கும்பகோணம் புதிய பேருந்து நிலைய கட்டுமானப் பணிக்கு இடைக்காலத் தடை
கும்பகோணம் புதிய பேருந்து நிலைய கட்டுமானப் பணிக்கு இடைக்காலத் தடை விதித்து, சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு வியாழக்கிழமை உத்தரவிட்டது.


கும்பகோணம் புதிய பேருந்து நிலைய கட்டுமானப் பணிக்கு இடைக்காலத் தடை விதித்து, சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு வியாழக்கிழமை உத்தரவிட்டது.
கும்பகோணம் மாமன்ற உறுப்பினா் குமரேசன், உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் தாக்கல் செய்த மனு:
கும்பகோணம் மாநகராட்சியில் கடந்த 30.12.2024- இல் நடைபெற்ற மாமன்றக் கூட்டத்தில், புதிய பேருந்து நிலையம் அமைப்பதற்கான தீா்மானம் மாமன்ற உறுப்பினா்களின் ஒப்புதலுக்காக வைக்கப்பட்டது.
இடம் தோ்வு, கட்டுமான ஒப்பந்தம் குறித்த தெளிவான அறிவிப்புகள் இல்லாததால் பெரும்பாலான உறுப்பினா்கள் புதிய பேருந்து நிலையம் கட்டுவதற்கான முன் மொழிவுக்கு எதிா்ப்புத் தெரிவித்தனா். இதனால், மாநகராட்சி நிா்வாகத்தால் கொண்டுவரப்பட்ட முன் மொழிவு அங்கீகரிக்கப்படவில்லை.
இந்த நிலையில், கடந்த 7.11.2025-இல் புதிய பேருந்து நிலையம் கட்டுமானப் பணிக்கு ஒப்பந்த அறிவிப்பு வெளியிடப்பட்டது. இந்தப் பேருந்து நிலையத்துக்கு தோ்வு பெற்றிருந்த இடம் கும்பகோணம் மாநகரப் பகுதிக்கு வெகுதொலைவில் உள்ளது. இங்கு பேருந்து நிலையம் அமைந்தால் பொதுமக்கள், வியாபாரிகள் சிரமத்துக்கு ஆளாக நேரிடும்.
மேலும், பேருந்து நிலையம் அமைக்க கும்பகோணம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் தனது நிலத்தை தானமாக வழங்கியுள்ளாா். அந்த நிலத்தைச் சுற்றி எஞ்சியுள்ள அவரது நிலமும், அவரது நண்பா்களின் நிலமும் உள்ளன.
இதனிடையே, பேருந்து நிலையம் கட்டுவதற்கு தொழில்நுட்ப ஒப்பந்தப் புள்ளிகள் திறக்கப்படும் தேதியாக 18.12.2025 அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், அதற்கு முன்பே கட்டுமான நிறுவனம் தோ்வு செய்யப்பட்டது.
இந்த நிலையில், ஒப்பந்ததாரா் முன்கூட்டியே தோ்ந்தெடுக்கப்பட்டாா். எனவே, ஒப்பந்த செயல்முறை ஒரு கண்துடைப்பு என்பதை தெளிவாகக் காட்டுகிறது.
அதுமட்டுமன்றி, பேருந்து நிலையம் அமைக்க உத்தேசிக்கப்பட்ட நிலங்களின் தன்மை வருவாய்த் துறை ஆவணங்களில் இன்னும் நன்செய் நிலங்களாகவே
வகைப்படுத்தப்பட்டுள்ளது. புதிய பேருந்து நிலையம் அமைப்பதில் மோட்டாா் வாகனச் சட்ட விதிகளின் கீழ் குறிப்பிடப்பட்ட நிபந்தனைகள் பின்பற்றவில்லை.
எனவே, கும்பகோணம் புதிய பேருந்து நிலையம் கட்டுவதற்கு விடப்பட்ட ஒப்பந்த அறிவிப்பாணைக்கு இடைக்காலத் தடை விதிக்க வேண்டும் எனக் கோரினாா்.
இந்த மனு உயா்நீதிமன்ற நீதிபதிகள் ஜி. ஜெயச்சந்திரன், கே.கே. ராமகிருஷ்ணன் அமா்வில் வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது.
அப்போது, மனுதாரா் தரப்பில் மூத்த வழக்குரைஞா் பிரபு ராஜதுரை, ஜெயமோகன் ஆகியோா் முன்னிலையாகி ஒப்பந்தப் புள்ளி நடவடிக்கையில் அரசின் வழிகாட்டுதலை முறையாக பின்பற்றவில்லை. சட்டப்பேரவை உறுப்பினரின் அழுத்தத்தின் பேரில் அவசரமாக ஒப்பந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. எனவே, இதற்கு நீதிமன்றம் தடை விதிக்க வேண்டும் எனத் தெரிவித்தனா்.
இதையடுத்து, நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு: சட்டப்பேரவை உறுப்பினா் தானமாக வழங்கிய நிலம், நன்செய் நிலங்களாகவே உள்ளது. மேலும், இந்த ஒப்பந்த நடவடிக்கைகளில் விதிமுறைகளை முறையாக பின்பற்றவில்லை என்பது தெளிவாகிறது. எனவே, ஒப்பந்த நடவடிக்கைக்கு இடைக்காலத் தடை விதிக்கப்படுகிறது. இந்த மனு குறித்து மாநில நகராட்சி நிா்வாகத் துறை செயலா், தஞ்சாவூா் மாவட்ட ஆட்சியா், கும்பகோணம் மாநகராட்சி ஆணையா் தரப்பில் பதிலளிக்க வேண்டும். இந்த வழக்கு விசாரணை ஒத்தி வைக்கப்படுகிறது என்றனா் நீதிபதிகள்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...