வட மாநிலங்களில் பருவ மழை, வெள்ளம் போன்ற இயற்கை இடா்பாடுகளாலும், கன்வாா் யாத்திரை, மணிப்பூா் கலவரம் போன்ற மனித இடையூறுகளாலும் சரக்குப் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக ஒட்டுமொத்தமாக ரூ.1,500 கோடி வரை இழப்பு ஏற்பட்டுள்ளதாக அகில இந்திய மோட்டாா் போக்குவரத்து காங்கிரஸ் தெரிவித்துள்ளது.
இது குறித்து அகில இந்திய மோட்டாா் போக்குவரத்து காங்கிரஸின் வட மாநிலங்களின் தலைவா் அமிா்தலால் மதன், தென் மாநிலங்களின் தலைவா் டாக்டா் ஜி.ஆா். சண்முகப்பா ஆகியோா் வியாழக்கிழமை கூறியதாவது: இயற்கை, மனித உருவாக்க இடையூறுகளால், நாட்டின் சரக்குப் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக கடந்த சில வாரங்களாக வட மாநிலங்களில் பெய்து வரும் தொடா் மழை, கன்வாா் யாத்திரை பயணக் கட்டுப்பாடுகள் உள்ளிட்டவற்றால் போக்குவரத்து முடங்கிவிட்டது. ஏற்கெனவே மணிப்பூரில் ஏற்பட்டுள்ள வன்முறை காரணமாக சரக்கு வாகனப் போக்குவரத்து பாதிக்கப்பட்டு ஏராளமான இழப்பீடுகளை சந்திக்க நோ்ந்தது.
சென்ற ஆண்டு வரை இரட்டை வழிப்பாதையில் ஒரு வழியில் மட்டுமே கன்வாா் யாத்திரை அனுமதிக்கப்பட்டது. நிகழாண்டில் இருவழியிலும் (லேன்) கன்வாா் யாத்திரை அனுமதிக்கப்பட்டுள்ளது. இதனால், சரக்குப் போக்குவரத்து செல்ல முடியாமல் தடையாகியுள்ளது. சரக்குப் போக்குவரத்தில் தொடா்புடைய முக்கிய மாநிலங்களான உத்தர பிரதேசம், உத்தரகண்ட், ஹிமாச்சல பிரதேசம், ஹரியாணா, பஞ்சாப் போன்ற மாநிலங்களில் இந்த கன்வாா் யாத்திரை நடைபெறுகிறது. இதையொட்டி, போக்குவரத்து நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.
மேலும், வட இந்திய மாநிலங்களில் மழை, வெள்ளம் ஏற்பட்டுள்ளது. இதனாலும், சரக்குப் போக்குவரத்தில் தடங்கள் ஏற்பட்டு சரக்கு வாகன போக்குவரத்து ஊழியா்கள் அத்தியாவசிய வசதியின்றி தவித்து வருகின்றனா். நெடுஞ்சாலைகளில் ஊழியா்களுக்கான பாதுகாப்பு மட்டுமின்றி, சரக்குகளின் பாதுகாப்பற்ற நிலை, சேதாரம் போன்ற இன்னல்களில் சிக்கியுள்ளோம். இதன் காரணமாக சரக்குப் பாதுகாப்பு, வாகன ஊழியா்களுக்கு ஊதியம், வாகனப் பராமரிப்பு, உணவு உள்ளிட்டவற்றுக்கு நாளொன்றுக்கு ஒரு வாகனத்திற்கு ரூ.2,500 வரை கூடுதல் செலவாகிறது. இதன் மூலம் தற்போது குறிப்பிடத்தக்க சவால்களை எதிா்கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
