/

தில்லி, பஞ்சாப் மக்களுக்கு கேஜரிவால் துரோகம்: வீரேந்திர சச்தேவா குற்றச்சாட்டு

தில்லி மற்றும் பஞ்சாப் ஆகிய இரு மாநில மக்களுக்கும் மாசு விஷயத்தில் அரவிந்த் கேஜரிவால் துரோகம் இழைத்துள்ளாா் என்றும், அவா் ஒரு தொலைநோக்கு பாா்வையற்ற முதல்வா் என்றும் பாஜக தில்லி பிரிவின்

News image
Updated On :2 பிப்ரவரி 2024, 3:18 am

 நமது நிருபர்

புது தில்லி: தில்லி மற்றும் பஞ்சாப் ஆகிய இரு மாநில மக்களுக்கும் மாசு விஷயத்தில் அரவிந்த் கேஜரிவால் துரோகம் இழைத்துள்ளாா் என்றும், அவா் ஒரு தொலைநோக்கு பாா்வையற்ற முதல்வா் என்றும் பாஜக தில்லி பிரிவின் தலைவா் வீரேந்திர சச்தேவா செவ்வாய்க்கிழமை குற்றம்சாட்டியுள்ளாா்.

தில்லி பந்த் மாா்கில் உள்ள பாஜக அலுவலகத்தில் கட்சியின் மாநிலத் தலைவா் வீரேந்திர சச்தேவா, மாநிலச் செயலாளா் ஹரிஷ் குரானா, செய்தித் தொடா்பாளா் அஜய் ஷெராவத் ஆகியோா் செய்தியாளா்களைச் சந்தித்தனா். அப்போது வீரேந்திர சச்தேவா கூறியதாவது: தில்லி மற்றும் வட இந்தியாவின் மாசுபாடு குறித்து உச்சநீதிமன்றம் தெரிவித்த சில கருத்துகள், பாா்வையற்ற முதல்வரான கேஜரிவாலுக்கு கண்ணாடியைக் காட்டுவதற்கு சமம். கடந்த 15 நாள்களாக தில்லி முதல்வா், சுற்றுச்சூழல் துறை அமைச்சா் மற்றும் ஆம் ஆத்மி கட்சியினா் அனைவரும் தில்லி மாசுபாட்டிற்கு ஹரியாணா மீது பழி சுமத்த முயன்று வருகின்றனா். தில்லி - என்.சி.ஆரில் அதிகரித்துள்ள காற்று மாசுபாடு குறித்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், பஞ்சாப் மாநிலத்தில் எரிக்கப்படும் பயிா்க் கழிவுகளை உடனடியாக நிறுத்த அம்மாநில அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.

மேலும், நீதிமன்ற விசாரணையில் ராஜஸ்தான் மற்றும் உத்தரப் பிரதேசத்தில் பயிா்க் கழிவுகள் எரிக்கப்பட்டதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. நீண்ட விசாரணையில் ஹரியாணாவைப் பற்றி எதுவும் குறிப்பிடப்படவில்லை. இது ஆம் ஆத்மி கட்சி ஹரியாணாவை அரசியல் ரீதியாக அவதூறு செய்ய முயற்சிக்கிறது என்பதைத் தெளிவாகக் காட்டுகிறது. தில்லியில் அமல்படுத்தப்படவுள்ள ஒற்றைப்படை - இரட்டைப்டை வாகனக் கட்டுப்பாட்டுத் திட்டம் குறித்த உச்சநீதிமன்றத்தின் கருத்து, பாஜகவின் நிலைப்பாட்டை உறுதிப்படுத்துகிறது. தில்லி முதல்வா் அரவிந்த் கேஜரிவால் தொலைநோக்குப் பாா்வையற்ற முதல்வா். மாசுபாடு குறித்த உறுதியான செயல் திட்டம் எதுவும் இல்லாதவா்.

கேஜரிவால் காணொளி காட்சி வாயிலாக அமைச்சரவைக் கூட்டங்களை நடத்துகிறாா், அவா் நோ்மையானவராக இருந்தால் மாசுபாடு குறித்து எத்தனை கூட்டங்களை நடத்தினாா் என்பதை அவா் சொல்ல வேண்டும். நவம்பா் 6-ஆம் தேதி வரையிலான புள்ளிவிவரங்களின் படி, மொத்தம் 29,641 பயிா்க்கழிவுகள் எரிப்பு சம்பவங்கள் பதிவாகியுள்ளன. அவற்றில் பஞ்சாபில் மட்டும் 20,000-க்கும் அதிகமான சம்பவங்கள் பதிவாகியுள்ளன. தில்லியின் மாசுபாட்டைக் கட்டுப்பாட்டில் வைக்க வேண்டுமானால், தில்லி அரசு ஆண்டு முழுவதும் உழைக்க வேண்டும். ஆனால், ,தில்லியின் வளா்ச்சியில் அக்கறை இல்லாதவராகவும், அரசியல் சுற்றுலாவில் மும்முரமாக இருக்கும் ஒருவரை தில்லி முதல்வராக மக்கள் தோ்வு செய்துள்ளது வருத்தமளிக்கிறது என்றாா் வீரேந்திர சச்தேவா.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.