பிப். 23, 24-ல் மழைக்கு வாய்ப்பு! நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம் ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்சட்டப்பேரவைத் தேர்தல் : பிப். 26-ல் சிபிஎம் உடன் திமுக பேச்சுவார்த்தை!ஆப்கனில் பாகிஸ்தான் விமானப்படை தாக்குதல்! இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீதான வரியை 15% ஆக உயர்த்தினார் டிரம்ப்!
/

மதுரை மாவட்டத்தில் 65% பள்ளிகளில் விதி மீறல்! அங்கீகாரம் பெறாத 43 பள்ளிகளுக்கு அபராதம்

மதுரை மாவட்டத்தில் 65 சதவிகித பள்ளிகள் விதிகளை மீறி செயல்பட்டு வருவது சிறப்புக்குழு ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

News image
Updated On :30 ஜனவரி 2024, 4:05 pm

ஜெயப்பாண்டி

மதுரை மாவட்டத்தில் 65 சதவிகித பள்ளிகள் விதிகளை மீறி செயல்பட்டு வருவது சிறப்புக்குழு ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. மேலும் அங்கீகாரமே பெறாமல் செயல்பட்டு வந்த  மழலையர் மற்றும் தொடக்கப் பள்ளிகள், மத்திய பாடத்திட்ட பள்ளிகள் என 43 பள்ளிகளுக்கு தலா ரூ.1 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
   மதுரை மாவட்டத்தில் மொத்தம் 2134 பள்ளிகள் உள்ளன. இதில் அரசு பள்ளிகள் 1234,  அரசு உதவி பெறும் பள்ளிகள் 314,  தனியார் சுயநிதிப் பள்ளிகள் (மெட்ரிக்குலேசன்) 54,  மத்திய பாடத்திட்டத்தின் கீழ் செயல்படும் பள்ளிகள் 36  உள்ளன. 
      அரசு பள்ளிகளுக்கு அங்கீகாரம் ஒரு முறை மட்டுமே வழங்கப்படும்.  உதவி பெறும் மற்றும் தனியார் சுயநிதிப் பள்ளிகளுக்கு  மூன்றாண்டுகளுக்கு ஒரு முறை அனுமதி என்ற நிலை இருந்தது. தற்போது  ஆண்டுதோறும் அனுமதி புதுப்பிக்க விண்ணப்பிக்க வேண்டும். 
    பள்ளிகளின் அங்கீகாரத்தை பெறுவதற்கு  தீயணைப்பு சாதன சான்று, சுகாதாரச் சான்று, கட்டட உறுதிச்சான்று, கட்டட வரைமுறைச் சான்று ஆகியவற்றை முதன்மைக் கல்வி அலுவலகத்தில் வழங்கவேண்டும். தொடக்கப் பள்ளிகளுக்கு ஆரம்பத்தில் வாடகை கட்டடம் என்றாலும், பின்னர் அவை சொந்தக் கட்டடத்திலேயே இயங்கவேண்டும் என்பதும் முக்கியம். கட்டணம் வசூலிக்கவும் விதிகள் உள்ளன. ஆனால், சுயநிதிப் பள்ளிகளைப் போலவே அரசு உதவி பெறும் பள்ளிகளும் மறைமுகமாக கட்டணம் வசூலிப்பதும் தெரியவந்துள்ளது. 
  ஊரகப் பகுதியில் உள்ள பள்ளிகளுக்கு விளையாட்டு மைதானம் 2 ஏக்கரிலும், நகர்ப்புறங்களில் ஒரு ஏக்கரிலும் இருப்பது அவசியம். தொடக்கப் பள்ளிகளுக்கு தரைத்தளம் மற்றும் ஒரு மாடி மட்டுமே இருத்தல் வேண்டும் என்றும் வரையறுக்கப்பட்டுள்ளது. 
