மதுரையில் சுற்றுலாப் பயணிகளுக்கு அடிப்படை வசதிகள் இல்லாத அவலம்! குண்டும் குழியுமான சாலைகள்: சுகாதாரமற்ற கழிப்பறைகள்
மதுரை மாநகருக்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்துவரும் நிலையில், அவர்களுக்கான அடிப்படைத் தேவைகள்


மதுரை மாநகருக்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்துவரும் நிலையில், அவர்களுக்கான அடிப்படைத் தேவைகள் செய்து தரப்படவில்லை என சுற்றுலா ஆர்வலர்கள் ஆதங்கப்படுகின்றனர்.
அமெரிக்கா, இங்கிலாந்து, ஜெர்மனி, பிரான்ஸ் , இலங்கை, மலேசியா, சிங்கப்பூர், கனடா, ஆஸ்திரேலியா என பல நாட்டவரும் மதுரைக்கு தமிழ் கலை, பண்பாடு தொடர்பான ஆய்வுகளுக்காக வருகின்றனர். மேலும், மதுரையில் மீனாட்சியம்மன் கோயில், திருமலை நாயக்கர் மகால், காந்தி நினைவு அருங்காட்சியகம், தமிழின் ஆரம்பகால வட்டெழுத்துகள் என பல அரிய இடங்களைக் காண அனைத்துத் தரப்பினரும் வந்து செல்கின்றனர்.
நவீன கழிப்பறைகள் இல்லை: மதுரைக்கு கடந்த 2006 ஆம் ஆண்டு வெளிநாட்டவர் 27 ஆயிரம் பேரும், வெளிமாநிலத்தவர் 33 லட்சம் பேரும் வந்ததாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில், கடந்த 2017 ஆம் ஆண்டு மதுரைக்கு வந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 35 லட்சத்தையும் தாண்டியுள்ளது. ஆனால் நகரில் உள்ள மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில் முதல் மகால் வரை எங்கும் வெளிநாட்டவர் பயன்படுத்துவதற்கான நவீன கழிப்பறைகள் இல்லை. அவர்களுக்கான முதலுதவி வசதி, பாதுகாக்கப்பட்ட குடிநீர் வசதி, தகவல் மைய வசதி செய்து தரப்படவில்லை.
மதுரையில் சமீபத்தில் அமைக்கப்பட்ட மின்னணு கழிப்பறைகளில் குறிப்பிட்ட நேரங்களில் மட்டுமே தண்ணீர் வசதி இருப்பதாகக் கூறப்படுகிறது. மின்னணு கழிப்பறைகள் குறித்த விழிப்புணர்வை வெளிநாட்டவர்களுக்கு அவர்கள் தங்கும் விடுதியிலே தெரியும் வகையில் நடவடிக்கை எடுத்தால் பயன் உண்டு.
காந்தி நினைவு அருங்காட்சியகத்தில் வெளிநாட்டவருக்கு என சிறப்பு கழிப்பறை வசதி செய்யப்பட்டதாகக் கூறப்படும் நிலையில், அங்கு பராமரிப்பு மற்றும் தண்ணீர் வசதி போதவில்லை என்கிறார்கள் வழிகாட்டிகள்.
சுற்றுலா ஆர்வலர்கள் வேதனை: மதுரை நகரில் ஏற்கெனவே சுற்றுலாப் பயணிகளுக்கு என அறிமுகப்படுத்தப்பட்ட சுற்றுலா ஆட்டோ, சுற்றுலா காவல்துறை மற்றும் கன்னியாகுமரி, கொடைக்கானல் ஆகிய ஊர்களுக்கு செல்லும் சுற்றுலாக் கழக பேருந்து வசதிகள் என எதுவும் தற்போது செயல்பாட்டில் இல்லை. ரயில் நிலையம், விமான நிலையம் என எந்த வழியில் வந்தாலும் சுற்றுலா இடங்களுக்குச் செல்ல சாலை வசதிகள் சீராக இல்லை . மேலும், சுற்றுலா அலுவலக வழிகாட்டும் மையங்கள் இருந்தும் அவை முழுமையான செயல்பாட்டில் இல்லை. சுற்றுலாப் பயணிகளுக்கான பிரச்னையைத் தீர்க்கும் வகையில் சுற்றுலா காவலர்கள் இல்லை. இதனால், சுற்றுலாப் பயணிகள் பாதுகாப்பற்ற நிலையை உணர்வதாகவும் கூறுகின்றனர். நாட்டிலே சுற்றுலாப் பயணிகள் அதிகம் வந்து செல்லும் மாநிலமாக தமிழகம் அடையாளம் காணப்பட்டுள்ளது. இந்நிலையில் மதுரையில் சுற்றுலாப் பயணிகளுக்கு என எந்த அடிப்படை வசதிகளும் முறையாகச் செயல்படுத்தாமலிருப்பது வேதனையாக உள்ளதாக சுற்றுலா ஆர்வலர்கள் கூறுகின்றனர்.
இருளடைந்த சித்திரை வீதிகள்
மதுரை நகரில் கடந்த 2006 ஆம் ஆண்டு முதலே சுற்றுலாத்துறை சார்பில் பல திட்டங்கள் நிறைவேற்றப்பட்டன. தெப்பக்குளத்தைச் சுற்றி நடைபாதை பூங்கா, இரும்பு நாற்காலிகள், மின்விளக்குகள், அமைக்கப்பட்டன. அங்கு போதிய பராமரிப்பின்றி இரும்பு நாற்காலிகள் காணாமல் போய் விட்டன. மீனாட்சி சுந்தரேசுவரர் கோயிலைச் சுற்றிய சித்திரை வீதிகளில் டைல்ஸ் பதித்து, கோயில் சுற்றுச்சுவரை ஒட்டி பூங்காக்கள், மின் விளக்குகள் அமைக்கப்பட்டுள்ளன. தற்போது மின்விளக்குகள் எரியாததால், சித்திரை வீதிகள் இரவில் இருளடைந்த நிலையில் உள்ளன. திருப்பரங்குன்றத்தில் மலைக்குப் பின்புறம் அமைக்கப்பட்ட சுற்றுச்சூழல் பூங்கா, போதிய பராமரிப்பின்றி பொலிவிழந்து காணப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...