பிப். 23, 24-ல் மழைக்கு வாய்ப்பு! நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம் ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்சட்டப்பேரவைத் தேர்தல் : பிப். 26-ல் சிபிஎம் உடன் திமுக பேச்சுவார்த்தை!ஆப்கனில் பாகிஸ்தான் விமானப்படை தாக்குதல்! இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீதான வரியை 15% ஆக உயர்த்தினார் டிரம்ப்!
/

மின்சார வசதிக்கு ஏங்கும் மலைக் கிராமம்! மருத்துவ வசதி பெற 25 கி.மீ. செல்லும் பரிதாபம்

மின்சார வசதிக்காக கடந்த கால்நூற்றாண்டாக காத்திருக்கும் சிறுவாட்டுக்காடு மலைக் கிராமமக்கள், மருத்துவ வசதி பெற 25 கி.மீ. தூரம்

News image
Updated On :29 ஜனவரி 2024, 10:59 am

ஆ. நங்கையார் மணி

மின்சார வசதிக்காக கடந்த கால்நூற்றாண்டாக காத்திருக்கும் சிறுவாட்டுக்காடு மலைக் கிராமமக்கள், மருத்துவ வசதி பெற 25 கி.மீ. தூரம் செல்வதற்கு போதிய வாகன வசதியில்லாமலும் அவதிப்பட்டு வருகின்றனர்.
 திண்டுக்கல் மாவட்ட வனக் கோட்டத்தில், கன்னிவாடி வனச்சரகத்தில் அமைந்துள்ளது சிறுவாட்டுக்காடு கிராமம். ஒட்டன்சத்திரம் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள வடகாடு ஊராட்சிக்குள்பட்ட இக்கிராமம், புலியங்கசம், செட்டுகாடு, தலையூத்துகாடு என 3 பகுதிகளாக உள்ளன. 110 வீடுகளில் சுமார் 500 பேர் வசித்து வருகின்றனர். இதில், மலைவாழ் இனத்தைச் சேர்ந்த பளியர் மற்றும் புலையர் இன மக்களே அதிக அளவில் உள்ளனர்.
 3 தலைமுறையாக இப்பகுதியில் வசித்து வரும் இம்மக்களுக்கு, இதுவரை மின்வசதி என்பது எட்டாக் கனியாகவே உள்ளது. கடந்த 1990-ஆண்டு தொடக்கத்தில் மின் இணைப்பு வழங்குவற்காக 55 மின்கம்பங்கள் அமைப்பதற்கு ஆய்வுப் பணிகள் முடிந்து, பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. வடகாடு அடுத்துள்ள பெத்தேல்புரம் பகுதியிலிருந்து சுமார் 4 கி.மீ. தூரம் காப்புக் காடுகள் வழியாக மின்பாதை அமைக்க வேண்டும் என்பதால், இத்திட்டத்திற்கு மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் ஒப்புதல் அளிக்கவில்லை. அதன் பின்னர், மின்சார வசதி என்பது இப்பகுதி மக்களுக்கு கனவாகவே உள்ளது.
 ஊராட்சி நிர்வாகத்தின் சார்பில் மேல்நிலைத் தொட்டி அமைத்து இப்பகுதியினருக்கு குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது. மின்சார வசதி இன்றி டீசல் மோட்டார் மூலம் இயக்கப்படுவதால், பல நேரங்களில் குடிநீர் விநியோகமும் பாதிக்கப்படுகிறது.
 இது குறித்து செட்டுக்காடு பகுதியைச் சேர்ந்த  ஏ.மங்களம் கூறுகையில், கடந்த 3 மாதங்களுக்கு முன்பு மோட்டார் பழுது என எடுத்துச் சென்றனர். தற்போது வரை திரும்பிவரவில்லை. இதனால், உறை கிணறு அமைக்கப்பட்டுள்ள இடத்திற்கு நடந்து சென்று ஏணி வைத்து மேல்நிலைத் தொட்டி மீது ஏறி வாளி மூலம் நீர் இரைத்து வருகிறோம் என்றார்.
 இந்த பகுதியைச் சேர்ந்த மக்களுக்கான ரேஷன் கடை, வடகாடு பகுதியில் உள்ளது. அதேபோல் மருத்துவ வசதி பெற வேண்டுமெனில், 25 கி.மீ. தூரத்தில் உள்ள ஒட்டன்சத்திரத்திற்கு செல்ல வேண்டும் என்கிறார் புலியங்கசத்தைச் சேர்ந்த வே.வனச்செல்வி கூறியதாவது:
 பேருந்து வசதியில்லாத நிலையிலும், சாலை மோசமான நிலையில் உள்ளது. இதனால், கட்டணம் செலுத்தி சரக்கு வாகனங்கள் மூலமாக ரேஷன் பொருள்களை எடுத்து வருகிறோம். அதே வாகனங்களுக்கு ரூ.300 செலுத்தி, மருத்துவ சிகிச்சை பெற ஒட்டன்சத்திரம் செல்லவும் பயன்படுத்துகிறோம். இந்த பகுதிக்கு சாலை வசதியை மேம்படுத்தி, 15 நாள்களுக்கு ஒருமுறை நடமாடும் மருத்துவமனை வந்து செல்வதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அதேபோல், ரேஷன் கடை, மின்வசதி மற்றும் பொது சுகாதார வளாகம் ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் என்றார்.

பயன்படாத தொலைக்காட்சிப் பெட்டி
மின்வசதியில்லாத இக்கிராமத்திற்கு, கடந்த 2001-06 திமுக ஆட்சியின்போது, இலவச வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டி வழங்கப்பட்டுள்ளது. வெளிச்சத்திற்காக, சூரிய மின் விளக்குகளை மட்டுமே நம்பியுள்ள இப்பகுதி மக்கள், அந்த தொலைக்காட்சிப் பெட்டிகளை தற்போது வரை பயன்படுத்தாமலேயே பாதுகாத்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.