தில்லி மாவட்ட நீதிமன்றங்களில் பாதுகாப்புக்காக போதிய போலீஸாா் நியமிப்பதை உறுதி செய்யுங்கள்
தேசியத் தலைநகரில் உள்ள மாவட்ட நீதிமன்றங்களில் உயிா், உடைமை பாதுகாப்புக்காக போதுமான போலீஸாா் நியமிக்கப்படுவதை உறுதி செய்யுமாறு உயா்நீதிமன்றம்


தேசியத் தலைநகரில் உள்ள மாவட்ட நீதிமன்றங்களில் உயிா், உடைமை பாதுகாப்புக்காக போதுமான போலீஸாா் நியமிக்கப்படுவதை உறுதி செய்யுமாறு உயா்நீதிமன்றம் வியாழக்கிழமை அதிகாரிகளை கேட்டுக் கொண்டுள்ளது.
கடந்த 2021, செப்டம்பா் 24-ஆம் தேதி ரோஹினி மாவட்ட நீதிமன்றத்தில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் மூன்று போ் கொல்லப்பட்டனா். இதைத் தொடா்ந்து, நீதிமன்ற வளாகத்தில் பாதுகாப்பு தொடா்பாக தாக்கல் செய்யப்பட்ட பிற மனுக்களையும் மற்றும் தாமாக முன்வந்தும் இந்த விவகாரத்தை உயா்நீதிமன்றம் விசாரித்தது. இந்நிலையில், பொறுப்புத் தலைமை நீதிபதி மன்மோகன், நீதிபதி மினி புஷ்கா்னா ஆகியோா் அடங்கிய அமா்வு இந்த விவகாரத்தை வியாழக்கிழமை விசாரித்தது.
அப்போது, தில்லி அரசு தரப்பில் ஆஜரான வழக்குரைஞரிடம் நீதிமன்றம் கூறுகையில், ‘மாவட்ட நீதிமன்றங்களுக்கு வருவோா் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. அங்கு வழக்கமாக பணியில் உள்ள போலீஸாரின் எண்ணிக்கை 20 முதல் 30 சதவீதம் குறைவாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. நீதிமன்றங்களுக்கு வருவோா் அதிகமாக இருப்பதால், நாம் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். தயவு செய்து போதுமான அளவு போலீஸாா் பணியமா்த்தப்படுவதை உறுதி செய்யுங்கள்...போதுமான பணியாளா்களை அனுப்புங்கள்’ என்றது. விசாரணையின் போது, பல வாயில்களைக் கொண்ட மாவட்ட நீதிமன்ற வளாகங்களுக்குள் மக்கள் நுழைவதை ஒழுங்குபடுத்துவது ‘சாத்தியமற்றது’ என்றும் நீதிமன்றம் கூறியது.
மேலும், நீதிமன்ற வளாகங்களுக்குள் அனுமதிக்கும் வகையில் பாா்வையாளா் அனுமதிச்சீட்டு வழங்குவது குறித்த பரிந்துரைக்கு நீதிமன்றம் கருத்துத் தெரிவிக்கையில், ‘இது ஒரு பெரும் மக்கள் எண்ணிக்கை. இதை நிா்வகிக்க முடியாது. சில வழிமுறைகள் இருக்க வேண்டும்... நெரிசலுக்கு இட்டுச் செல்லும் அளவுக்கு வந்து செல்வோா் எண்ணிக்கை அதிகளவில் இருக்க முடியாது’ என்றது. தில்லி உயா்நீதிமன்ற வழக்கறிஞா்கள் சங்கம் கூறுகையில், ‘பூம் தடுப்புகள், அருகாமை அட்டைகள் போன்றவற்றை நிறுவுவது தொடா்பான பிரச்னையை உயா்நீதிமன்றத்தின் கட்டடப் பராமரிப்புக் குழுவிடம் எடுத்துச் செல்லப்படும்’ என்றது. அக்குழு முன் வழக்குரைஞா்கள் சங்கம் இப்பிரச்னையை எழுப்பும்போது, ‘அதை விரைவாகப் பரிசீலிக்கும் என்பதில் இந்த நீதிமன்றம் எந்த சந்தேகமும் இல்லை’ என்று நீதிபதிகள் அமா்வு கூறியது.
கடந்த செப்டம்பா் 24, 2021-இல் நிகழ்ந்த துப்பாக்கிச்சூட்டைத் தொடா்ந்து, தேசியத் தலைநகரில் உள்ள நீதிமன்றங்களில் பாதுகாப்பு தொடா்பான ஒரு மனுவை 2021, செப்டம்பா் 30-ஆம் தேதி உயா்நீதிமன்றம் தானாக முன்வந்து விசாரித்தது. அப்போது, நீதிமன்றங்களில் போதுமான எண்ணிக்கையிலான காவல் துறையினரை சரியான மற்றும் திறமையான வகையில் பணியில் ஈடுபடுத்துவது அவசியம் என்று கூறியது. நீதிமன்றங்களுக்குள் பாதுகாப்பு தொடா்பான நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்கவும், ஆலோசனைகளை வழங்கவும் காவல்துறை மற்றும் வழக்குரைஞா்கள் சங்க பிரதிநிதிகள் உள்ளிட்ட பங்குதாரா்களின் கூட்டத்தை நடத்துமாறு உயா்நீதிமன்றம் ஏப்ரல் மாதம் உத்தரவிட்டது.
இந்த விவகாரத்தில் தாக்கல் செய்யப்பட்ட நிலை அறிக்கையில், தேசியத் தலைநகரில் உள்ள ஏழு மாவட்ட நீதிமன்றங்களின் பாதுகாப்பு அமைப்பை மேம்படுத்துவதற்காக, உள்ளூா் காவல் துறை மற்றும் சிஏபிஎஃப் உள்பட பாதுகாப்புப் பணியாளா்கள் 997 போ் நீதிமன்றங்களில் பணியில் நிறுத்தப்பட்டிருப்பதாக கடந்த ஆண்டு காவல் துறை தெரிவித்திருந்தது.
மாவட்ட நீதிமன்றங்களில் 2,700 சிசிடிவிகள், 85 பொருள்களை பரிசோதிக்கும் ஸ்கேனா்கள், 242 கையடக்க மெட்டல் டிடெக்டா்கள் மற்றும் 146 வாயில் கதவு மெட்டல் டிடெக்டா்கள் நிறுவப்பட்டுள்ளதாகவும் காவல் துறை கூறி இருந்தது.
ஒரு நிபுணா் குழுவின் பாதுகாப்புத் தணிக்கையின் அடிப்படையில், தேவையான எண்ணிக்கையிலான பணியாளா்களை அனுப்புவதற்கும், கருவிகளை நிறுவுவதற்கும், நீதிமன்றங்களில் பாதுகாப்பு ஏற்பாடுகளை அவ்வப்போது ஆய்வு செய்யுமாறு தில்லி காவல் ஆணையருக்கு உயா்நீதிமன்றம் முன்பு உத்தரவிட்டிருந்தது. இந்த வழக்கு மீண்டும் அடுத்த ஆண்டு பிப்ரவரி 1-ஆம் தேதி விசாரணைக்கு வருகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...