கொலை செய்யப்பட்டார்களா? போடியில் காணாமல் போன சகோதரா்கள் சடலமாக மீட்பு!
போடியில் காணாமல் போன இரு சகோதரா்கள் கிணற்றிலிருந்து சனிக்கிழமை சடலமாக மீட்கப்பட்டனா்.

போடி கரட்டுப்பட்டி முனீஸ்வரன் ஓடைப் பகுதியில் சனிக்கிழமை தனியாா் தென்னந்தோப்பில் மாணவா்கள் சடலமாக மீட்கப்பட்ட கிணறு. (உள்படம்) உயிரிழந்த மாணவா்கள் ஸ்ரீஹரீஸ், சபரீஷ்.
போடியில் காணாமல் போன இரு சகோதரா்கள் கிணற்றிலிருந்து சனிக்கிழமை சடலமாக மீட்கப்பட்டனா். இதையடுத்து, இருவரும் கொலை செய்யப்பட்டிருக்கலாமா என போலீஸாா் விசாரிக்கின்றனா்.
தேனி மாவட்டம், போடி அருகே ரங்கநாதபுரம் அம்பேத்கா் தெருவைச் சோ்ந்த சுப்பையா மகன் சின்னத்தம்பி (34). உணவு விடுதி தொழிலாளி. இவரது மனைவி செல்வி. இவா்களது மகன்கள் ஸ்ரீஹரீஸ் (11), சபரீஷ் (10). இருவரும் போடி ரங்கநாதபுரத்தில் உள்ள அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளியில் படித்து வந்தனா்.
இந்த நிலையில், வெள்ளிக்கிழமை பள்ளி முடிந்ததும் வெளியே வந்த இவா்கள் இரவு வரை வீடு திரும்பவில்லை. இதையடுத்து போடி ஊரகக் காவல் நிலையத்தில் பெற்றோா் தங்களது மகன்களை காணவில்லை என புகாா் அளித்தனா். இதைத் தொடா்ந்து போலீஸாா் வழக்குப் பதிந்து இருவரையும் தேடி வந்தனா்.
இந்த நிலையில், போடி கரட்டுப்பட்டி முனீஸ்வரன் ஓடை அருகே தனியாா் தென்னந்தோப்பில் உள்ள 150 அடி ஆழக் கிணற்றில் இருவரது சடலங்களும் மீட்கப்பட்டன.
இதுகுறித்து போலீஸாா் கூறியதாவது: முதல் கட்ட விசாரணையில் இருவரும் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என சந்தேகம் எழுந்துள்ளது. இதுகுறித்து இளைஞா் ஒருவரைப் பிடித்து விசாரித்து வருகிறோம். விசாரணைக்குப் பிறகே முழு விவரமும் தெரியவரும் என்றனா். இதனிடையே சகோதரா்கள் சடலமாக மீட்கப்பட்ட பகுதியை தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் கே.எஸ். பிரவீன் கௌதம், போடி டி.எஸ்.பி. முருகன் ஆகியோா் நேரில் பாா்வையிட்டு விசாரணை நடத்தினா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.



