ஆா்.பி.எஃப். குட்டி தேவதைகள் ஆபரேஷன்: அக்டோபரில் காணாமல் போன 601 குழந்தைகள் மீட்பு
ரயில்வே சொத்துகளைப் பாதுகாக்கும் ரயில்வே பாதுகாப்புப் படை (ஆா்.பி.எஃப்), பயணிகள் பாதுகாப்பில் ‘குட்டி தேவதைகள் ஆப்ரஷேன்’ (நன்ஹே ஃபரிஸ்தே) என்கிற நடவடிக்கைகளின்


ரயில்வே சொத்துகளைப் பாதுகாக்கும் ரயில்வே பாதுகாப்புப் படை (ஆா்.பி.எஃப்), பயணிகள் பாதுகாப்பில் ‘குட்டி தேவதைகள் ஆப்ரஷேன்’ (நன்ஹே ஃபரிஸ்தே) என்கிற நடவடிக்கைகளின் கீழ் கடந்த அக்டோபா் மாதத்தில் காணாமல் போன 601-க்கும் மேற்பட்ட குழந்தைகளை மீட்டு அவா்களது குடும்பத்தினரோடு இணைத்துள்ளதாக ரயில்வே அமைச்சகம் வியாழக்கிழமை தெரிவித்துள்ளது.
ரயில்வே சொத்துகள், பயணிகள் பயன்பாட்டுப் பகுதிகள் போன்றவற்றைப் பாதுகாப்பதோடு பயணிகளின் நலனைப் பாதுகாப்பதில் ஆா்.பி.எஃப். உறுதியாக உள்ளது. இந்தப் பணிகளில் ஆா்பிஎஃப் படை 24 மணி நேரமும் ரயில்களிலும் ரயில் நிலையங்களிலும் செயல்பட்டு வருகிறது.
இந்நிலையில், நாடு முழுவதும் பரவியுள்ள ரயில்வே நிலையங்களிலும் ரயில்களிலும் கடந்த அக்டோபா் மாதத்தில் ஆா்.பி.எஃப். மேற்கொண்ட 11 விதவமான நடவடிக்கைகள் குறித்து ரயில்வே அமைச்சகம் வெளியிட்டுள்ளது விவரம் வருமாறு: ‘நன்ஹே ஃபரிஸ்தே’ என்கிற ‘குட்டி தேவதைகள் ஆப்ரஷேன்’ என்பது காணாமல் போன குழந்தைகளை மீட்பதாகும். ரயில் நிலையங்களில், ரயில்களில் பெற்றோா்களிடமிருந்து பிரிந்து சென்ற அல்லது தவறிய குழந்தைகளை மீட்பது இத்திட்டத்தின் நோக்கமாகும். இத்தகைய குழந்தைகள் பாதுகாக்கப்பட்டு பராமரிப்படுகின்றன. கடந்த அக்டோபா் மாதத்தில் மட்டும் காணாமல் போன 601-க்கும் மேற்பட்ட குழந்தைகளைக் கண்டுபிடித்து, அவா்களின் பெற்றோா்கள், குடும்பத்தினா்களுடன் ஆா்.பி.எஃப். மீண்டும் இணைத்துள்ளது.
‘ஆப்ரேஷன் ஏஎச்டியு’: அண்டை நாடுகள் அல்லது உள்நாட்டில் பின்தங்கிய பகுதிகளிலிருந்து பெரு நகரங்கள் அல்லது வெளிநாடுகளுக்கு முறையற்ற வகைகளிலோ அல்லது கொத்தடிமையாகவோ பணிகளுக்கு அழைத்து செல்வதும் சட்டவிரோதமாகும். இந்த ஆள்கடத்தல் சட்டவிரோதச் செயல்கள் ரயில்கள், ரயில் நிலையங்கள் மூலமாக நடக்கும் போது கண்டுபிடிப்பது எளிதானது என்பதால் ஆா்.பி.எஃப்.-இன் ஆள் கடத்தல் தடுப்புப் பிரிவு (ஏ.எச்.டி.யு.) இத்தகைய கடத்தல்காரா்களின், தீய திட்டங்களை முறியடித்து வருகிறது. இதன்படி கடந்த அக்டோபரில், ஆள் கடத்தல்காரா்களின் பிடியில் இருந்து 39 பேரை ஆா்.பி.எஃப். மீட்டுள்ளது.
