முழுமை பெறாத மூக்கையூர் துறைமுகம்!
ராமநாதபுரம் மாவட்டம் மூக்கையூரில் திறக்கப்பட்டுள்ள மீன்பிடி துறைமுகத்தில் அடிப்படை வசதிகளுக்கான பணிகள் முழுமையாக முடியாததால் அதை மீனவர்கள் பயன்படுத்த


தேவை தண்ணீர் வசதி; படகுகளை நிறுத்த கடலில் ஆழம்
ராமநாதபுரம் மாவட்டம் மூக்கையூரில் திறக்கப்பட்டுள்ள மீன்பிடி துறைமுகத்தில் அடிப்படை வசதிகளுக்கான பணிகள் முழுமையாக முடியாததால் அதை மீனவர்கள் பயன்படுத்த இயலாத நிலை ஏற்பட்டுள்ளது.
சாயல்குடி அருகே உள்ள மூக்கையூர் ஊராட்சியில் பூப்பாண்டியபுரம், குதிரைமொழி, கன்னிகாபுரி, வடக்கு மூக்கையூர் ஆகிய கிராமங்கள் உள்ளன. இங்குள்ள சுமார் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் விசைப் படகு மற்றும் நாட்டுப்படகுகள் மூலம் மீன்பிடி தொழில் செய்து வருகின்றனர்.
மூக்கையூர் பகுதி கடலில் அதிவேகமாக வீசும் காற்றால் படகுகளை கரையோரம் நிறுத்த முடியாமல் மீனவர்கள் மண்டபம், தங்கச்சிமடம் பகுதிகளுக்கு சென்று மீன்பிடித்து வந்தனர். அதற்கு மண்டபம் பகுதி மீனவர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் எல்லை தாண்டிச் சென்று மீன் பிடிக்கும் நிர்பந்தம் ஏற்பட்டது. இதனால் மூக்கையூர் மீனவர்கள் அடிக்கடி இலங்கை கடற்படையின் தாக்குதலுக்கு ஆளாகி வந்தனர்.
இப் பிரச்னைக்கு தீர்வு காணும் வகையில் மூக்கையூரில் மீன்பிடி துறைமுகம் அமைக்கும் திட்டம் கடந்த 2016 ஆம் ஆண்டு தமிழக சட்டப்பேரவையில் அறிவிக்கப்பட்டது. மத்திய, மாநில அரசுகளின் நிதி உதவியுடன் ரூ.114 கோடியில் துறைமுகப் பணிகள் கடந்த 2017 மார்ச்சில் தொடங்கின.
மூக்கையூர் துறைமுகத் திட்டத்தில், காற்றின் வேகத்தைத் தடுக்கும் சுவர் அமைப்பு முக்கிய அம்சமாகும். அதன்படி சுமார் 950 மீட்டருக்கு சுவர் அமைக்க வேண்டும். ஆனால் தென் மேற்கில் 350 மீட்டருக்கும், வட மேற்கில் 300 மீட்டருக்கும் மட்டுமே சுவர் அமைத்துள்ளனர். மேலும் 300 மீட்டருக்கு சுவர் அமைக்கவில்லை. இதனால், காற்றின் வேகம் எதிர்பார்த்தபடி தடுக்கப்படவில்லை.
மேலும் துறைமுகத்துக்குள் படகுகளை நிறுத்தும் இடங்களில் சுமார் 4 மீட்டர் ஆழம் இருக்க வேண்டும். ஆனால், தற்போது ஒரு மீட்டர் அளவுக்கே ஆழம் உள்ளது. அந்த இடத்தில் பாறைகள் இருப்பதால் அதை ஆழப்படுத்த பிரத்யேக கருவிகள் உள்ள கப்பல் தேவை. அதற்கான நடவடிக்கை தற்போதுதான் தொடங்கப்பட்டுள்ளது. துறைமுகத்தில் 250 விசைப் படகுகள் மற்றும் 250 நாட்டுப் படகுகளை நிறுத்தலாம் எனக் கூறப்பட்டாலும் இங்கு அதற்கான வசதிகள் ஏதுமில்லை. காற்றின் வேகம் தடுக்கப்படாமலும், படகுகளை நிறுத்த போதிய ஆழமில்லாமலும் இருப்பதால் துறைமுகத்தை எப்படி பயன்படுத்த முடியும் என மீனவர்கள் கேள்வி எழுப்புகிறார்கள். இதுகுறித்து மூக்கையூர் மீனவர்கள் சங்க முன்னாள் தலைவர் டி. ஜோசப் கூறியது: எந்த நோக்கத்துக்காக துறைமுகம் அமைக்கப்பட்டதோ அது இதுவரையில் நிறைவேறவில்லை. விரைவில் காற்றுத் தடுப்புச் சுவரும், கடலை ஆழப்படுத்தும் பணியும் தொடங்கும் என அதிகாரிகள் உறுதியளித்துள்ளனர் என்றார்.
தற்போது திறக்கப்பட்டுள்ள துறைமுகத்தில் தொலைத் தொடர்பு வசதிக்கான கோபுரம், மீன் ஏலக் கூடம், மீனவர்கள் ஓய்வறைகள், வலை பின்னும் கூடம், படகு இயந்திரப் பாதுகாப்பு அறைகள், படகு பழுதுநீக்கும் கூடம், மேல்நிலை மற்றும் கீழ் நிலை நீர்த்தேக்கத் தொட்டிகள், மின்னாக்கி, நிர்வாக அறை உள்ளிட்ட வசதிகள் உள்ளன. ஆனால், குடிக்கவும், கழிப்பறைகளுக்கும் கூட தண்ணீரை விலைக்கே வாங்கும் நிலை உள்ளது.
காவிரிக் கூட்டுக் குடிநீர் திட்டத்தில் தினமும் 10 ஆயிரம் லிட்டர் தண்ணீர் பெற முடிவானது. ஆனால் குடிநீர் வடிகால் வாரியத்துக்கு ஆண்டுக்கு ரூ.3 லட்சம் கட்டணம் செலுத்த வேண்டும் என்பதால் அத்திட்டம் கைவிடப்பட்டுள்ளது. மேலும், குதிரைமொழி எனும் இடத்திலிருந்து ஆழ்துளைக்கிணறுகள் அமைத்து 3 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள துறைமுகத்துக்கு தண்ணீர் கொண்டு வர திட்டமிட்டுள்ளதாக கட்டுமானப் பொறியாளர்கள் கூறுகின்றனர்.
தண்ணீர் வசதி இல்லாத நிலையில், துறைமுகத்தில் பயன்பாட்டுக் கழிவு நீரை சுத்திகரித்து மறுசுழற்சிக்கு பயன்படுத்த ரூ.75 லட்சத்தில் கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையத்துக்கான கட்டுமானப் பணிகளும் தொடங்கப்பட்டுள்ளன.
மே மாதம் முதல் பயன்பாட்டுக்கு வரும்'
முழுமையான அடிப்படை வசதிகள் கூட இல்லாத நிலையில், துறைமுகம் திறக்கப்பட்டது குறித்து மீன்வளர்ச்சித்துறை அதிகாரிகள் கூறியது: துறைமுகப் பணிகள் பெருளவு முடிந்து விட்டன. தடுப்புச் சுவர், குடிநீர் இணைப்பு போன்ற சில பணிகள் மட்டுமே பாக்கி உள்ளன. ஓரிரு மாதங்களில் பணிகள் முழுமையாக முடிக்கப்பட்டு வரும் மே மாதத்திலிருந்து துறைமுகம் முழுமையாக பயன்பாட்டுக்கு வரும் என்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...