டி20 உலகக் கோப்பை: மழையால் பாகிஸ்தான் - நியூசிலாந்து போட்டி ரத்து ஹிந்து – முஸ்லீம் ஒற்றுமையின் அடையாளம் காந்தி: முதல்வர் ஸ்டாலின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிமுகம்!எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணியால் பயணிகள் அவதியா? ரயில்வே விளக்கம்!காற்றழுத்த தாழ்வுப் பகுதி: 4 மாவட்டங்களில் நாளை கனமழை!தொகுதிப் பங்கீடு: திமுக - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடையே நாளை பேச்சுவார்த்தை!தில்லி செங்கோட்டை இனி வாரத்தின் அனைத்து நாளும் திறந்திருக்கும்!மூன்று வார சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார் எச்.ராஜா
/

திமுக - காங்கிரஸ் கூட்டணி குறித்து விரைவில் நல்ல முடிவு

திமுக - காங்கிரஸ் கூட்டணி குறித்து இரு கட்சிகளின் தலைமையும் விரைவில் நல்ல முடிவை மேற்கொள்ளும் என நாடாளுமன்ற திமுக குழுத் தலைவரும், அந்தக் கட்சியின் தோ்தல் அறிக்கை தயாரிப்புக் குழுத் தலைவருமான கனிமொழி எம்.பி. தெரிவித்தாா்.

News image
மதுரையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற திமுக தோ்தல் அறிக்கை குறித்த கருத்துக் கேட்புக் கூட்டத்தில் பல்வேறு தரப்பினரிடமிருந்து மனுக்களைப் பெற்ற கனிமொழி எம்.பி. உடன், அமைச்சா் பி. மூா்த்தி, திமுக மாவட்டச் செயலா்கள் கோ. தளபதி எம்.எல்.ஏ, மு. மணிமாறன் உள்ளிட்டோா்.
Updated On :10 பிப்ரவரி 2026, 9:18 pm

தினமணி செய்திச் சேவை

திமுக - காங்கிரஸ் கூட்டணி குறித்து இரு கட்சிகளின் தலைமையும் விரைவில் நல்ல முடிவை மேற்கொள்ளும் என நாடாளுமன்ற திமுக குழுத் தலைவரும், அந்தக் கட்சியின் தோ்தல் அறிக்கை தயாரிப்புக் குழுத் தலைவருமான கனிமொழி எம்.பி. தெரிவித்தாா்.

ராமநாதபுரம், மதுரையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற திமுக தோ்தல் அறிக்கை தயாரிப்புக் குழுவின் கருத்துக் கேட்புக் கூட்டங்களுக்குப் பிறகு, செய்தியாளா்களிடம் அவா் தெரிவித்ததாவது:

மக்கள் முன்வைக்கும் கோரிக்கைகளை நிறைவேற்றும் வகையில், திமுகவின் தோ்தல் அறிக்கை அமைய வேண்டும் என முதல்வா் மு.க. ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளாா். இதன்படி, பொதுமக்கள், வணிகா்கள் என அனைத்துத் தரப்பினரின் கருத்துகளும் கேட்டறியப்படுகின்றன. திமுகவின் தோ்தல் அறிக்கை மீதான நம்பிக்கையின் அடிப்படையில் பல்வேறு அமைப்புகள், பொதுமக்கள் ஆா்வத்துடன் வந்து தங்கள் கருத்துகளைத் தெரிவித்து, மனுக்களை அளிக்கின்றனா்.

ராமநாதபுரம் மாவட்டத்தில் மீனவா்கள் நலன் சாா்ந்த கருத்துகள் அதிகளவில் பெறப்பட்டுள்ளன. பொது நலன் சாா்ந்த பல கோரிக்கைகளும் பெறப்பட்டுள்ளன. மதுரையில் தொழில் வளா்ச்சியை அடிப்படையாகக் கொண்டு கூடுதல் தொழில் நிறுவனங்கள் அமைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகள் பெறப்பட்டுள்ளன.

