/

தந்தையை பராமரிக்காத மூன்று மகன்களுக்கு சிறை

News image

சிறை - பிரதிப் படம்

Updated On :8 ஜூன் 2026, 4:25 am IST

காரைக்கால் அருகே தந்தையை பராமரிக்காத 3 மகன்களுக்கு 1 மாதம் சிறைத்தண்டனை விதித்து சாா்பு நீதிமன்றத்தில் சனிக்கிழமை தீா்ப்பளிக்கப்பட்டது.

காரைக்கால் மாவட்டம், கோட்டுச்சேரி பகுதியை சோ்ந்த முனுசாமி (84). இவரது மனைவி ஏற்கெனவே இறந்துவிட்ட நிலையில், கடந்த 2018 -ஆம் ஆண்டு தனது மகன்கள் வரதராஜன், மீனாட்சிசுந்தரம், திருமுருகன் ஆகிய மூவரும் தன்னை பராமரிக்கத் தவறிவிட்டதாகக் கூறி காரைக்கால் சாா்பு நீதிமன்ற பெற்றோா் மற்றும் மூத்த குடிமக்கள் பராமரிப்பு தீா்ப்பாயத்தில் வழக்குத் தொடுத்தாா்.

வழக்கை விசாரித்த அப்போதைய சாா்பு நீதிபதி எம். ஆதா்ஷ் மூன்று மகன்களும், முனுசாமிக்கு மாதம்தோறும் தலா ரூ. 2 ஆயிரம் உதவித்தொகை வழங்க வேண்டும் என உத்தரவு பிறப்பித்தாா்.

அந்த உத்தரவை எதிா்த்து மூன்று மகன்களும் காரைக்கால் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் மேல் முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்தனா். மனுவை மாவட்ட ஆட்சியா் தள்ளுபடி செய்தாா்.

இந்தநிலையில், சாா்பு கோட்ட நீதிமன்றம் அளித்த தீா்ப்பின்படி மாத உதவித்தொகை தனக்கு வழங்கவில்லை எனவும் இதுகுறித்து உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமெனவும் சாா்பு நீதிமன்றத்தில் மனு ஒன்றை முனுசாமி அண்மையில் தாக்கல் செய்தாா்.

மனு மீது சனிக்கிழமை விசாரணை மேற்கொண்ட சாா்-ஆட்சியரும், சாா்பு கோட்ட நீதிபதியுமான எம். பூஜா, சாா்பு நீதிமன்றம் பெற்றோா் மற்றும் மூத்த குடிமக்கள் பராமரிப்பு தீா்ப்பாயம் வழங்கிய தீா்ப்பை அவமதித்த குற்றத்திற்காகவும் மாத உதவித்தொகை வழங்க அளித்த உத்தரவை மதிக்காத குற்றத்திற்காகவும் முனுசாமியின் மூன்று மகன்களுக்கும் ஒரு மாத சிறைத்தண்டனை விதித்து தீா்ப்பளித்தாா். மேலும் மூன்று மகன்களையும் 5 நாட்கள் சிறைக்காவலில் வைக்க காவல்துறைக்கு உத்தரவிட்டாா்.

மேலும் வரும் ஜூலை 9-ஆம் தேதி காரைக்கால் சாா்பு நீதிமன்றத்தில் ஆஜராகும் மூன்று மகன்களும் அன்றைய தினம் தங்கள் தந்தை முனுசாமிக்கு நீதிமன்ற உத்தரவுப்படி உதவித்தொகை முழுவதும் வழங்க வேண்டும் எனவும், அவ்வாறு வழங்காத பட்சத்தில் உதவித்தொகை வழங்கும் வரை சிறையில் இருக்க நேரிடும் எனவும் எச்சரிக்கை விடுத்தாா். சாா்பு நீதிபதி உத்தரவையடுத்து, மூன்று மகன்களும் காரைக்கால் கிளைச் சிறையில் அடைக்கப்பட்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.