தொடக்கப் பள்ளிகளில் 30  குழந்தைகள் அமரும் வகுப்பறைகள் 20 அடி நீளம், 20 அடி அகலத்தில் இருத்தல் வேண்டும். அதில் 2 கதவுகள், 3 ஜன்னல்களும் இருத்தல் அவசியம்.  உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் தரைத்தளத்துடன் இரு மாடிகள் மட்டுமே கட்டப்படவேண்டும் என்பதும் விதியாகும்.  பள்ளிகளில் ஒரே நேரத்தில் 10 குழந்தைகள் பயன்படுத்தும் வகையில் கழிப்பறை வசதி தேவை. சுற்றுச்சுவர் அவசியம் என விதிமுறைகள் நீள்கிறது.   மதுரை மாவட்டத்தில் உள்ள பள்ளிகளில் விதிமுறைகள் முழுமையாக பின்பற்றப்பட்டுள்ளதா? என முதன்மைக் கல்வி அலுவலர் என். மாரிமுத்து உத்தரவின் பேரில்  தலைமை ஆசிரியர்கள் மற்றும்  ஆசிரியர் பயிற்றுநர்கள் அடங்கிய குழுவினர் கடந்த ஜூன் 15 ஆம் தேதி முதல் 22 ஆம் தேதி வரை ஆய்வு நடத்தினர்.  ஆய்வின் முடிவில் மெட்ரிக்குலேசன், உதவி பெறும் பள்ளிகள்  என 65 சதவிகிதப் பள்ளிகள் ஏதாவது ஒரு வகையில் விதிகளை மீறிச் செயல்பட்டு வருவது தெரியவந்துள்ளது.    
   மெட்ரிக்குலேசன் பள்ளிகளில் 50 சதவிகிதத்துக்கும் மேலாக தரைத்தளத்துடன் மூன்று மாடிகள் என விதி மீறி கட்டப்பட்டிருப்பதும், அங்கீகாரத்தை புதுப்பிக்காமல் இருப்பதும் தெரியவந்துள்ளது.  மத்திய அரசு கல்வித்திட்டத்தில் செயல்படும் 27 பள்ளிகளில்  14 பள்ளிகள் அங்கீகாரத்தை புதுப்பிக்கவில்லை. 
      உதவி பெறும் பள்ளிகளில் ஆசிரியர், மாணவர் விகிதப்படி ஆசிரியர்கள் உபரியாக இருப்பதும், விதிமீறி கட்டணம் வசூலிப்பதும் கண்டறியப்பட்டுள்ளது.
 ஆய்வு குறித்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் என்.மாரிமுத்து கூறியது:  இலவச கட்டாயக் கல்விச் சட்டப்படி மதுரை மாவட்டத்தில்  மழலையர் தொடக்கப்பள்ளிகள் 32, மத்திய பாடத்திட்டத்தின் கீழ் செயல்படும் சிபிஎஸ்இ, ஐசிஎஸ்இ, ஐசிஇ ஆகிய வகையில் 11 பள்ளிகள் என 43 பள்ளிகள் எந்தவித அங்கீகாரமும் பெறாதது கண்டறியப்பட்டுள்ளது. அந்தப் பள்ளிகளுக்கு தலா ரூ.1லட்சம் அபராதம் விதிக்கப்பட்டிருப்பதுடன், அங்கீகாரம் பெறாமல் செயல்படும் ஒவ்வொரு நாளுக்கும் தலா ரூ.10 ஆயிரம் அபராதமும் வசூலிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றார்.
அதிக கட்டணம் வசூல்:    தமிழகத்தில் மெட்ரிக்குலேசன் பள்ளிகளில் கட்டணம் வசூலிக்க குழு நியமிக்கப்பட்டுள்ளது. அதன்படி ஒவ்வொரு பள்ளியும் குறிப்பிட்ட தொகையை மட்டுமே வசூலிக்கவேண்டும். ஆனால், குழு நிர்ணயித்த கட்டணத்தை ரசீதுப்படியும், மீதத்தொகையை அறக்கட்டளை பெயரிலும் செலுத்தும்படி பெரும்பாலான தனியார் பள்ளிகள் பெற்றோர்களிடம் வசூலித்துவருகின்றன.  அதனடிப்படையில் ரூ.10 ஆயிரம் முதல் ரூ. 50 ஆயிரம் வரை கட்டணம் வசூல் நடக்கிறது.  உதவி பெறும் பள்ளிகளில் கல்விக் கட்டணம் வசூலிக்கக் கூடாது என கூறப்படுகிறது. ஆனால், 6 ஆம் வகுப்புக்கு ரூ.2 ஆயிரம் முதல் ரூ.10 ஆயிரம் வரை பள்ளிகள் கட்டணம் வசூலிப்பதாகவும் கூறப்படுகிறது. 

