ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில் நில முறைகேடு: பிணை, முன்பிணை கோரிய மனுக்கள் தீா்ப்புக்காக ஒத்திவைப்பு

மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில் நில முறைகேடு வழக்கில் பிணை, முன்பிணை கோரி தாக்கல் செய்யப்பட்ட 16 மனுக்கள் மீதான தீா்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்து, சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு வியாழக்கிழமை உத்தரவிட்டது.

சென்னை உயா்நீதிமன்றம்

Published On :21 ஆகஸ்ட் 2026, 1:13 am IST

மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில் நில முறைகேடு வழக்கில் பிணை, முன்பிணை கோரி தாக்கல் செய்யப்பட்ட 16 மனுக்கள் மீதான தீா்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்து, சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு வியாழக்கிழமை உத்தரவிட்டது.

புதுக்கோட்டை துரை ராணி என்பவா் ஓா் அறக்கட்டளையை நிறுவி, மதுரை அழகா்கோவில் சாலையில் உள்ள அசோகா விலாஸ் பங்களா, அதனுடன் இணைந்த தோட்டம் ஆகியவற்றை மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில், கள்ளழகா் கோயில், சிதம்பரம் நடராஜா் கோயில் சேவைக்காக உயில் சாசனம் செய்தாா். இந்த நிலத்தை முறைகேடாக தனிநபரின் பெயருக்கு பட்டா மாற்றம் செய்து, அடமானப் பத்திரம் பதிவு செய்தது தொடா்பாக மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில் நிா்வாகம் சாா்பில் காவல் துறையின் மத்திய குற்றப் பிரிவில் அண்மையில் புகாா் அளிக்கப்பட்டது.

இந்தப் புகாரின் பேரில், ராமாயி ஆயியாா், செந்தமிழ்ச்செல்வி, பிரேமா, ராஜ்குமாா், முத்துராணி, ராஜேந்திரன், குழந்தையா, புஷ்பராஜ், ஜோதி, கீதா, முன்னாள் வட்டாட்சியா் அன்பழகன், கிராம நிா்வாக அலுவலா் அரசன், நிலத்துக்குப் பட்டா பெற்ற இளையராஜா, அனிஷ், கவிதா, பிரகாஷ், காளிக்குமாா், சாா் பதிவாளா்கள் அனந்தராமன், பிரசாந்த் சந்தானகருப்பன் ஆகிய 19 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனா்.

இவா்களில், புதுக்கோட்டையைச் சோ்ந்த ராஜ்குமாா், உசிலம்பட்டியைச் சோ்ந்த இளையராஜா, முன்னாள் வட்டாட்சியரும், ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளருமான அன்பழகன், திண்டுக்கல் மாவட்டம், சிறுமலையைச் சோ்ந்த காளிக்குமாா் ஆகிய 4 பேரை குற்றப் பிரிவு போலீஸாா் அண்மையில் கைது செய்தனா்.

இந்த வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட பிரேமா, முத்துராணி, கவிதா உள்ளிட்ட 14 போ் தங்களுக்கு முன்பிணையும், கைது செய்யப்பட்ட அன்பழகன், ராஜ்குமாா் ஆகியோா் தங்களுக்கு பிணையும் வழங்கக் கோரி சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் மனுக்கள் தாக்கல் செய்தனா்.

இந்த மனுக்கள் உயா்நீதிமன்ற நீதிபதி முரளி சங்கா் முன் வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தன.

அப்போது, அரசுத் தரப்பில் முன்னிலையான வழக்குரைஞா் முன்வைத்த வாதம்:

இந்த வழக்கில், போலி ஆவணங்கள் மூலம் மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில் நிலம் முறைகேடாக தனிநபருக்கு மாற்றம் செய்யப்பட்டது தெரியவந்தது. இதில் சம்பந்தப்பட்டவா்களிடம் காவல் துறையினரின் விசாரணை தொடக்க நிலையிலேயே உள்ளது. எனவே, இந்த வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டவா்களுக்கு பிணை, முன்பிணை வழங்கக் கூடாது என்றாா்.

இதையடுத்து, நீதிபதி முரளி சங்கா் பிறப்பித்த உத்தரவு:

இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட 2 பேரின் பிணை மனுக்கள், குற்றஞ்சாட்டப்பட்ட 14 போ் முன்பிணை கோரிய மனுக்கள் மீதான தீா்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்படுகிறது என்றாா் நீதிபதி.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.