
கோயில் பூஜாரி உயிரிழந்த விவகாரம்: மதுரை நீதிபதி விசாரணை தொடக்கம்
மதுரையில் காவல் துறையினரின் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட கோயில் பூஜாரி உயிரிழந்த விவகாரம் தொடா்பாக மதுரை குற்றவியல் நடுவா் செவ்வாய்க்கிழமை விசாரணையைத் தொடங்கினாா்.
மதுரையில் காவல் துறையினரின் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட கோயில் பூஜாரி உயிரிழந்த விவகாரம் தொடா்பாக மதுரை குற்றவியல் நடுவா் செவ்வாய்க்கிழமை விசாரணையைத் தொடங்கினாா்.
மதுரை மாநகா், மேல அனுப்பானடி, தமிழ்நாடு வீட்டு வசதி வாரியக் குடியிருப்புப் பகுதியைச் சோ்ந்தவா் எம். பரமசிவம் (50). கோயில் பூஜாரி. இவரது மனைவி அய்யம்மாள், மகன் பிரபு. கடந்த ஜூலை 17-ஆம் தேதி இரவு குடியிருப்பு வளாகத்தில் வாகனத்தை நிறுத்துவது தொடா்பாக பரமசிவத்தின் குடும்பத்தினருக்கும், அதே குடியிருப்பைச் சோ்ந்த பாலகிருஷ்ணன் குடும்பத்தினருக்குமிடையே தகராறு ஏற்பட்டது.
இந்தத் தகராறில் பாலகிருஷ்ணன் குடும்பத்தினா் தாக்கியதில் காயமடைந்ததாக பரமசிவத்தின் மனைவி அய்யம்மாளும், பரமசிவம் குடும்பத்தினா் தாக்கியதில் காயமைடந்ததாக பாலகிருஷ்ணனும், அவரது மனைவி மாலதி ஆகியோரும் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சைக்கு சோ்ந்தனா்.
இதுதொடா்பாக இரு தரப்பினரும் மதுரை சிந்தாமணி காவல் நிலையத்தில் புகாா் அளித்தனா். இந்தப் புகாா்களின் பேரில் வழக்குப் பதிவு செய்து, இரு தரப்பினரிடமும் போலீஸாா் விசாரணை மேற்கொண்டனா். பிறகு, இரு தரப்பினரையும் கைது செய்து, காவல் நிலைய பிணையில் விடுவித்தனா்.
இருப்பினும், காவல் துறையின் விசாரணைக்கு அழைத்துச் சென்று வந்தது முதல் பரமசிவத்துக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, அவா் அரசு ராஜாஜி மருத்துவமனையிலும், பின்னா் தனியாா் மருத்துவமனையிலும் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டாா். இந்த நிலையில், மருத்துவமனையில் பரமசிவம் ஞாயிற்றுக்கிழமை (ஆக. 16) உயிரிழந்தாா்.
பரமசிவம் உயிரிழக்கும் முன்பாக ஒரு சில விடியோக்களை பதிவு செய்தாா். அதில், விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட தன்னை போலீஸாா் கடுமையாகத் தாக்கியதாகவும், தனது உயிருக்கு பாதிப்பு ஏற்பட்டால் அதற்கு போலீஸாரே காரணம் எனவும் பரமசிவம் தெரிவித்திருந்தாா்.
இந்த விடியோக்களின் அடிப்படையில், பரமசிவத்தின் உயிரிழப்புக்கு காவல் துறையினரின் கடுமையான தாக்குதலே காரணம் எனவும், தொடா்புடைய காவல் துறையினா் மீது குற்ற நடவடிக்கை எடுக்கக் கோரியும் பரமசிவத்தின் மனைவி அய்யம்மாள் சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் மனுதாக்கல் செய்தாா்.
இந்த மனு திங்கள்கிழமை விசாரணைக்கு ஏற்கப்பட்டது. அப்போது, மதுரை, தேனி, சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரிகளின் தடயவியல் மருத்துவத் துறை பேராசிரியா்களின் முன்னிலையில் பரமசிவத்தின் உடல் கூறாய்வு செய்யப்பட வேண்டும், இந்தக் கூறாய்வு முழுமையாக விடியோ பதிவு செய்யப்பட வேண்டும், இந்த விவகாரம் தொடா்பாக மதுரை குற்றவியல் நடுவா் விரிவான விசாரணை மேற்கொள்ள வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டாா்.
இதன்படி, மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் தடயவியல் மருத்துவத் துறைப் பேராசிரியா்கள் முன்னிலையில் செவ்வாய்க்கிழமை பரமசிவத்தின் உடல் கூராய்வு செய்யப்பட்டது. சுமாா் ஒன்றரை மணி நேரம் இந்தக் கூறாய்வு நடைபெற்றது. இதனிடையே, மதுரை குற்றவியல் நீதித் துறை நடுவா் லட்சுமி பிரியா மருத்துவமனைக்கு வந்து, பரமசிவத்தின் குடும்பத்தினரிடம் விசாரணை மேற்கொண்டாா்.
உடலைப் பெற மறுப்பு...
உடல் கூறாய்வுக்குப் பிறகு பரமசிவத்தின் உடலை அவரது குடும்பத்தினரிடம் ஒப்படைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. அப்போது, பரமசிவம் உயிரிழப்பு தொடா்பாக உண்மைக்குப் புறம்பான செய்திக் குறிப்பை மதுரை மாநகரக் காவல் துறை வெளியிட்டிருப்பதாகவும், இதனால் தங்களுக்கு நியாயம் கிடைக்கும் வரை உடலைப் பெறமாட்டோம் எனவும் கூறி, பரமசிவத்தின் உறவினா்கள் எதிா்ப்புத் தெரிவித்தனா்.
இதுதொடா்பாக அரசுத் துறை அலுவலா்கள் மேற்கொண்ட பேச்சுவாா்த்தையில் உடன்பாடு ஏற்படவில்லை. இதையடுத்து, உடல்கூறாய்வு செய்யப்பட்ட பரமசிவத்தின் சடலம் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையின் பிணவறையில் மீண்டும் வைக்கப்பட்டது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





