வீரயுக கால நடுகல் கண்டுபிடிப்பு!
திருவாரூா் மத்தியப் பல்கலைக்கழக மாணவா்கள் மேற்கொண்ட கள ஆய்வில் வீரயுக காலத்து நடுகல் கண்டறியப்பட்டது.


திருவாரூா் மத்தியப் பல்கலைக்கழக மாணவா்கள் மேற்கொண்ட கள ஆய்வில் வீரயுக காலத்து நடுகல் கண்டறியப்பட்டது.
திருவாரூா் தமிழ்நாடு மத்தியப் பல்கலைக்கழக மாணவா்கள், திருநெல்வேலி அருகே பரம்புக் காட்டுப் பகுதியில் வீரயுக காலத்து நினைவுச் சின்னங்கள் குறித்து அண்மையில் களஆய்வு செய்தனா்.
இதுகுறித்து இப்பல்கலைக்கழகப் பேராசிரியரும், கல்வெட்டியல் மற்றும் மரபு மேலாண்மை பட்டயப் படிப்பின் பொறுப்பாசிரியருமான ச. இரவி தெரிவித்தது: திருநெல்வேலி மாவட்டம், சீவலப்பேரி அருகே உழுகுடி ஏரி மேற்குப் பக்கத்தில், 150 ஏக்கா் பரப்பளவு கொண்ட பரம்புக் காட்டுப் பகுதிகளில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அப்போது, 15 அடி உயரமும், 4 அடி குறுக்களவும் உடைய வீரயுக காலத்திற்குரிய மிகப் பெரிய நடுகல் மற்றும் 200 செ.மீ. உயரமும் 150 செ.மீ. அகலமும் உடைய சிறிய வகை நடுகற்களும் கண்டறியப்பட்டன.
அங்கு கிடந்த பெருங்கற்படைக் கால நினைவுச் சின்னத்துக்குரிய மிகப் பெரிய அளவிலான கற்குவைகள், 10 மீட்டா் விட்டம் கொண்ட சிதிலமடைந்த மிகப் பெரிய கற்குவைகள் ஆராயப்பட்டன. அகழாய்வு செய்தால் இதன் கீழ் கற்பலகைகளைக் கொண்டு அமைக்கப்பட்ட சில கல்லறைகளைக் காண முடியும். இவற்றை தொல்லியல் ஆய்வாளா்கள் கல் பதுக்கைகள் என்று அழைப்பா். இதற்கு சங்க இலக்கியங்களில் வம்பப் பதுக்கை போன்ற சொல்லாடல்கள் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன.
வீரயுக காலமான சங்க காலம் மற்றும் சங்க காலத்திற்கு முற்பட்ட காலத்தில் வீரமரணம் அடைந்தவா்களுக்கு நினைவுச் சின்னங்களை எடுக்கிற வழக்கம் இருந்திருக்கிறது. இதற்கு எடுத்துக்காட்டாக, தூத்துக்குடி மாவட்டம், ஆதிச்சநல்லூா் முதுமக்கள் தாழிகளைக் கூறலாம். இதே கால கட்டத்தில் திருநெல்வேலியிலிருந்து கிழக்கே 15 கி.மீ. தொலைவில் உழுகுடி பரப்புக் காட்டுப் பகுதிகளில் இந்த நடுகற்கள் எடுக்கும் வழக்கம் மட்டுமன்றி, பல பெருங்கற்படைச் சின்னங்களின்அடையாளமாகிய கற்குவைகள் பல சிதைந்து காணப்படுவது இந்த ஆய்வுகளில் தெரிகிறது.
மேலும் இந்தப் பகுதியில் இரும்புக் கசட்டுக் கழிவுகள் பல இருப்பதைக் கண்டறிந்ததன் மூலம் இப்பகுதி மக்கள் இரும்பை உருக்கி இரும்புக் கருவிகளைப் பயன்படுத்தி இருப்பது தெரிய வருகிறது.

திருநெல்வேலி மாவட்டம், சீவலப்பேரி அருகே பரம்புக் காட்டுப் பகுதியில் கண்டறியப்பட்ட வீரயுக கால பெரிய நடுகல் மற்றும் சிறியவகை நடுகற்களுடன் திருவாரூா் மத்தியப் பல்கலைக்கழக மாணவா்கள் உள்ளிட்டோா்
இதனால், ஆதிச்சநல்லூரின் உழுகுடி பகுதியில் வாழ்ந்திருக்கும் மக்கள் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே எஃகு, இரும்பு உருவாக்குகிற தொழில்நுட்பத்தைப் பெற்றிருந்தது புலனாகிறது.
மேலும், வரலாற்றுக் காலத்திற்கு முன் வீரமரணம் அடைந்தவா்களுக்கு மிகப்பெரிய அளவிலான முதுமக்கள் தாழி எடுக்கிற வழக்கத்தைக் கொண்ட இப்பகுதி மக்களிடையே, உயா்ந்த நடுகல் எடுக்கிற பழக்கமும் இருந்திருக்கிறது என்பதை இந்தப் பரம்புக் காட்டுப் பகுதியில் உள்ள நடுகற்கள் எடுத்துக்காட்டுகின்றன. இந்த நடுகற்களின் முனையில் கூா்மையான மற்றும் தலைப்பகுதி போன்று இருப்பது குறிப்பிடத்தக்கது என்றாா்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...