பிப். 23, 24-ல் மழைக்கு வாய்ப்பு! நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம் ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்சட்டப்பேரவைத் தேர்தல் : பிப். 26-ல் சிபிஎம் உடன் திமுக பேச்சுவார்த்தை!ஆப்கனில் பாகிஸ்தான் விமானப்படை தாக்குதல்! இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீதான வரியை 15% ஆக உயர்த்தினார் டிரம்ப்!
/

ராமநாதபுரம் மைய நூலகத்தில் இட நெருக்கடி: புத்தகங்கள் வீணாவதாக பொது மக்கள் புகார்

ராமநாதபுரம் மாவட்ட மைய நூலகத்தில் இட நெருக்கடி ஏற்பட்டுள்ளதால் புதிதாக வரும் புத்தகங்களை குப்பை போல குவித்து வைக்கும் நிலை ஏற்பட்டுள்ளதாக புகார் எழுந்துள்ளது. 

News image
Updated On :31 ஜனவரி 2024, 7:59 am

ஜெயப்பாண்டி



ராமநாதபுரம் மாவட்ட மைய நூலகத்தில் இட நெருக்கடி ஏற்பட்டுள்ளதால் புதிதாக வரும் புத்தகங்களை குப்பை போல குவித்து வைக்கும் நிலை ஏற்பட்டுள்ளதாக புகார் எழுந்துள்ளது. 
ராமநாதபுரம் மாவட்ட மைய நூலகம் கடந்த 1956 ஆம் ஆண்டு முதல் செயல்பட்டுவருகிறது. தற்போது, பட்டணம்காத்தான் பகுதியில் சுமார் 5,892 சதுர அடி பரப்பளவில் தரைத்தளம், முதல் மாடி என நூலகம் செயல்படுகிறது. இந்த வளாகத்தில் மக்களவைத் தொகுதி உறுப்பினர்கள் நிதி மூலம் கட்டப்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கும், போட்டித் தேர்வுகளுக்கும் தனித்தனி கட்டடம் இருந்தாலும் அவை செயல்பாட்டில் இல்லை. 
இதனால், போட்டித் தேர்வுக்கு படிக்க விரும்புவோர் நூலக பிரதான அறையின் மின்சாதனங்களின் அருகில் அமர்ந்து ஆபத்தான நிலையில் படித்து வருகின்றனர். மைய நூலகத்துக்கு தினமும் சுமார் 200 பேர் வருகின்றனர். ஆனால், பிரதான அறையில் 50 பேர் மட்டுமே அமர்ந்து படிக்கும் வசதி உள்ளது. இதனால், பெரும்பாலானோர் புத்தகங்களை வீட்டுக்கு வாங்கிச் சென்று படிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. தமிழக நூலகத் துறை சார்பில் 3 ஆண்டுகளுக்கு ஒரு முறையே புதிய புத்தகங்கள் அளிக்கப்படுகிறது. அதன்படி தற்போது சுமார் 1.50 லட்சம் புத்தகங்கள் மைய நூலகத்துக்கு அந்தந்த பதிப்பகங்களின் மூலம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. 
 கொல்கத்தாவில் உள்ள ராஜாராம் மோகன்ராய் அறக்கட்டளை மூலம் ஆண்டு தோறும் அனுப்பி வைக்கப்படும் சுமார் 29 ஆயிரம் புத்தகங்கள் உள்பட சுமார் 2 லட்சம் புத்தகங்கள் வந்துள்ள நிலையில், அவற்றை பாதுகாப்பாக வைக்க நூலகக் கட்டட வளாகத்தில் இடமில்லை. இதனால், புத்தக கட்டுக்கள் பிரிக்கப்படாமலே குப்பை போல நூலக பிரதான அறையில் குவிக்கப்பட்டுள்ளன. 
இதனால், வழக்கமாக நூலகத்துக்கு வரும் வாசகர்களுக்கு இடையூறு ஏற்படுகிறது. மேலும், புத்தகங்களை மாவட்டத்தில் உள்ள 58 கிளை நூலகங்களுக்கு பிரித்துக் கொடுக்கும் வகையில் நூலகச் சீலிடும் பணி தற்போது தொடங்கப்பட்டுள்ளது. அப்பணிக்காக மாற்றுத்திறனாளிகளுக்கான நூலகக் கட்டடம், போட்டித் தேர்வுக்கான நூலகக் கட்டடத்தில் புத்தகங்கள் அடுக்கப்பட்டுள்ளன. மொத்தத்தில் புதிய புத்தகங்களின் கட்டுக்கள் குவியல் குவியலாக நூலக வளாகத்தில் குவிக்கப்பட்டு, அவை சேதமடையும் நிலை ஏற்பட்டுள்ளதாக வாசகர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.  
இது குறித்து மாவட்ட நூலகர் (பொறுப்பு) ஜெ.கண்ணன் கூறியது: ராமநாதபுரம் மாவட்ட மைய நூலகத்தில் லட்சக்கணக்கான புத்தகங்கள் உள்ளன. ஆனால், அவற்றை அடுக்கி வைக்கப் போதுமான இரும்பு அடுக்குகள் இல்லை. தற்போதைய அடுக்குகளுடன் புதிதாக 8 அடுக்குகள் தேவைப்படுகிறது. அடுக்குகள் வாங்க நூலகப் புரவலர்கள் உதவினால் நன்றாக இருக்கும். 
ஆண்டு தோறும் புதிய புத்தகங்கள் ஆயிரக்கணக்கில் வந்து கொண்டிருக்கும் நிலையில், அதை பாதுகாத்து, வாசகர்கள் எடுப்பதற்கான கட்டட வசதியும் இல்லை. இதுகுறித்து நூலகத்துறைக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போதைய நூலக கட்டடத்தின் மூன்றாவது மாடியில் கட்டடம் கட்டப்படுவது அவசியம் என்றார்.
வசூலிக்கப்படாத நூலக வரிப்பாக்கி!
ராமநாதபுரம் மாவட்ட மைய நூலகத்தில் புத்தகங்களை பாதுகாத்து அடுக்கி வைக்க போதிய இரும்பு அடுக்குகள் இல்லை என்றும், அதை யாராவது வாங்கித்தரவேண்டும் என்றும் மாவட்ட நூலக அலுவலர் பொறுப்பு அதிகாரி கூறுகிறார். ஆனால், பொதுமக்களிடமிருந்து ராமநாதபுரம் சிறப்பு நகராட்சியும் மற்ற நகராட்சிகளும், ஊராட்சி நிர்வாகங்களும் நூலக வரியை ஆண்டு தோறும் வசூலிக்கின்றன. அந்த நிதியை நூலகத்துக்கு நகராட்சி மற்றும் ஊராட்சி நிர்வாகங்கள் முறையாகச் செலுத்துவதில்லை. 
தற்போதைய நிலவரப்படி நூலகத்துறைக்கு ராமநாதபுரம், ராமேசுவரம், பரமக்குடி உள்ளிட்ட நகராட்சி சார்பில் சுமார் ரூ.1.50 கோடிகள் செலுத்தவில்லை என்று நூலகத்துறை அதிகாரிகள் கூறுகின்றனர். நூலக வரியை வசூலித்தாலே தேவையான கட்டடம் மற்றும் புத்தக அடுக்குகளை வாங்கிக் கொள்ளலாம் என வாசகர்கள் தெரிவிக்கின்றனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.