கிடப்பில் போடப்பட்ட காரைக்கால்- பேரளம் புதிய ரயில்பாதை
ரயில்வே நிதிநிலை அறிக்கையில் இடம்பெற்ற காரைக்கால்-திருநள்ளாறு-பேரளம் புதிய அகல ரயில்பாதை


என்.எஸ்.செல்வமுத்துக்குமாரசாமி
ரயில்வே நிதிநிலை அறிக்கையில் இடம்பெற்ற காரைக்கால்-திருநள்ளாறு-பேரளம் புதிய அகல ரயில்பாதை அறிவிப்பு இதுவரை செயல்பாட்டிற்கு வரவில்லை.
நாகூரிலிருந்து காரைக்காலுக்கு கடந்த 2011 முதல் ரயில் போக்குவரத்து இருந்துவருகிறது. காரைக்காலில் இருந்து மயிலாடுதுறை, சிதம்பரம், புதுச்சேரி, சென்னை போன்ற பகுதிகளுக்குச் செல்ல நேரடி ரயில் சேவை இல்லை. நாகப்பட்டினம், திருவாரூர் வழியாகவே இந்த ஊர்களை ரயில் பயணிகள் அடையமுடியும். கடந்த 1898-ல் காரைக்கால்- பேரளம் வரை 23.5 கிமீ.க்கு மீட்டர்கேஜ் ரயில்பாதையில் போக்குவரத்து தொடங்கப்பட்டது. பிறகு போதிய வருவாய் இல்லையென 1987-ம் ஆண்டு ரயில் சேவை நிறுத்தப்பட்டது. ஆனால், ரயில் தண்டவாளம் அமைத்த பகுதி இன்றுவரை ரயில்வே நிர்வாகத்திடமே உள்ளது.
இந்தப் பாதையில் மீண்டும் ரயில் சேவையை தொடங்கக் கோரியதை அடுத்து, கடந்த 2013-ம் ஆண்டு ரயில்வே நிதிநிலை அறிக்கையில் புதிதாக காரைக்கால் - பேரளம் அகல ரயில்பாதை அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. அப்போது இத்திட்டத்திற்கு ரூ. 120 கோடி தேவையென மதிப்பீடு செய்யப்பட்டது.
ரயில்பாதைக்குத் தேவையான நிலம் ஏற்கெனவே உள்ள நிலையில், நிதி தேவை மட்டுமே முக்கிய பிரச்னை. காரைக்காலில் உள்ள தனியார் துறைமுகம், கப்பலில் வந்திறங்கும் நிலக்கரியை ரயில் மூலம் பல இடங்களுக்கு அனுப்பிவருகிறது. இதன்மூலம் தெற்கு ரயில்வேக்கு திருச்சி கோட்டத்திலேயே அதிகபட்ச வருவாய் கிடைக்கிறது.
காரைக்கால் -பேரளம் ரயில்பாதை அமைந்து போக்குவரத்து நடைபெற்றால், துறைமுகத்தின் மூலம் ரயில்வேக்கு கூடுதல் வருவாய் கிடைக்க வாய்ப்பு உள்ளது. துறைமுகத்திடம் குறிப்பிட்ட தொகையை திட்ட பங்களிப்பாக பெற்று, திட்டத்தை நிறைவேற்றப்போவதாக எழுந்த பேச்சும் நீர்த்துப்போய்விட்டது. ரயில்வே நிர்வாகமும் பணிகளை தொடங்க முன்வரவில்லை.
இதுகுறித்து ரயில்வே அமைச்சரை வலியுறுத்தவும், புதுச்சேரி ஆட்சியாளர்கள் முன்வரவில்லை. புதுச்சேரி மக்களவை உறுப்பினரும் முயற்சிப்பதாக தெரியவில்லை. இதனால், திட்டம் நிறைவேறாமல் போய்விடுமோ என்ற கவலை பொதுமக்களிடையே எழுந்துள்ளது. இந்த ரயில்பாதை அமைக்கப்பட்டால், காரைக்காலில் இருந்து திருநள்ளாறு வழியாக பேரளம், மயிலாடுதுறைக்கு எளிதில் செல்லமுடியும். இதன்மூலம் இந்தியாவின் எந்தப் பகுதியிலிருந்தும் காரைக்கால், திருநள்ளாறுக்கு நேரடியாக வந்துசெல்லலாம்.
இந்த திட்டம் செயல்பாட்டுக்கு வரும்போது, திருநள்ளாறில் 5 ரயில்கள் நிற்கும் வகையில் ரயில் நிலையம் அமைப்பதற்கான திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. திருநள்ளாறு கோயிலுக்கு கர்நாடகம், ஆந்திரம், தமிழகத்தின் பல்வேறு பகுதிகள் மட்டுமல்லாது வடமாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் வருகின்றனர். இந்த ரயில்பாதை மூலம் அவர்கள் உரிய போக்குவரத்து வசதியைப் பெறுவதோடு, அவர்கள் மூலம் ரயில்வே துறைக்கு உரிய வருவாயும் கிடைக்கும்.
மேலும், காரைக்காலில் உள்ள தேசிய தொழில்நுட்ப நிறுவனமான என்.ஐ.டி., ஓஎன்ஜிசி உள்ளிட்டவற்றுக்கு வந்துசெல்லும் ஏராளமான வெளிமாநிலத்தவர்களுக்கு இந்த திட்டம் பயனுள்ளதாக இருக்கும். கிடப்பில் உள்ள இந்தத் திட்டத்தை செயல்படுத்த மத்திய அரசை புதுவை அரசு வலியுறுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...