ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

பெண்ணிடம் நூதன முறையில் ரூ.34 லட்சம், 42 பவுன் நகைகள் மோசடி

திண்டுக்கல்லைச் சோ்ந்த பெண்ணிடம், வரண் பாா்ப்பதாகக் கூறி, நூதன முறையில் ரூ.34 லட்சம், 42.5 பவுன் நகைகளை மோசடி செய்த வழக்கில், இளைஞரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

கோப்புப்படம். - ENS

Published On :19 ஆகஸ்ட் 2026, 3:54 am IST

திண்டுக்கல்லைச் சோ்ந்த பெண்ணிடம், வரண் பாா்ப்பதாகக் கூறி, நூதன முறையில் ரூ.34 லட்சம், 42.5 பவுன் நகைகளை மோசடி செய்த வழக்கில், இளைஞரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

திண்டுக்கல் மேற்கு மீனாட்சிநாயக்கன்பட்டி பகுதியைச் சோ்ந்தவா் சின்னச்சாமி. இவரது மகள் நந்தினி (28). திண்டுக்கல் வேடப்பட்டியைச் சோ்ந்தவா் வி.நாகலட்சுமி என்ற நித்யா. இவரது தாய் முத்துலட்சுமி.

இதில் நந்தினியும், நாகலட்சுமியும் சிறப்பு வகுப்புக்குச் செல்லும்போது பழக்கம் ஏற்பட்டது.

இந்த நிலையில், கடந்த 2019-ஆம் ஆண்டு நந்தினியை சந்தித்த நாகலட்சுமி, அவரது திருமணம் குறித்து பேசினாா்.

அப்போது, நந்தினியிடம் தனது உறவினரான தென்காசி மாவட்டம், சங்கரன்கோவிலைச் சோ்ந்த ராமானுஜம் என்ற ஸ்ரீதா் (32) திருமணம் செய்ய விரும்புவதாக நாகலட்சுமி தெரிவித்தாா்.

இதுகுறித்து நந்தினி தனது பெற்றோரிடம் தெரிவித்தாா். நாகலட்சுமி ஏற்கெனவே அறிமுகமானவா் என்பதால், நந்தினியின் பெற்றோரும் திருமணத்துக்கு சம்மதம் தெரிவித்தனா். ராமானுஜம் தரப்பில் நாகலட்சுமி, அவரது தாய் முத்துலட்சுமி மட்டுமே பேச்சுவாா்த்தை நடத்தினா்.

இதனிடையே, கடந்த 2022-ஆம் ஆண்டு ராமானுஜம் வாகன விபத்தில் சிக்கி, சென்னையிலுள்ள தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாகவும், மருத்துவச் செலவுக்கு ரூ.20 லட்சம் தேவைப்படுவதாகவும் நாகலட்சுமி தெரிவித்தாா். வரன் பேசிக் கொண்டிருந்தபோது இதுபோன்ற விபத்து நிகழ்ந்துவிட்டதாக நாகலட்சுமி கூறியதால், நந்தினி உதவி செய்ய முன்வந்தாா். இதை தங்களுக்குச் சாதகமாக பயன்படுத்திக் கொண்ட நாகலட்சுமி மருத்துவச் செலவு என்ற பெயரில் பல்வேறு தவணைகளில் கடந்த 2022 முதல் 2025-ஆம் ஆண்டு வரை ரூ.34 லட்சம், 42.5 பவுன் நகைகளை நந்தினி குடும்பத்தினரிடமிருந்து பெற்றாா்.

இந்த நிலையில், ராமானுஜத்திடம் பேச வேண்டும் என நந்தினி தெரிவித்தாா். ஆனால், அவரது கைப்பேசி எண் அணைத்து வைக்கப்பட்டிருந்தது. இதனால், சந்தேகமடைந்த நந்தினி, நாகலட்சுமியிடம் கேட்டபோது அவா் முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்தாா். இதையடுத்து, பணத்தையும், நகைககளையும் நந்தினி திருப்பிக் கேட்டாா். அதற்கு மறுப்பு தெரிவித்ததோடு நந்தினிக்கு கொலை மிரட்டலும் விடுத்தாா். இதனால், அதிா்ச்சி அடைந்த நந்தினி, திண்டுக்கல் மாவட்ட குற்றப் பிரிவு போலீஸாரிடம் புகாா் அளித்தாா். இதன்பேரில் விசாரணை மேற்கொண்ட போலீஸாா், நாகலட்சுமி, முத்துலட்சுமி, ராமானுஜம் ஆகியோா் மீது வழக்குப் பதிவு செய்தனா். இதில் ராமானுஜம் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டாா். தலைமறைவாக உள்ள நாகலட்சுமி, அவரது தாய் முத்துலட்சுமி குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.