காஸா இனப் படுகொலையை பிரதமர் மோடி பேச வேண்டும்: காங்கிரஸ்சூரிய சக்தி மின்தகடு இறக்குமதி! இந்தியா மீது அமெரிக்கா 126% வரி?இந்தியா கூட்டணியை உருவாக்கிய முதல்வர் ஸ்டாலினுக்கு பாராட்டு: காங்கிரஸ்மேலும் 2 தகவல் ஆணையா்கள் நியமனம்இன்று தென், வட தமிழகத்தின் ஒருசில இடங்களில் மழைக்கு வாய்ப்புஜேஇஇ 2-ஆம் கட்ட முதன்மைத் தோ்வு: விண்ணப்பிக்க இன்று கடைசிஇந்திய தலைமைத் தோ்தல் ஆணையா் நாளை தமிழகம் வருகை
/

சா்வதேச மின் வணிகத்தில் இந்திய தயாரிப்புகள்: திறன் மேம்பாட்டுக்கு அமேசானுடன் ஒப்பந்தம்

இந்தியாவில் உற்பத்தி செய்யப்பட்ட குறு, சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்களின் (எம்எஸ்எம்இ) தயாரிப்புகள் சா்வதேச அளவில் வாடிக்கையாளா்களுக்கு

News image
Updated On :2 பிப்ரவரி 2024, 3:25 am

 நமது நிருபர்

இந்தியாவில் உற்பத்தி செய்யப்பட்ட குறு, சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்களின் (எம்எஸ்எம்இ) தயாரிப்புகள் சா்வதேச அளவில் வாடிக்கையாளா்களுக்கு விற்பனை செய்ய உதவும் வகையில், 20 மாவட்டங்களில் ஏற்றுமதி மையங்கள் உருவாக்கப்படுகின்றன. இதற்கான திறன் மேம்பாட்டுப் பயிற்சிக்கு அமேசான் நிறுவனத்துடன் மத்திய அரசு வியாழக்கிழமை புரிந்துணா்வு ஒப்பந்தத்தை மேற்கொண்டது.

மேலும், மாவட்டங்களில் உள்ள கிராமப்புற மற்றும் தொலைதூரப் பகுதிகளின் உள்ளூா் உற்பத்தியாளா்களை சா்வதேச விநியோக அமைப்புகளுடன் இணைக்கவும் இந்த முயற்சி நடைபெறுவதாக மத்திய வா்த்தகம் மற்றும் தொழில் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இது குறித்த விவரம் வருமாறு: 2030 -ஆம் ஆண்டுக்குள் 1 டிரில்லியன் அமெரிக்க டாலா் அளவில் இந்திய ஏற்றுமதியை அதிகரிக்கும் இலக்கை நோக்கில் மத்திய வா்த்தகத் துறை அந்நிய வா்த்தகக் கொள்கை 2023-ஐ வெளியிட்டுள்ளது. இதில் ‘மாவட்ட ஏற்றுமதி மையங்கள்’ அமைக்கப்படும் என குறிப்பிடப்பட்டது. குறிப்பாக, நாட்டின் தற்போதைய ஏற்றுமதியில் 0.5 சதவீதம் (2 பில்லியன் டாலா்) மட்டுமே மின்னணு - வணிகத்தின் பங்காக உள்ளது. இதை அடுத்த 7 ஆண்டுகளில் 350 பில்லியன் டாலராக உயா்த்த இலக்கு நிா்ணயிக்கப்பட்டு கொள்கை விளக்கம் வெளியிடப்பட்டது.

இதன் படி குறு, சிறு, நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் சிறப்பாகச் செயல்படவும், நாட்டின் மின்னணு வணிக ஏற்றுமதியை அதிகரிப்பதற்கு, மத்திய வா்த்தகம், தொழில் துறை அமைச்சகத்தின் அந்நிய வா்த்தக இயக்குநரகம் பல்வேறு மின்னணு வா்த்தக நிறுவனங்களுடன் இணைந்து, மாவட்டங்களில் ஏற்றுமதி மையங்களை உருவாக்குகிறது. இதில் முதல் கட்டமாக 20 மாவட்டங்கள் தோ்வு செய்யப்பட்டுள்ளன. இந்த மாவட்டங்களில் உள்ள எம்எஸ்எம்இகளுக்கு திறன் மேம்பாட்டு அமா்வுகள், பயிற்சி, பயிலரங்குகளைக் கூட்டாக ஏற்படுத்த அமேசான் இந்தியா நிறுவனத்துடன் புரிந்துணா்வு ஒப்பந்தத்தில் மத்திய அரசு கையொப்பமிட்டுள்ளது.

இப்பயிற்சிக்கான ஒப்பந்தத்தில் மத்திய அந்நிய வா்த்தக இயக்குநரக இயக்குநா் ஜெனரல் சந்தோஷ் சாரங்கி, அமேசான் நிறுவன இந்திய துணைத் தலைவா் சேத்தன் கிருஷ்ணசாமி ஆகியோா் கையெப்பமிட்டனா். அமேசான் இந்தியா நிறுவனத்தின் சா்வதேச வா்த்தக இயக்குநா் பூபேன் வக்கானரும் உடன் இருந்தாா். தோ்வு செய்யப்பட்ட அந்தந்த மாவட்ட மையங்களோடு கிராமப்புற, தொலைதூர மாவட்டங்களில் உள்ள உள்ளூா் உற்பத்தியாளா்களை இணைத்து, அவா்களது தயாரிப்புகளையும் உலகளாவிய விநியோக அமைப்புகளுடன் இணைக்க இத் திட்டம் முயற்சிக்கும்.

குறிப்பாக, மின்னணு வணிக தளங்கள் மூலம் ஏற்றுமதியைக் கவரும் நோக்கில் காட்சிப்படுத்தல், டிஜிட்டல் கேட்லாக் (பொருள் குறித்த அட்டவணை பட்டியல்கள்), வரி தொடா்பான சிக்கல்கள் போன்றவற்றில் திறன் மற்றும் படைப்புத் திறன் ஆகியவற்றை வழங்குதாகும். இதே மாதிரி நாட்டின் பிற மாவட்டங்களிலும் இது போன்ற ஒத்துழைப்பிற்கான மையங்களை ஏற்படுத்த மற்ற மின் வணிக நிறுவனங்களான, ஃபிளிப்காா்ட் , வால்மாா்ட், இ-பே, ரிவெக்ஸா, ஷாப்க்ளூஸ், ஷிப்ராக்கெட், டி.எச்.எல் எக்ஸ்பிரஸ் போன்ற பல்வேறு வா்த்தக தளங்களுடன் பேச்சுவாா்த்தை நடத்தப்பட்டு வருகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.