மைதானம், சொந்த கட்டடம்  இல்லாத  பள்ளிகள்
   தனியார் பள்ளிகள் அனைத்தும் ஆண்டுதோறும் அங்கீகாரத்தை ஆண்டுதோறும் முதன்மைக் கல்வி அலுவலர் மூலம் விண்ணப்பித்துப் புதுப்பிக்கவேண்டும். ஆனால், மதுரை மாவட்டத்தில் 50 சதவிகித மெட்ரிக்குலேசன் பள்ளிகள் கடந்த 2014 ஆம் ஆண்டுக்குப் பின்னர் அங்கீகாரத்தை புதுப்பித்து அனுமதி பெறவில்லை. அவர்கள் அங்கீகாரம் புதுப்பிக்க விண்ணப்பித்திருப்பதாக மட்டுமே குறிப்பிட்டு பள்ளிகளை நடத்திவருகின்றனர்.   தொடக்கப் பள்ளிகளில் 50 குழந்தைகளுக்கு 2 கழிப்பறைகளாவது இருத்தல் அவசியம். அதாவது ஒரே நேரத்தில் 10 குழந்தைகள் கழிப்பறைக்கு செல்லும் வகையில் வசதி இருத்தல் வேண்டும். ஆனால், 60 சதவிகிதம் பள்ளிகளில் இந்த விதிகள் பின்பற்றப்படவில்லை என்பது கண்டறியப்பட்டுள்ளது. 
   பள்ளிகளுக்கு சொந்தக் கட்டடம் இருத்தல் வேண்டும் என்பது விதி. ஆனால், 25 பள்ளிகளுக்கு சொந்தக் கட்டடம் இல்லை என்பது தெரியவந்துள்ளது. விளையாட்டு மைதானத்துக்கு உரிய இடம் 75 சதவிகித பள்ளிகளில் இல்லை.  
 பள்ளிகளின் கட்டடத்துக்கு உறுதித் தன்மை சான்று பெறுவது அவசியம். ஆனால் மதுரை மாவட்டத்தில் சுமார் 80 சதவிகித பள்ளிகளுக்கு கட்டட உறுதிச் சான்றுகள் பெறவில்லை. 
 பள்ளிகளில் 400 சதுர அடியில் வகுப்பறைகள் கட்டியிருக்கவேண்டும் என்பது விதிமுறை. ஆனால், மதுரை மாவட்டத்தில் 80 சதவிகிதப் பள்ளிகள் விதிமுறைப்படி வகுப்பறைகளை கட்டவில்லை. 
  பள்ளிகளை ஆய்வு செய்ய பள்ளிக் கல்வித்துறை, வருவாய்த்துறை, சுகாதாரப் பிரிவு, தீயணைப்புத்துறை, பொதுப்பணித்துறை ஆகியவை அடங்கிய குழு நியமிக்கப்பட்டு ஆய்வுகள் நடைபெறவேண்டும். ஆனால், மதுரை மாவட்டத்தில் தனிநபர் ஆய்வே மேற்கொள்ளப்படுவதாகவும், குழு ஆய்வு நடத்தப்படுவதில்லை என்றும் பெற்றோர்-ஆசிரியர் கழகத்தினர் ஆதங்கப்படுகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.