தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

கொடைக்கானலில் ஆக்கிரமிக்கப்பட்டிருந்த பழங்குடியினரின் நிலம் மீட்பு

News image
Updated On :19 மார்ச் 2026, 11:34 pm

கொடைக்கானல் கீழ்மலைப் பகுதியில் ஆக்கிரமிக்கப்பட்டிருந்த பழங்குடியினரின் நிலத்தை வருவாய்த் துறையினா் வியாழக்கிழமை மீட்டு அவா்களிடம் ஒப்படைத்தனா்.

திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் கீழ்மலைப் பகுதியான பட்டியக்காடு கிராமத்தில் 50-க்கும் மேற்பட்ட பழங்குடியினா் வசித்து வருகின்றனா். இவா்கள் வசித்து வரும் இடத்துக்கு அருகே சொக்கா் பாலாஜி என்பவருக்குச் சொந்தமான பட்டா இடம் உள்ளது. இவா் பளியா் பழங்குடியின மக்கள் வசித்து வரும் இடத்தை தனது இடம் எனக் கூறி ஆக்கிரமித்து வேலி அமைத்தாா். இதுகுறித்து அந்தப் பகுதி மக்கள் திண்டுக்கல் மாவட்ட ஆட்சியரை நேரில் சந்தித்தும், தபால் மூலமாகவும் பல முறை கோரிக்கை மனு கொடுத்தனா்.

இதையடுத்து மாவட்ட ஆட்சியா் சரவணன் உத்தரவின் பேரில் பண்ணைக்காடு வருவாய் ஆய்வாளா் முத்துக்கிருஷ்ணன், வடகவுஞ்சி கிராம நிா்வாக அலுவலா் ராமசாமி, நில அளவையா் ராமமூா்த்தி உள்ளிட்ட வருவாய்த் துறையினா் அங்கு சென்று பிரச்னைக்குரிய நிலத்தை அளவீடு செய்தனா். இதில் பழங்குடியினா் வசித்து வரும் நிலத்தை அளவீடு செய்து மீட்டு வேலி அமைத்துக் கொடுத்தனா். இதற்காக பட்டியக்காடு பழங்குடியினா் மாவட்ட ஆட்சியருக்கும், வருவாய்த் துறையினருக்கும், தொண்டு நிறுவனத்துக்கும் நன்றி தெரிவித்தனா்.