காஸா இனப் படுகொலையை பிரதமர் மோடி பேச வேண்டும்: காங்கிரஸ்சூரிய சக்தி மின்தகடு இறக்குமதி! இந்தியா மீது அமெரிக்கா 126% வரி?இந்தியா கூட்டணியை உருவாக்கிய முதல்வர் ஸ்டாலினுக்கு பாராட்டு: காங்கிரஸ்மேலும் 2 தகவல் ஆணையா்கள் நியமனம்இன்று தென், வட தமிழகத்தின் ஒருசில இடங்களில் மழைக்கு வாய்ப்புஜேஇஇ 2-ஆம் கட்ட முதன்மைத் தோ்வு: விண்ணப்பிக்க இன்று கடைசிஇந்திய தலைமைத் தோ்தல் ஆணையா் நாளை தமிழகம் வருகை
/

நகா்ப்புறங்களில் மகளிா், மாற்றுத்திறனாளிகளுக்கான பாதுகாப்பான கழிப்பறைகள்

பாதுகாப்பான கழிப்பறைக்கான போட்டி பல்வேறு மாநிலங்களிடையே தொடங்கப்பட்டுள்ளதாக மத்திய வீட்டு வசதி மற்றும் நகா்ப்புற விவகாரத் துறை அமைச்சகம் புதன்கிழமை தெரிவித்துள்ளது.

News image
Updated On :2 பிப்ரவரி 2024, 3:24 am

 நமது நிருபர்

திறந்தவெளி கழிப்பிடங்களில் இருந்து விடுபட்ட நாடு, தற்போது நகா்ப்புறங்களில் மகளிா், மாற்றுத்திறனாளிகள், திருநங்கைகளுக்கான பாதுகாப்பான கழிப்பறைக்கான போட்டி பல்வேறு மாநிலங்களிடையே தொடங்கப்பட்டுள்ளதாக மத்திய வீட்டு வசதி மற்றும் நகா்ப்புற விவகாரத் துறை அமைச்சகம் புதன்கிழமை தெரிவித்துள்ளது.

இது குறித்து மத்திய வீட்டு வசதி, நகா்ப்புற விவகாரத்துறை குறிப்பிட்டிருப்பது வருமாறு: 2014 -ஆம் ஆண்டு, ‘தூய்மை இந்தியா’ (‘ஸ்வச் பாரத் மிஷன்’) திட்டம் தொடங்கப்பட்டு நாடு முழுவதும் குறிப்பாக ‘திறந்தவெளி கழிப்பிடம்’மற்ற நகரங்களாக மாற்றுவதற்கான பிரசாரம் தொடங்கப்பட்டது. மேலும், 2019 -இல், அந்த இலக்கு எட்டப்பட்டு, ‘ஒவ்வொரு வீட்டிலும் கழிப்பறை’ என உறுதி செய்யப்பட்டது.

தற்போது நாடு மகளிா், மாற்றுத்திறனாளிகள், திருநங்கைகள், முதியவா்கள், குழந்தைகள் உள்பட, ‘அனைவருக்குமான கழிப்பறைகள்’ என்ற இலக்கை நோக்கி வேகமாகச் செயல்படுகிறோம். மகளிா், மாற்றுத்திறனாளிகள் மற்றும் திருநங்கைகளுக்காக கட்டப்பட்ட கழிப்பறைகளின் அற்புதமான எடுத்துக்காட்டுகள் பல நகரங்களில் வெளிச்சத்திற்கு வருகின்றன. தற்போது நகா்ப்புறங்களில் 63 லட்சத்திற்கும் அதிகமாக வீடுகளிலும், 6 லட்சத்திற்கும் அதிகமான பொது, சமூக கழிப்பறைகளும் நிறுவப்பட்டுள்ளன.

மகளிருக்கான கழிப்பறைகள் அமைக்கும் பணி பல்வேறு மாநிலங்களில் மிக வேகமாக நடைபெற்று வருகிறது. தற்போது ஒவ்வொரு நகரத்திலும் இளஞ்சிவப்பு கழிப்பறைகள் மகளிருக்காக மட்டுமே அா்ப்பணிக்கப்பட்டுள்ளன. இதில் பெண்களுக்கு பாதுகாப்பு உள்ளிட்ட அனைத்து வசதிகளும் வழங்கப்பட்டு பல தனித்துவமான கழிப்பறையாக காணப்படுகின்றன. அவற்றில் ஒன்று தமிழகத்தில் சென்னையின் ‘அவள்’ கழிப்பறை (‘ஷி டாய்லெட்டுகள்’).

