பிப். 23, 24-ல் மழைக்கு வாய்ப்பு! நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம் ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்சட்டப்பேரவைத் தேர்தல் : பிப். 26-ல் சிபிஎம் உடன் திமுக பேச்சுவார்த்தை!ஆப்கனில் பாகிஸ்தான் விமானப்படை தாக்குதல்! இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீதான வரியை 15% ஆக உயர்த்தினார் டிரம்ப்!
/

ராமநாதபுரம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் இடநெருக்கடி, செவிலியர் பற்றாக்குறையால் நோயாளிகள் அவதி!

ராமநாதபுரம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் நோயாளிகளின் எண்ணிக்கை ஆண்டுக்காண்டு

News image
Updated On :30 ஜனவரி 2024, 5:56 pm

ஜெயப்பாண்டி

ராமநாதபுரம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் நோயாளிகளின் எண்ணிக்கை ஆண்டுக்காண்டு அதிகரித்து வரும் நிலையில், இடநெருக்கடி, செவிலியர் பற்றாக்குறை மற்றும் முழுமையான சிகிச்சை வசதிகளின்றி பொதுமக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர். 
ராமநாதபுரம் மாவட்டத்தில் சுமார் 14 லட்சம் மக்கள் உள்ளனர். நகரில் மட்டும் சுமார் 1 லட்சம் பேர் உள்ளனர். இவர்களுக்கான மருத்துவ சிகிச்சைக்கு மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை உள்ளது. 
14.8 ஏக்கரில் அமைந்துள்ள இம்மருத்துவமனையில், அவசரச் சிகிச்சை உள்ளிட்ட 13-க்கும் அதிகமான பிரிவுகள் 13.5 ஏக்கரில் உள்ளன. இங்கு, தினமும் சுமார் 6 ஆயிரம் பேர் வெளிநோயாளிகளாகச் சிகிச்சைப் பெற்றுச் செல்கின்றனர். இதில், 2,500-க்கும் மேற்பட்ட பெண்களும், ஆயிரத்துக்கும் மேற்பட்ட குழந்தைகளும் அடங்குவர். 
மருத்துவமனையில் மொத்தம் 613 படுக்கைகளே உள்ள நிலையில், தினமும் உள்நோயாளிகளாக 200-க்கும் அதிகமானோர் சேர்க்கப்படுகின்றனர். ஆனால், இவர்களில் கால்வாசி பேருக்கு மட்டுமே இட வசதியுள்ளது. விஷம் குடிப்பவர்கள், காய்ச்சல் உள்ளிட்டவற்றுக்கு அதிகமானோர் சிகிச்சை பெற வருவதால், போதிய படுக்கை வசதியின்றி தரையில் படுக்க வைத்து சிகிச்சை அளிக்கும் நிலை தொடர்கிறது. 
மருத்துவமனையில் எக்ஸ்ரே, ஸ்கேன் உள்ளிட்ட வசதிகள் உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்ட பிறகே அமைக்கப்பட்டுள்ளன. அதிலும், முழுமையான சிகிச்சைகள் பெற முடியவில்லை என்ற புகாரும் கூறப்படுகிறது. 
தற்போது, மருத்துவமனையில் 61 மருத்துவர்களும், 131 செவிலியர்களும் பணியில் உள்ளதாகக் கூறப்படுகிறது. செவிலியர்கள் 240 பேர் தேவை என்ற நிலையில், அதில் பாதியளவே பணியில் உள்ளனர். இதனால், நோயாளிகளுக்கு முழுமையான சிகிச்சை அளிக்க முடியாத நிலை உள்ளது.
இங்கு, நரம்பு, சிறுநீரகம் சம்பந்தப்பட்ட சிகிச்சைக்கு முழுமையான வசதிகள் இல்லை. இதனால், இங்கு வரும் நோயாளிகளில் பாதிக்கும் மேற்பட்டோரை மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கின்றனர். 
ஆண்டுக்கு சுமார் 8 ஆயிரம் முதல் 10 ஆயிரம் நோயாளிகள் வரை மதுரைக்கு அனுப்பி வைக்கின்றனர். 
இதனால், நோயாளிகள் அலைக்கழிக்கப்படுவதாகப் புகார்கள் எழுந்துள்ளன. மேலும், விபத்து உள்ளிட்டவற்றில் காயமடைவோருக்கு உரிய நேரத்தில் சிகிச்சை அளிக்க முடியாத நிலை தொடர்கிறது. 
இந்நிலையில், கடந்த 2012 ஆம் ஆண்டு ராமநாதபுரத்தில் மருத்துவக் கல்லூரி அமைப்பதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டும், இன்னும் அதற்கான பூர்வாங்கப் பணிகள் கூட தொடங்கப்படவில்லை.
இது குறித்து மருத்துவமனைக் கண்காணிப்பாளர் ஜவஹர்லால் கூறியது: மருத்துவமனைக்கான உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த அரசுக்கு கருத்துரு  அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சரின் முயற்சியால் விரைவில் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை அமையும் என்றார். 

Story image

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.