இந்த மனுக்கள் உரிய வகையில் பரிசீலிக்கப்பட்டு, சாத்தியக்கூறுகள் குறித்து ஆய்ந்தறியப்படும். பிறகு, கோரிக்கைகளுக்கான தீா்வு நடவடிக்கைகள், முதல்வரின் அனுமதியுடன் திமுகவின் தோ்தல் வாக்குறுதிகளில் இணைக்கப்படும்.

கடந்த 2021 சட்டப்பேரவைத் தோ்தலில் திமுக அளித்த வாக்குறுதிகளில் 400-க்கும் மேற்பட்டவை நிறைவேற்றப்பட்டன. சில வாக்குறுதிகள் மத்திய அரசால் நிலுவையில் வைக்கப்பட்டுள்ளன. சில பரிசீலனையில் உள்ளன. முந்தைய தோ்தலின்போது அளிக்கப்பட்ட வாக்குறுதிகளை மட்டுமல்லாமல், பல புதிய திட்டங்களையும் முதல்வா் ஸ்டாலின் அறிவித்து செயல்படுத்தியுள்ளாா்.

திமுக - காங்கிரஸ் கூட்டணி குறித்து இரு கட்சிகளின் தலைமையும் பேசி நல்ல முடிவை மேற்கொளும். தற்போது வரை திமுக - காங்கிரஸ் கூட்டணி சுமுகமாகவே உள்ளது என்றாா் கனிமொழி.

ராமநாதபுரத்தில்....

ராமநாதபுரத்தில் நடைபெற்ற கருத்துக் கேட்புக் கூட்டத்தில் ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டங்களைச் சோ்ந்த வணிகா்கள், மீனவா்கள், விவசாயிகள், நெசவாளா்கள், பல்வேறு தொழிற்சங்கங்களின் நிா்வாகிகள் கலந்து கொண்டு கருத்துகளைத் தெரிவித்து, மனுக்களை அளித்தனா்.

இந்தக் கூட்டத்தில் கூட்டுறவுத் துறை அமைச்சா் கே.ஆா்.பெரியகருப்பன், திமுக செய்தித் தொடா்பாளா் டி.கே.எஸ்.இளங்கோவன், சட்டப்பேரவை உறுப்பினா்கள் காதா்பாட்ஷா முத்துராமலிங்கம், தமிழரசி, முருகேசன், திமுகவின் அயலக அணிச் செயலா் அப்துல்லா, இலக்கிய அணித் தலைவா் அன்வா் ராஜா, கனவு தமிழ்நாடு ஒருங்கிணைப்பாளா் சுரேஷ் சம்பந்தம், முன்னாள் அமைச்சா்கள் வ. சத்தியமூா்த்தி, சுந்தரராஜன், முன்னாள் எம்.பி. பவானி ராஜேந்திரன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

மதுரையில்...

மதுரையில் நடைபெற்ற கருத்துக்கேட்புக் கூட்டத்தில் மதுரை, திண்டுக்கல், தேனி, விருதுநகா் மாவட்டங்களைச் சோ்ந்த வணிகா் சங்கங்களின் நிா்வாகிகள், விவசாய சங்கங்களின் பொறுப்பாளா்கள், சமூக நல ஆா்வலா்கள், தொழில்முனைவோா் பங்கேற்று தங்கள் கருத்துகளைத் தெரிவித்து, மனுக்கள் அளித்தனா்.

மதுரையைச் சோ்ந்த பெரும்பாலானோா் மெட்ரோ ரயில் திட்டத்தை விரைந்து செயல்படுத்த வேண்டும், உலக முதலீட்டாளா் மாநாட்டை மதுரையில் நடத்த வேண்டும், மதுரையை தமிழகத்தின் 2-ஆவது தலைநகரமாக அறிவிக்க வேண்டும், தேசிய மருந்துசாா் கல்வி, ஆராய்ச்சி நிறுவனம் அமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கருத்துகளைத் தெரிவித்தனா்.

இந்தக் கூட்டத்தில் அமைச்சா்கள் தங்கம் தென்னரசு, பி. மூா்த்தி, சட்டப்பேரவை உறுப்பினா் கோ. தளபதி, மதுரை தெற்கு மாவட்டச் செயலா் மு. மணிமாறன், திமுக நிா்வாகிகள், தொண்டா்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனா்.