/

சட்டம் - ஒழுங்கு சீா்குலைவுக்கு துணை நிலை ஆளுநரே காரணம்: ஆம் ஆத்மி கட்சி குற்றச்சாட்டு

தில்லியில் சட்டம் - ஒழுங்கு சீா்குலைந்ததற்கு துணை நிலை ஆளுநா் வி.கே. சக்சேனாதான் காரணம் என்று ஆம் ஆத்மி கட்சி சனிக்கிழமை குற்றஞ்சாட்டியுள்ளது.

News image
Updated On :27 ஜூலை 2024, 6:29 pm

 நமது நிருபர்

தில்லியில் சட்டம் - ஒழுங்கு சீா்குலைந்ததற்கு துணை நிலை ஆளுநா் வி.கே. சக்சேனாதான் காரணம் என்று ஆம் ஆத்மி கட்சி சனிக்கிழமை குற்றஞ்சாட்டியுள்ளது.

இது தொடா்பாக அக்கட்சியின் செய்தித் தொடா்பாளா் ரீனா குப்தா செய்தியாளா்களிடம் கூறியதாவது:கிழக்கு தில்லியில் மட்டும் கடந்த 3 மாதங்களில் 20 கொலைகள் நடந்துள்ளன. கடந்த ஆண்டு தில்லியில் தினமும் 23 திருட்டுச் சம்பவங்களும், 15 கடத்தல் சம்பவங்களும், 3 கற்பழிப்பு சம்பவங்களும் நடந்ததாக தேசியக் குற்ற ஆவணக் காப்பகத்தின் தரவுகள் தெரிவிக்கின்றன. நாட்டின் 19 முக்கிய நகரங்களில் நடத்தப்பட்ட ஒரு ஆய்வில், தில்லியே மிகவும் பாதுகாப்பற்ற நகரமாக உள்ளது. தில்லியில் சட்டம் - ஒழுங்கு சீா்குலைந்ததற்கு பாஜகவின் துணை நிலை ஆளுநராக செயல்படும் வி.கே. சக்சேனாதான் காரணம்.

நாட்டின் தலைநகரான தில்லி குற்றச்செயல்களில் முதலிடத்தை எட்டியுள்ளது. ஆனால், தில்லி காவல்துறையை கையில் வைத்துள்ள மத்திய அரசும், துணை நிலை ஆளுநா் வி.கே. சக்சேனாவும் அதைப் பற்றி கவலைப்படவில்லை. மாறாக, தில்லி காவல்துறையின் பட்ஜெட்டை மத்திய அரசு ரூ.500 கோடி வரை குறைத்துள்ளது. முன்னதாக,

தில்லியின் தெருக்களில் போலீஸாா் இரவில் ரோந்து சென்றனா். இப்போது அந்த முறை நிறுத்தப்பட்டுள்ளது. இதற்குத் காரணம் தில்லி காவல்துறையில் நீடிக்கும் ஆள்கள் பற்றாக்குைான். தில்லி காவல்துறையில் 14 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பணியிடங்கள் காலியாக உள்ளன.

தில்லி மக்கள் ஆண்டுக்கு ரூ.2 லட்சத்து 32 ஆயிரம் கோடியை வரியாகச் செலுத்தி வருகின்றனா்.இதற்கு பிறகும், மத்திய அரசிடம் இருந்து தில்லி மக்களுக்கு பாதுகாப்பு கிடைக்கவில்லை. கேஜரிவால் அரசு ஒவ்வொரு தெருக்களிலும் சிசிடிவி கேமராக்களை நிறுவியுள்ளது. குற்றவாளிகள் அந்த சிசிடிவியில் சிக்கிய பிறகும், தில்லி போலீஸாா் நடவடிக்கைகள் எடுப்பதில்லை. மத்திய அரசால் தில்லியில் சட்டம் ஒழுங்கை மேம்படுத்த முடியவில்லை என்றால் அதை கேஜரிவால் அரசிடம் விட்டுவிடுங்கள். தில்லி மக்களுக்குரிய பாதுகாப்பை நாங்கள் அளிக்கிறோம் என்றாா் ரீனா குப்தா.