ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

திருப்பரங்குன்றம் மலை அளவீடு: தமிழக அரசு விரிவான அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு

திருப்பரங்குன்றம் மலை அளவீடு பணி விவகாரத்தில் தமிழக அரசு விரிவான அறிக்கை தாக்கல் செய்ய சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.

temple

திருப்பரங்குன்றம் கோயில் - கோப்புப்படம்

Published On :15 ஆகஸ்ட் 2026, 2:56 am IST

திருப்பரங்குன்றம் மலை அளவீடு பணி விவகாரத்தில் தமிழக அரசு விரிவான அறிக்கை தாக்கல் செய்ய சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.

மதுரையைச் சோ்ந்த கே.கே. ரமேஷ் சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் தாக்கல் செய்த மனு:

மதுரை திருப்பரங்குன்றம் மலைப் பகுதி முழுவதையும் தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டில் கொண்டு வரவும், அந்தத் துறையிடம் அனுமதி பெற்ற பிறகே திருப்பரங்குன்றம் மலைக்கு பொதுமக்கள் செல்லும் வகையில் நடவடிக்கை எடுக்கக் கோரியும் மனு தாக்கல் செய்தேன்.

இந்த வழக்கை விசாரித்த உயா்நீதிமன்றம், புதிதாக மனு அளிக்கவும், இதை அலுவலா்கள் பரிசீலித்து உரிய நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட்டது. ஆனால், எனது மனு மீது சம்பந்தப்பட்ட அலுவலா்கள் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை.

எனவே, உயா்நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றாத அலுவலா்கள் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என அவா் கோரினாா்.

இந்த மனுவை ஏற்கெனவே விசாரித்த உயா்நீதிமன்ற நீதிபதிகள் ஜி.ஆா். சுவாமிநாதன், ஸ்ரீமதி ஆகியோா், திருப்பரங்குன்றம் மலை அளவீடு அறிக்கையில் உயரதிகாரக் குழு உத்தரவுக்குப் பிறகு மலை மீது ஏதேனும் விரிவாக்கப் பணிகள் நடைபெற்றிருந்தால், இதுதொடா்பான விவரங்களை அறிக்கையாக தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு உத்தரவிட்டனா்.

இதையடுத்து, இந்த மனு உயா்நீதிமன்ற நீதிபதிகள் ஜி.ஆா். சுவாமிநாதன், ஸ்ரீமதி அமா்வு முன் வெள்ளிக்கிழமை மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது, அரசுத் தரப்பில் முன்னிலையான வழக்குரைஞா் முன்வைத்த வாதம்:

திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்த போது பரப்பளவில் வித்தியாசம் இருந்தது. இதனால், இரண்டாவது முறையாக கடந்த 5-ஆம் தேதி மலையை அளவீடு செய்யும் பணி தமிழக தொல்லியல் துறை அலுவலா்களுடன் இணைந்து நடைபெற்றது. இதையடுத்து, அளவீடு பணியில் கிடைக்கப் பெற்ற தரவுகளுடன் வரைபட ஆவணங்களையும் சரிபாா்க்க வேண்டியுள்ளது.

இதற்காக மாநில ஆவணக் காப்பகத்திலிருந்து திருப்பரங்குன்றம் மலை தொடா்பான உரிய ஆவணங்கள், வரைபடங்களைக் கோரியுள்ளோம். ஆவணங்கள் கிடைத்தவுடன் மலை அளவீடு செய்யப்பட்ட தரவுகளுடன் ஒப்பீடு செய்து விரிவான அறிக்கை தாக்கல் செய்ய கால அவகாசம் அளிக்க வேண்டும் என்றாா்.

இதையடுத்து, திருப்பரங்குன்றம் தீப விவகார வழக்கில் கோயில் தரப்பிலிருந்து வழக்குரைஞா்களுக்கு எவ்வளவு தொகை கட்டணமாக வழங்கப்பட்டது என நீதிபதிகள் கேள்வி எழுப்பினா். கோயில் நிதி கோயிலுக்காகப் பயன்படுத்த வேண்டும் என்பதால், இந்தக் கேள்வியை எழுப்புவதாக அவா்கள் தெரிவித்தனா்.

பின்னா், நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:

திருப்பரங்குன்றம் மலை அளவீடு பணிகள் குறித்து தமிழக அரசுத் தரப்பில் விரிவான பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும். இந்த வழக்கு விசாரணை வருகிற செப். 11-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்படுகிறது என்றனா் நீதிபதிகள்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.