பிப். 23, 24-ல் மழைக்கு வாய்ப்பு! நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம் ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்சட்டப்பேரவைத் தேர்தல் : பிப். 26-ல் சிபிஎம் உடன் திமுக பேச்சுவார்த்தை!ஆப்கனில் பாகிஸ்தான் விமானப்படை தாக்குதல்! இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீதான வரியை 15% ஆக உயர்த்தினார் டிரம்ப்!
/

மழை நீரையும், வைகைத் தண்ணீரையும் சேமிக்காததால்: வறண்டு கிடக்கும் ராமநாதபுரம் நகராட்சி ஊருணிகள்!

தொடர்ந்து பெய்த மழைநீரையும், வந்து சேர்ந்த வைகை அணைத் தண்ணீரையும் சேமிக்க போதிய

News image
Updated On :30 ஜனவரி 2024, 5:41 pm

ஜெயப்பாண்டி

தொடர்ந்து பெய்த மழைநீரையும், வந்து சேர்ந்த வைகை அணைத் தண்ணீரையும் சேமிக்க போதிய நடவடிக்கை எடுக்காத காரணத்தால் ராமநாதபுரம் நகராட்சிக்குள் உள்ள ஏராளமான ஊருணிகள் வறண்டு காணப்படுவதாக மக்கள் ஆதங்கப்படுகின்றனர்.
    ராமநாதபுரம் நகராட்சியில் 33 வார்டுகள் உள்ளன. அவை நான்கு மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன. இதில் நான்காவது மண்டலப் பகுதியில் மட்டும் 12 ஊருணிகள் உள்ளன. அவற்றில் குறிப்பிடத்தக்க ஊருணிகளாக இருப்பவை கிடாவெட்டி ஊருணிகளாகும். 
  கிடாவெட்டி பிரதான ஊருணி, இரண்டாவது ஊருணி என இரு இடங்களில் அவை அடுத்தடுத்து 200 மீட்டர் இடைவெளியில் அமைந்துள்ளன. இந்த ஊருணிகளைச் சுற்றிலும் தேவிபட்டிணம் சாலைப் பகுதி, புதுத்தெரு, பாரதியார் தெரு, முத்துகோரக்கி தெரு, ஆண்டுகொண்டார் வடக்குத் தெரு, தெற்கு ரதவீதி, தர்மதாவல விநாயகர் கோவில் தெரு, காளிகாதேவி கோவில் தெரு, கோவில் கிழக்குத் தெரு, நகராட்சி அலுவலக பகுதி, சந்தைகள் என பல முக்கிய பகுதிகள் உள்ளன.
 கிடாவெட்டி ஊருணிகள் கழிவு நீர் தேங்கும் வகையில் இருந்தன. பொதுமக்கள் கோரிக்கையை அடுத்து கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு அப்பகுதியில் பாதாள சாக்கடைத் திட்டம் செயல்படுத்தப்பட்டது. இதனால் ஊருணிகளில் கழிவு நீர் கலப்பது தடுக்கப்பட்டு, மழை நீர் சேமிக்கும் வகையில் அவை சீரமைக்கப்பட்டன. கிடாவெட்டி முதலாவது ஊருணி 15 அடி ஆழம் தோண்டப்பட்டு அதன் வடக்குப்புறத்தில் நீர் உள்ளே வரவும், வெளியேறவும் கால்வாய் அமைப்பும் ஏற்படுத்தப்பட்டன. 
 சீரமைக்கப்பட்ட கிடாவெட்டி முதலாவது ஊருணிக்கு அருகேயுள்ள ஊருணியில் இருந்து தண்ணீர் கொண்டு வர கால்வாயும் சீரமைக்கப்பட்டது. ஆனால், தொடர் பராமரிப்பு இல்லாததால் தனியார் ஆக்கிரமிப்பால் கால்வாயானது இரண்டடி அகல அகலமுள்ள வாய்க்காலாகிவிட்டது. வாய்க்காலிலும் குப்பைகளும் கூழங்களும் நிரம்பியதால் தண்ணீர் செல்ல முடியவில்லை. இதனால், கிடாவெட்டி இரண்டாவது ஊருணி பெருகிய நிலையில், முதலாவது ஊருணி காய்ந்தே கிடக்கிறது. 
 ராமநாதபுரம் நகராட்சியில் பெரும்பாலான ஊருணிகள் வறண்டிருக்கும் நிலையில் தொடர் மழையில் வந்த தண்ணீரானது சாலையோரங்களில் குளம் போலத் தேங்கியுள்ளன. இதனால் அதில், கொசு உற்பத்தியாகி சுகாதாரச் சீர்கேட்டை ஏற்படுத்துவதாக மக்கள் கூறுகின்றனர்.  அரண்மனை வீதி, அக்ராஹரம்  சாலை, காயக்காரி அம்மன் கோவில் தெரு, மார்க்கெட் பகுதி என அனைத்து இடங்களிலும் சாலையோரங்களில் தண்ணீர் தேங்கிக் காணப்படுகின்றது. 
  ""ஊருணிகளில் தண்ணீரைத் தேக்கிட மாவட்ட, நகராட்சி நிர்வாகங்கள் போதிய நடவடிக்கை எடுத்திருந்தால் நிலத்தடி நீர் மட்டம் பெருகி கோடைகாலத்தில் மக்கள் அடிப்படைத் தேவைகளுக்குக் கூட நீரை விலைக்கு வாங்கும் அவலம் தடுக்கப்பட்டிருக்கும். ஆனால், மாவட்ட, நகராட்சி நிர்வாகங்களோ இதில் அக்கறை காட்டவில்லை'' என்பது மக்கள் கருத்து.
இதுகுறித்து நகராட்சி சுகாதாரப் பிரிவு அதிகாரிகள் கூறியது: நகராட்சிக்கு கடந்த சில மாதங்களாக ஆணையர் இல்லை. ராமேசுவரம் ஆணையரே பொறுப்பு வகிக்கிறார். ஆகவே விரைவில் ஆணையர் நியமிக்கப்பட்டதும் சாலை, மழை நீர் வடிகால் வசதிகள் சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.