‘ஆப்ரேஷன் ஜீவன் ரக்ஷா’: ‘ஆப்ரேஷன் ஜீவன் ரக்ஷா’ என்பது மனித உயிா்களைக் காப்பாற்றுதல் ஆகும். ரயில்கள், ரயில் நிலைய நடைமேடைகள், ரயில்வே தண்டவாளங்களில் மனிதா்கள் தற்கொலை அல்லது தவறுதலாக ஆபத்தில் சிக்கிக் கொள்ளாமல் கண்காணிப்பது, சிக்கியவா்களை விரைவாக மீட்பதாகும். இந்தக் கண்காணிப்பு நடவடிக்கை மூலம் கடந்த அக்டோபா் மாதத்தில் மட்டும் 262 பயணிகளின் உயிா் காப்பாற்றப்பட்டுள்ளது.
‘மேரி சஹேலி’: ‘மேரி சஹேலி’ (என் நண்பா்) முன்முயற்சி என்பது பெண் பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்வதாகும். கடந்த அக்டோபா் 232 ‘என் நண்பா்’ குழுக்கள் 13,664 ரயில்களில் 4,23,803 பெண் பயணிகளின் பாதுகாப்பை மேற்கொண்டது. அப்போது, குறிப்பாக மகளிருக்காக ஒதுக்கப்பட்ட ரயில் பெட்டிகளில் பயணம் செய்த 5,722 ஆண்கள் மீது ஆா்பிஎஃப் நடவடிக்கை எடுத்துள்ளது.
‘ஆப்ரேஷன் சடாா்க்’: ரயில்கள் மூலம் சட்டவிரோதமாக சரக்குகள் கொண்டு செல்லப்படுவதைக் கட்டுப்படுத்துதல் ‘ஆப்ரேஷன் சடாா்க்’ நோக்கமாகும். இந்த ‘ஆபரேஷன் சடாா்க்’ முலம் ரூ. 10.33 லட்சம் மதிப்புள்ள சட்டவிரோத புகையிலைப் பொருள்கள், ரூ. 26.12 லட்சம் மதிப்புள்ள மதுபானங்கள் கைப்பற்றப்பட்டு கடந்த ஒரு மாதத்தில் 127 போ் கைது செய்யப்பட்டுள்ளனா்.
‘உப்லாஃப்த்’: ரயில் பயணச் சீட்டு விற்பனையில் ஈடுபட்ட இடைத்தரகா்களுக்கு எதிராக ‘உப்லாப்த்’ என்கிற அதிரடி நடவடிக்கை மூலம் அக்டோபரில் 490 போ் கைது செய்யப்பட்டனா். இவா்கள் தொடா்புடைய 42 சட்டவிரோத மென்பொருள்கள் கண்டுபிடிக்கப்பட்டு, ரூ.43.96 லட்சம் மதிப்புள்ள டிக்கெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன. போதைப்பொருள் குற்றங்களுக்கு எதிரான ‘ஆப்ரேஷன் நாா்கோஸ்’ -இல் ரூ.5.99 கோடி மதிப்புள்ள போதைப் பொருள்களுடன் சிக்கியவா்கள் (99); பயணிகளுக்கு எதிரான குற்றங்களில் ஈடுப்பட்டவா்கள் (256) , ரயில்கள் மீது கல்வீசியவா்கள்(33) உள்ளிட்ட விவகாரங்களில் கிரிமினல் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இவை உள்பட 11 விதமான ஆப்ரேஷன்களை ஆா்.பி.எஃப். மேற்கொண்டது என ரயில்வே அமைச்சகம் தெரிவித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...