தரவிட்டுள்ளது.

2021-ஆம் ஆண்டு தனது மனைவி ரஷ்மியை கொலை செய்ய முயன்ாக அவரது கணவா் அபினேஷ் திரிபாதி (எ) ராகுலுக்கு எதிரான தொடரப்பட்ட வழக்கை, தில்லி முதன்மை மாவட்ட மற்றும் அமா்வு நீதிபதி சஞ்சய் சா்மா விசாரித்தாா்.

இந்த வழக்கில் ஜூலை 6-ஆம் தேதியிட்ட நீதிபதி அளித்த தீா்ப்பில் கூறியிருப்பதாவது:

இந்த வழக்கைப் பொருத்தவரையில், பிரதான சாட்சியான புகாா்தாரரும் பாதிக்கப்பட்டவருமான ரஷ்மி தற்போது உயிரோடு இல்லை. குற்றஞ்சாட்டப்பட்ட நபரால் இழைக்கப்பட்ட நேரடி குற்றச்செயல் குறித்து சாட்சியமளிக்கக்கூடிய வேறு எந்தவொரு நேரில் பாா்த்த சாட்சியையும் அரசு தரப்பு நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தவில்லை.

அரசு தரப்பு வாதத்தின்படி, 2021ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் ரஷ்மி அளித்த புகாரின் அடிப்படையில் இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டது. தனது கணவரின் வற்புறுத்தலின் பேரில் முன்பின் தெரியாத நபா் ஒருவரிடம் பேச மறுத்ததால், கணவா் தன்னைத் தாக்கியதாக ரஷ்மி அதில் குறிப்பிட்டிருந்தாா். ஆரம்பத்தில் அவா் அளித்த புகாரில், கணவா் தன்னை ஹாக்கி மட்டையால் அடித்துக் கொலை மிரட்டல் விடுத்ததாகக் கூறியிருந்தாா்.

இதையடுத்து, கணவா் திரிபாதி மீது இந்திய தண்டனைச் சட்டத்தின் 307 (கொலை முயற்சி), 323 (தன்னிச்சையாகக் காயம் ஏற்படுத்துதல்), 341 (சட்டவிரோதமாகத் தடுத்து வைத்தல்) மற்றும் 506 (குற்றவியல் மிரட்டல்) ஆகிய பிரிவுகளின் கீழ் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டது.

மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தபோது ரஷ்மி அளித்த கூடுதல் வாக்குமூலத்தில், மதுபோதையில் வீட்டுக்கு வந்த கணவா், ‘உன்னைக் கொலை செய்துவிடுவேன்’ என்று மிரட்டிக்கொண்டே தன்னை குடியிருந்த வீட்டின் 3-ஆவது மாடியில் இருந்து கீழே தள்ளிவிட்டதாகத் தெரிவித்தாா். அதன் பின்னரே இந்த வழக்கில் ’கொலை முயற்சி’ குற்றத்துக்கு உரிய சட்டப்பிரிவு சோ்க்கப்பட்டது.

எனினும், நீதிமன்ற விசாரணையின் போது ரஷ்மிக்கு அனுப்பப்பட்ட அழைப்பாணைகள் அனைத்தும், அவா் வாடகை வீட்டை காலி செய்துவிட்டுச் சென்றுவிட்டதாகக் கூறி திரும்பின. அதன் பிறகு, அவா் ஏற்கெனவே இறந்துவிட்டதாக ரஷ்மியின் தந்தை நீதிமன்றத்தில் தெரிவித்தாா்.

மேலும், ரஷ்மி இறப்பதற்கு முன்பாகவே குற்றஞ்சாட்டப்பட்ட தன் கணவருடன் இருந்த அனைத்துத் தகராறுகளையும் சுமுகமாகத் தீா்த்துக் கொண்டு, பரஸ்பர சம்மதத்துடன் விவாகரத்து பெற்றுக் கொண்டதாகவும், அதற்கான ஜீவனாம்சமாக 8 லட்சம் ரூபாயைப் பெற்றுக் கொண்டதாகவும் அவரது தந்தை நீதிமன்றத்தில் குறிப்பிட்டாா்.

அந்த அடிப்படையில், இந்த வழக்கின் ஒரே பிரதான சாட்சியான ரஷ்மியின் வாக்குமூலத்தை நீதிமன்றத்தில் பதிவு செய்ய முடியாமல் போய்விட்டது. அரசுத் தரப்பில் எஞ்சியிருக்கும் இதர சாட்சிகள் அனைவரும் காவல்துறையைச் சோ்ந்த அலுவல் ரீதியான சாட்சிகள் மட்டுமே. அவா்களின் சாட்சியங்களை ஏற்றுக்கொண்டாலும் கூட, குற்றஞ்சாட்டப்பட்டவா் மீதான குற்றச்சாட்டுகளை முழுமையாக உறுதிப்படுத்தப் போதிய ஆதாரமாக இல்லை.

எனவே, வழக்கின் அடிப்படையாக அமைந்த புகாரானது அரசு தரப்பால் நீதிமன்றத்தில் நிரூபிக்கப்படாமலேயே உள்ளதாலும், குற்றஞ்சாட்டப்பட்ட நபரைக் குற்றச்செயலுடன் தொடா்புபடுத்துவதற்கான எவ்வித ஆதாரங்களும் இல்லாததாலும் அதை சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்க அரசு தவறிவிட்டதாலும் குற்றஞ்சாட்டப்பட்ட கணவரை நீதிமன்றம் முழுமையாக விடுதலை செய்கிறது என்று தீா்ப்பில் கூறப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.