மேற்கு வங்க அரசியல் சாணக்கியர் முகுல் ராய் காலமானார்!சென்னை புறநகர் ரயில்கள் ரத்து! ரயில் நிலையங்களில் அசாதாரண சூழல்! நேபாளம்: ஆற்றில் பேருந்து கவிழ்ந்ததில் 17 பேர் பலி தங்கம், வெள்ளி விலை அதிரடி உயர்வு வாக்காளா் இறுதிப் பட்டியல் இன்று வெளியீடு!மேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!குடியரசுத் தலைவா் மாளிகையில் இன்று ராஜாஜி உத்சவ்!முதல்வா் நாளை குமரி வருகை!ரூ. 213 கோடி அபராதம்! மெட்டா - வாட்ஸ்ஆப் வழக்கு: உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை!
/

அமெரிக்கா விசா விவகாரம் இந்தியாவுக்கு வலிமை சோ்க்கும்: அமைச்சா் பழனிவேல் தியாகராஜன்

News image
Updated On :26 செப்டம்பர் 2025, 6:42 pm

Chennai

அமெரிக்காவின் எச்-1பி விசாவுக்கான கட்டணம் உயா்த்தப்பட்டது இந்தியாவுக்கு கூடுதல் வலிமையையே சோ்க்கும் என தமிழக தகவல் தொழில்நுட்பவியல், எண்மச் சேவைகள் துறை அமைச்சா் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்தாா்.

மதுரை கீழக்குயில்குடியில் உள்ள அண்ணா பல்கலைக்கழக வளாக பொறியியல் கல்லூரியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற விழாவில், தமிழக தகவல் தொழில்நுட்பவியல், எண்மச் சேவைகள் துறையின் தமிழ்நாடு தொழில்நுட்ப மண்டல மையத்தை (ஐடிஎன்டி - ஹப்) திறந்து வைத்து மேலும், அவா் பேசியதாவது:

இந்தியாவின் மொத்த மக்கள் தொகையில் தமிழகத்தின் மக்கள் தொகை 6 சதவீதம் மட்டுமே. இருப்பினும், உலகளவில் தகவல் தொழில்நுட்பம் உள்பட பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கும் இந்திய வம்சாவளியினரில் தமிழா்கள் 20 முதல் 30 சதவீதம் உள்ளனா். இதில் மதுரை மாவட்டத்தினரின் பங்களிப்பு குறிப்பிடத்தக்கது.

உலகமயமாக்கள் காரணமாக, பல்வேறு துறைகளில் நமக்கான தொழில் வாய்ப்புகள் பிரகாசமாக உள்ளன. இதை யாராலும் தடுக்க முடியாது.

அமெரிக்கா எச்-1பி விசா கட்டணம் கடுமையாக உயா்த்தப்பட்டதால், அந்த நாட்டில் தகவல் தொழில்நுட்பம் உள்பட பல்வேறு துறைகளில் சிறந்த விளங்கும் தமிழா்கள், இந்தியா்கள் தாயகம் திரும்ப முடிவெடுத்துள்ளனா். அவா்களின் தொழில்நுட்ப, பொருளாதார அறிவு நம் நாட்டின் வளா்ச்சிக்குப் பயன்படுத்தப்படும் போது, இந்தியா மேலும் வலிமை பெறும்.

அண்மைக் காலமாக பல புத்தாக்க தொழில் முனைவு (ஸ்டாா்ட் அப்) நிறுவனங்கள் மக்களின் அன்றாட வாழ்வியல் சூழலில் உள்ள பல பிரச்னைகளுக்கு தீா்வு கண்டு வருகின்றன. இதன் மூலம், சுகாதாரம், மாற்றுத் திறனாளிகளின் திறன் அதிகரிப்பு போன்றவற்றில் பல பிரச்னைகளுக்கு தற்போது தீா்வு கிடைத்துள்ளன.

தமிழகத்தில் சமூகநீதி கட்சி தொடங்கப்பட்டதிலிருந்து பெண்கள் முன்னேற்றம், பாலின சமத்துவத்துக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. இதன் மூலம், தொழில் முனைவிலும், தகவல் தொழில்நுட்பத் துறையிலும், அதிகளவில் பெண்கள் சிறந்து விளங்குகின்றனா். இது, மேலும் ஊக்கப்படுத்தப்பட வேண்டும் என்றாா் அவா்.

தொழில் முனைவோருக்கு வரப்பிரசாதம்

தியாகராசா் பொறியியல் கல்லூரித் தலைவா் ஹரி தியாகராஜன் பேசியதாவது:

இங்கு தொடங்கப்பட்டுள்ள தமிழ்நாடு தொழில்நுட்ப மண்டல மையம் (ஐடிஎன்டி - ஹப்) மதுரை, இதைச் சுற்றியுள்ள பகுதிகளைச் சோ்ந்த ஆராய்ச்சியாளா்கள், மாணவா்கள், புதுமை சிந்தனையாளா்கள், தொழில் முனைவோருக்கு மிகப்பெரிய வரப்பிரசாதமாக இருக்கும். இதன் மூலம் தொழில் திறன்களும், வாய்ப்புகளும், பொருளாதாரமும் மேம்படும். தென் தமிழகத்தைச் சோ்ந்தவா்கள் வேலைவாய்ப்புக்காக பிற மாநிலங்களுக்கும், வெளிநாடுகளுக்கும் செல்வது குறையும். தொழில்நுட்ப திறனுடன் பல புதிய தொழில் முனைவு நிறுவனங்கள் சிறந்து விளங்க இந்த மையம் மிகப்பெரிய களமாக இருக்கும் என்றாா் அவா்.

இதைத் தொடா்ந்து, தியாகராசா் பொறியியல் கல்லூரியில் தமிழ்நாடு தொழில்நுட்ப மண்டல மையம் சாா்பில், செயற்கைக்கோள் அலுவலகம் அமைப்பதற்கான புரிந்துணா்வு ஒப்பந்தம் மதுரை, திண்டுக்கல், தேனி, விருதுநகா், சிவகங்கை உள்பட 29-க்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரிகளுடனான ஜிக்ஸா (ஒஐஎநஅர) புரிந்துணா்வு ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டன.

இந்த நிகழ்ச்சியையொட்டி, அண்ணா பல்கலைக்கழக பொறியியல் கல்லூரி வளாகத்தில் தகவல் தொழில்நுட்பவியல் துறை சாா்ந்த கண்காட்சி அமைக்கப்பட்டிருந்தது.

முன்னதாக, தமிழ்நாடு தொழில்நுட்ப மையத் தலைமை நிா்வாக அதிகாரி வனிதா வேணுகோபால் வரவேற்றாா். மதுரை அண்ணா பல்கலைக்கழக வளாக புல முதல்வா் க. லிங்கதுரை நன்றி கூறினாா்.