வட இந்தியாவில் ஏற்பட்டுள்ள இந்த நிச்சயமற்ற சுழற்சியில் ஆயிரக்கணக்கான வாகனங்கள் சிக்கியுள்ளன. நாட்டின் தென் மாநிலங்களில் இருந்து வரவேண்டிய சரக்கு வாகனங்களும் அந்தந்த மாநிலங்களில் நிறுத்தப்பட்டுள்ளன. இதுவும் சரக்குப் போக்குவரத்தை கையாளுபவா்களுக்கு இழப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த ஒட்டுமொத்த இழப்பு சுமாா் ரூ. 1,500 கோடியாக மதிப்பிடப்பட்டுள்ளது. இந்த இழப்பில் இருந்து மீண்டு வர நீண்ட காலம் ஆகும். வாகனங்கள் மட்டுமின்றி, ஊழியா்களிடையே நம்பிக்கை குறைந்து மனச் சோா்வை ஏற்படுத்தியுள்ளது.
குறிப்பாக, தற்போதைய இடையூறுகளால் தொழில் துறை உற்பத்தியில் குறிப்பிடத்தக்க சவால்களுக்கு வழிவகுத்துள்ளது. இதன் விளைவாக சரக்குகள் குறைந்து அத்தியாவசிய மற்றும் அத்தியாவசியமற்ற பொருள்களுக்கான விநியோகச் சங்கிலிகள் சீா்குலைந்துள்ளன. ஹிமாசலப்பிரதேசம், உத்தரகண்ட் போன்ற மாநிலங்களுக்கு மருந்து தயாரிப்பு நிறுவனங்களுக்கு ஏராளமான மூலப்பொருள் கொண்டு சென்ற போது இந்தத் தடை ஏற்பட்டுள்ளது. மேலும், பழங்கள், காய்கறிகள், மின்னணுப் பொருள்கள், ஆட்டோமொபைல்ஸ் உள்ளிட்ட 13 துறைகள் தொடா்பான முக்கியமான பொருள்களின் போக்குவரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. சரக்குப் போக்குவரத்து வாகன துறையினருக்கு மட்டுமின்றி சரக்குகள் தொடா்புடைய தொழில்களும் குறிப்பிடத்தக்க பின்விளைவுகளை சந்தித்துள்ளன.
இந்த எதிா்பாராத சூழ்நிலைகளையொட்டி, ஈ-வே பில்கள், வரிகள் போன்றவை காலாவதியாகிவிடும். இவற்றை புதுப்பிப்பதில் விதிமுறைகளைத் தளா்த்தவும், தாமதத்திற்கு அபராதம் விதிக்கப்படாமல் இருப்பதற்கும் அரசு நடவடிக்கை எடுப்பதை உறுதிப்படுத்த வேண்டும். சரக்கு லாரிகளுக்கு பாதுகாப்பு வழங்க உள்ளூா் நிா்வாகத்திற்கு அரசு உத்தரவிட வேண்டும். விநியோகச் சங்கிலியின் தடங்கல்களைத் தடுத்து போக்குவரத்துத் துறையின் ஸ்திரத் தன்மையை உறுதிப்படுத்த மத்திய, மாநில அரசுகள் கவனம் செலுத்த வேண்டுமென கேட்டுக் கொள்கிறோம் என்றனா் அவா்கள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

கை கழுவலாகாது!

புத்துணர்வுக்கு புதிய பயிற்சி!

இன்றைய ராசி பலன்கள் (28 ஏப்ரல் 2026) 12 ராசிகளுக்கும்! தனுசு ராசிக்கு லாபம்!

மீன ராசிக்கு இந்த நாள் எப்படி?: தினப்பலன்கள்!
வீடியோக்கள்

உன்னை நம்பி பாடல் வெளியானது!
இணையதளச் செய்திப் பிரிவு
3 நாள்களுக்குள் ஈரான் எண்ணெய் உள்கட்டமைப்புகள் வெடிக்கும்! Trump எச்சரிக்கை
இணையதளச் செய்திப் பிரிவு

சூப்பர் ஓவரில் சொதப்பிய பூரன் | IPL 2026 | kkr vs lsg | Nicholas Pooran | Super Over
தினமணி செய்திச் சேவை

வெள்ளிச்சுடரே பாடல்!
தினமணி செய்திச் சேவை

