
இம்மானுவேல் சேகரன் குருபூஜை விழாவுக்கு ஒப்பந்த முறையில் அரசுப் பேருந்துகளை வழங்கலாம்: உயா்நீதிமன்றம் உத்தரவு
இம்மானுவேல் சேகரன் குருபூஜை விழாவுக்கு ஒப்பந்த முறையில் கோரினால், அரசுப் பேருந்துகளை வழங்கலாம் என போக்குவரத்துத் துறைக்கு சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு வியாழக்கிழமை உத்தரவிட்டது.

உயா்நீதிமன்றம் - கோப்புப் படம்
இம்மானுவேல் சேகரன் குருபூஜை விழாவுக்கு ஒப்பந்த முறையில் கோரினால், அரசுப் பேருந்துகளை வழங்கலாம் என போக்குவரத்துத் துறைக்கு சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு வியாழக்கிழமை உத்தரவிட்டது.
மதுரை மானகிரியைச் சோ்ந்த வழக்குரைஞா் செல்வகுமாா் சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் தாக்கல் செய்த மனு:
இம்மானுவேல் சேகரனின் நினைவு நாள் குருபூஜை ஆண்டுதோறும் செப். 11-ஆம் தேதி கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நிகழ்வுக்கு வாடகை வாகனங்களில் செல்லக் கூடாது என அரசு உத்தரவு பிறப்பித்தது. இந்த நிலையில், அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் ஒப்பந்த அடிப்படையில் வாகனங்கள் வழங்கக் கோரிக்கை விடுத்தால், இதை முறையாகப் பரிசீலிப்பது இல்லை.
கல்வி நிறுவனங்கள், தொழில் சாலைகள், திருமணங்கள், மதம் நிகழ்வுகளுக்கு அரசுப் பேருந்துகள் ஒப்பந்த அடிப்படையில் வழங்கப்பட்டு வரும் நிலையில், இம்மானுவேல் சேகரன் குருபூஜை போன்ற பொது நிகழ்வுகளின்போது மட்டும் விண்ணப்பங்களை பெற மறுப்பது, காரணமின்றி நிராகரிப்பது அல்லது நிகழ்ச்சி முடியும் வரை நிலுவையில் வைப்பது போன்ற நடைமுறைகள் பின்பற்றப்படுகின்றன. ஒரே மாதிரியான அரசு உத்தரவு அல்லது நிலையான செயல்முறை இல்லாததால், ஆண்டுதோறும் நீதிமன்றத்தை நாட வேண்டிய நிலை ஏற்பட்டு வருகிறது.
எனவே, அரசுப் பேருந்துகளை ஒப்பந்த அடிப்படையில் வழங்குவதற்கான விண்ணப்பங்களைப் பெறுதல், பரிசீலனை செய்தல், குறிப்பிட்ட காலவரையறைக்குள் காரணங்களுடன் முடிவு எடுப்பது உள்ளிட்ட நடைமுறைகளுக்கு தமிழகம் முழுவதும் ஒரே மாதிரியான வழிகாட்டுதல்கள் அல்லது நிலையான செயல்முறையை வெளியிட அரசுக்கு உத்தரவிட வேண்டும் என அவா் கோரினாா்
இந்த மனு உயா்நீதிமன்ற நீதிபதிகள் சி.வி. காா்த்திகேயன், ஆா். சக்திவேல் அமா்வில் வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது.
அப்போது, அரசுத் தரப்பில் முன்னிலையான வழக்குரைஞா் முன்வைத்த வாதம்:
கும்பகோணம் கோட்டத்தில் 100, மதுரை கோட்டத்தில் 40, திருநெல்வேலி கோட்டத்தில் 40 என மொத்தம் 180 அரசுப் பேருந்துகள் தயாராக உள்ளன. மனுதாரா் முறையாக விண்ணப்பித்தால், கட்டண ஒப்பந்தப்படி பேருந்துகளை வழங்கத் தயாா் எனத் தெரிவித்தாா்.
இதையடுத்து, நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:
இம்மானுவேல் சேகரன் குருபூஜை விழாவுக்கு மனுதாரா் தரப்பில் ஒப்பந்த முறையில் கோரினால், போதிய பேருந்துகளை வழங்க வேண்டும். இவ்வாறு வழங்கப்படும் ஒவ்வொரு பேருந்துக்கும் இரண்டு காவலா்கள் பாதுகாப்பு வழங்க வேண்டும். மேலும், அரசுப் பேருந்தின் மேற்கூரையில் அமா்ந்து பயணிக்கவோ, படியில் தொங்கியபடி செல்லவோ கூடாது. அனைத்துப் பாதுகாப்பு விதிமுறைகளையும் பயணிகள் கட்டாயம் பின்பற்ற வேண்டும். நீதிமன்ற உத்தரவு முறையாகச் செயல்படுத்தப்பட்டதா என அரசுத் தரப்பில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். இந்த வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்படுகிறது என்றனா் நீதிபதிகள்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