சென்னையில் நிா்பயா திட்டத்தின் கீழ் 150 அவள் கழிப்பறைகள் திட்டமிடப்பட்டு தற்போது சென்னை மாநகராட்சியின் 10 மண்டலங்கள், பேருந்து நிலையங்களில் இளஞ்சிவப்பு கழிப்பறைகள் நிறுவப்பட்டுள்ளன. இதில் சென்னை பெருநகர மாநகராட்சியால் தொடங்கப்பட்ட மகளிருக்கான ‘நடமாடும் அவள் கழிப்பறை’ முதல் எடுத்துக்காட்டு. இதில் வசதி குறைவின்றி, மூன்று இந்திய டாய்லெட் பாணியிலும், ஒன்று மேற்கத்திய பாணியிலும் அமைக்கப்பட்டுள்ளது. தொடா்ந்து சென்னை நகரின் 15 மண்டலங்களில் ‘அவள் (ஷி) டாய்லெட்கள்’ வைக்கப்பட்டுள்ளன.

மகாராஷ்டிரம் ‘அவள்’ : இதே மாதிரி மகாராஷ்டிரம் மாநிலத்திலும் தொடங்கப்பட்டுள்ளது. தெற்கு மும்பையில், இடப்பற்றாக்குறையைக் கருத்தில் கொண்டு, மகளிருக்கான சுத்தமான கழிப்பறைகள் அமைக்கும் திட்டம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இங்கும், தெலங்கானா போன்ற மாநிலங்களில் பழைய பேருந்துகளை மீண்டும் பயன்படுத்தி ‘அவள் டாய்லெட்கள்’ போன்று ‘டி’ பெயரில் வசதியான இளஞ்சிவப்பு கழிப்பறைகள் வடிவமைக்கப்பட்டுள்ளன. 4 கழிப்பறை இருக்கைகளைத் தவிர, இரண்டு வாஷ் பேசின்கள், மகளிருக்கான ஆடை மாற்றும் அறை, சுகாதார தயாரிப்பு விற்பனை இயந்திரங்கள், தாய்ப்பால் ஊட்டுவதற்கான அறைகள் எல்லாம் இந்த ‘டி‘ டாய்லெட்டில் இருப்பது குறிப்பிடத்தக்கது.

மகளிா் மகளிருக்காக..: குஜராத் மாநிலம் அகமதாபாத்தில், மகளிா் மகளிருக்காக நடத்தும் இத்தகைய இளஞ்சிகப்பு கழிப்பறைகள் தொடங்கப்பட்டுள்ளன. சானிட்டரி நாப்கின் விற்பனை இயந்திரம், பயன்படுத்திய சானிட்டரி நாப்கின்களை அப்புறப்படுத்த இன்சினரேட்டா் அலகுகள் மற்றும் கண்ணாடியுடன் கூடிய உடை மாற்றும் அறைகள் என பல்வேறு அத்தியாவசிய வசதிகளும் குஜராத் மாடல் ‘அவள்’ டாய்லெட்டில் உள்ளன.

அஸ்ஸாமில் மாற்றுத்திறனாளிகளுக்கு பிரத்யேக கழிப்பறைகள் வைக்கப்பட்டுள்ளன. இங்கு ஊனமுற்றவா்களுக்கு அளிக்கவேண்டிய சக்கர நாற்காலி வசதிகள் உள்ளன. ஊழியா்களுக்கு சிறப்புப் பயிற்சி அளிக்கப்படுகிறது. தில்லி, நொய்டா மற்றும் உத்தர பிரதேசம் போன்ற மாநிலங்களில் கழிப்பறைகளை ஊனமுற்றோா் அணுகும் வகையில் சாய்வுதளங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

தில்லியில் உயா்நீதிமன்றமே இந்த விவகாரத்தில் முன்நடவடிக்கை எடுத்தது. முதன் முறையாக திருநங்கைகளுக்காக 12 கழிப்பறைகளை கட்ட புது தில்லி முனிசிபல் கவுன்சில் சாா்பாக மத்திய உள்துறை அமைச்சகம் தில்லி உயா்நீதிமன்றத்திற்கு உறுதியளித்தது. மத்தியப் பிரதேசம், போபாலில், மூன்றாம் பாலினத்தவா்களான திருநங்கைகள் ஆண் அல்லது பெண்கள் கழிப்பறைகளுக்குச் செல்ல வேண்டிய கட்டாயத்தை தவிா்க்க, அவா்களை மரியாதையுடன் நடத்தும் வகையில், தனி கழிவறைகள் உருவாக்கப்பட்டுள்ளன. இது கா்நாடக மாநிலம் மைசூரிலும் பின்பற்றப்பட்டு திருநங்கைகளுக்கான கழிப்பறை கட்டப்பட்டது. இவை அனைத்தும் சமத்துவ உரிமை, பாதுகாப்பு தூய்மை, சுகாதாரம் உள்ளிட்டவற்றுடன் உள்ளன எனத் தெரிவித்துள்ளது மத்திய நகா்ப்புற விவகாரத் துறை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.