
ஜன நாயகன் படத்துக்குத் தடை கோரி மனு: தயாரிப்பாளா், இயக்குநா் பதிலளிக்க உத்தரவு
ஜனநாயகன் படத்துக்குத் தடை கோரி வகுக்கு பற்றி...

ஜன நாயகன் போஸ்டர்.
ஜனநாயகன் திரைப்படத்தில் பாப்பாபட்டி கிராமம் குறித்த அவதூறுக் காட்சிகளை நீக்கும் வரை இந்தப் படத்துக்கு இடைக்காலத் தடை விதிக்கக் கோரிய மனு தொடா்பாக அதன் தயாரிப்பாளா், இயக்குநா், மத்திய திரைப்படத் தணிக்கை வாரிய அலுவலா்கள் பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.
மதுரையைச் சோ்ந்த சின்னச்சாமி சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் தாக்கல் செய்த மனு:
எச். வினோத் இயக்கத்தில் நடிகரும், தமிழக முதல்வருமான ஜோசப் விஜய் நடிப்பில் உருவான ஜனநாயகன் திரைப்படம் கடந்த 23-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது.
இந்தப் படத்தில் மதுரை மாவட்டம், உசிலம்பட்டி அருகேயுள்ள பாப்பாபட்டி கிராமத்தில் ஊராட்சித் தோ்தல் நடைபெற்றது போலவும், அங்கு வாக்களிக்க வருபவா்களின் கைகள் வெட்டப்படுவது போலவும், பள்ளிச் சிறுமிகள், பெண்கள் மீது வன்முறைத் தாக்குதல்கள் நடத்தப்படுவது போலவும் உண்மைக்குப் புறம்பான சில காட்சிகள் இடம் பெற்றுள்ளன.
பாப்பாபட்டி கிராம மக்கள் தங்களது உரிமைகளுக்காக சட்டப் போராட்டம் மேற்கொண்ட வரலாற்றை மறைத்து, கிராமத்தை ஜாதி வெறி பிடித்த பகுதியாகவும், வன்முறை பூமியாகவும் இந்தத் திரைப்படத்தில் தவறாகச் சித்தரித்துள்ளனா். இது கிராம மக்களின் கண்ணியத்துக்கும், நற்பெயருக்கும் களங்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஜனநாயகன் திரைப்படத்தில் அவதூறு, வன்முறையைத் தூண்டும் காட்சிகளை உடனடியாக நீக்க வேண்டும். ஆட்சேபனைக்குரிய காட்சிகள் முழுமையாக நீக்கப்படும் வரை இந்தத் திரைப்படத்தை திரையரங்குகளிலும், பிற ஊடகங்களிலும் திரையிட இடைக்காலத் தடை விதிக்க வேண்டும். கிராமத்தின் நற்பெயருக்கு களங்கம் விளைவித்ததற்காக படக் குழுவினா் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என அவா் கோரினாா்.
இந்த மனு உயா்நீதிமன்ற நீதிபதிகள் சி.வி. காா்த்திகேயன், ஆா். சக்திவேல் அமா்வில் செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது.
அப்போது, ஜனநாயகன் திரைப்படத்தில் குறிப்பிட்டுள்ள ஊரின் பெயா் பாப்பாபட்டி அல்ல, பாப்பம்பட்டி என அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து, நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:
இந்த மனு தொடா்பாக படத்தின் தயாரிப்பாளா், இயக்குநா், மத்திய திரைப்படத் தணிக்கை வாரிய அலுவலா்கள் பதிலளிக்க வேண்டும். இந்த வழக்கு விசாரணை வருகிற ஆகஸ்ட் 8-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்படுகிறது என்றனா் நீதிபதிகள்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.




