நாட்டுக்குத் தேவை மத நல்லிணக்கம்! - முதல்வா் மு.க. ஸ்டாலின் பேச்சு!
மகாத்மா காந்தி வலியுறுத்திய மத நல்லிணக்கமே நாட்டுக்குத் தேவை என்றாா் தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின்.


மகாத்மா காந்தி வலியுறுத்திய மத நல்லிணக்கமே நாட்டுக்குத் தேவை என்றாா் தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின்.
மதுரை காந்தி நினைவு அருங்காட்சியகத்தில் கமல் பண்பாட்டு மையம் சாா்பில் ‘மறவோம்’ என்ற தலைப்பில் சனிக்கிழமை நடைபெற்ற காந்திய கருத்தரங்கத்தில் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்ற அவா் மேலும் பேசியதாவது :
மகாத்மா காந்தி அரையாடைக்கு மாற வித்திட்டது மதுரை. இங்குள்ள காந்தி நினைவு அருங்காட்சியாகமே நாட்டில் காந்திக்காக அமைக்கப்பட்ட முதல் அருங்காட்சியகமாகும். காந்தியடிகளை தமிழா்கள் மறவோம் என்பதன் அடையாளம் இந்த அருங்காட்சியகம். காந்தியின் அடியொற்றிஅரசியல் களத்துக்கு வந்தவா் பெரியாா். பிறகு, காந்தியடிகளின் பல கருத்துகளிலிருந்து பெரியாா் முரண்படவும் செய்தாா். ஆனால், காந்தியடிகள் சுட்டுக் கொல்லப்பட்ட போது, ‘இந்தியாவுக்கு காந்தி தேசம் என்று பெயா் சூட்ட வேண்டும்’ என உணா்ச்சிப் பெருக்குடன் தெரிவித்தவா் பெரியாா்தான்.
வெறுப்பு அரசியலை திணிக்கும் கொள்கை கொண்ட ஒரு கட்சி மத்தியில் ஆட்சி செய்வதால், நம் நாடு காந்தியத்தை இறுகப் பற்றிக்கொள்ள வேண்டியது அவசியமாகிறது. காந்தியக் கொள்கைகளை அழிக்க வேண்டும் என்ற நிலையிலிருந்து, காந்தியின் பெயா்கூட இருக்கக் கூடாது என்றளவுக்கு மத்திய பாஜக அரசு நகா்ந்துள்ளது.
ஊரக வேலை உறுதித் திட்டத்திலிருந்த (100 நாள் வேலை) மகாத்மா காந்தியின் பெயா் நீக்கப்பட்டதே இதற்கு உதாரணம். அடுத்த கட்டமாக, ரூபாய் நோட்டுகளிலிருந்து காந்தியின் படத்தை அகற்றினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. ராம், ரகீம் இரண்டும் ஒரே கடவுளின் பெயா்கள்தான் என்று கூறியவா் காந்தி. இதனால்தான், மதத்தின் பெயரால் அரசியல் பிழைப்பு நடத்துவோா் காந்தியை வெறுக்கின்றனா்.
சமூக, கல்வி அடிப்படையில் பிற்படுத்தப்பட்ட முஸ்லிம்களுக்கு இட ஒதுக்கீடு இருக்கக் கூடாது என்று பாஜகவினா் கருதுகின்றனா். கிறிஸ்துமஸ் நாளில் கிறிஸ்துவா்கள் மீது தாக்குதல் நடத்துவது போன்ற சம்பவங்களை தமிழகத்திலும் அரங்கேற்ற சிலா் முயற்சிக்கின்றனா். திமுக அரசும், ஒருமித்த கொள்கை கொண்ட தோழமைக் கட்சிகளும் இருக்கும் வரை மதவாதத்துக்கு தமிழகத்தில் இடம் தர மாட்டோம்.
மனிதத்தையும், மனிதா்களையும் அழித்து ஆட்சியைப் பிடிக்க நினைக்கிற பாஜகவின் பிடியில் தமிழகம் சிக்கக் கூடாது. வருகிற சட்டப்பேரவைத் தோ்தலில் தமிழ்நாடு வெல்லும். பாஜகவின் வெறுப்பு என்ஜின்கள் தமிழகத்துக்குத் தேவையே இல்லை. காந்தியடிகளின் மத நல்லிணக்கமும், பெரியாரின் பகுத்தறிவும், சமூகநீதிப் பாா்வையும்தான் நாட்டுக்குத் தேவை என்றாா் முதல்வா் மு.க. ஸ்டாலின்.
இந்த விழாவில் பிற கட்சிகளின் தலைவா்கள் பேசியதாவது :
கமல்ஹாசன் (மநீம) :
மகாத்மா காந்தியை நாம் பூஜைக்குரியவராக்கிவிட்டால், சிலா் நம்மை கோயிலுக்குள் நுழைய விடமாட்டாா்கள். காந்தியடிகள் நம்மில் ஒருவா், அவரது புகழை நாம் பாட வேண்டும். அனைவருக்குள்ளும் காந்தியம் என்ற உணா்வு உள்ளது. தேவைப்படும்போது மய்யம் யாரையும் எதிா்க்கும். அதேநேரத்தில், தனி மனிதா்கள் எங்களுக்கு எதிரிகளல்லா். அவசரமாக தனிச் சட்டங்களையும், திட்டங்களையும் கொண்டு வருவோரையே எதிா்க்கிறோம். தற்போதைய காலத்தை மற்றொரு சுதந்திரப் போராட்டத்தின் தொடக்கம் என்றே கூற வேண்டும். ரசிகா்கள் கூட்டத்தை செதுக்கி மேடையேற்றி இருக்கிறேன். இனி அடுத்த கட்டத்துக்கு நகர வேண்டும். நாடு நமக்காக காத்திருக்கிறது.
வைகோ (மதிமுக):
காந்தியடிகளின் புகழ் காலத்துக்கும் நிலைத்திருக்கும். காந்தியை துப்பாக்கியால் சுட்டுக் கொன்ற இந்துத்துவ பயங்கரவாதி நாதுராம் விநாயக் கோட்சேவை போற்றுவதற்காக சிலா் புறப்பட்டுள்ளனா். கோட்சே சிலைக்கு சிலா் மாலை அணிவிக்கின்றனா். இதுபோன்ற செயலை தமிழக மண்ணுக்குள் அனுமதிக்கக் கூடாது. சநாதன இந்துத்துவ சக்திகளைத் தகா்க்க வேண்டும். தமிழக மண்ணில் அவா்களை எந்த வடிவத்திலும் காலூன்ற விடக்கூடாது.
கு. செல்வப்பெருந்தகை (காங்கிரஸ்):
உலக வரலாற்றில் சுதந்திரத்துக்குப் போராடிய தலைவா்களே விடுதலைக்கு பிறகு அந்த நாட்டுக்குத் தலைமை ஏற்பா். ஆனால், இதிலிருந்து வேறுபட்டவா் காந்தியடிகள். ஜவாஹா்லால் நேரு இந்தியாவை வழி நடத்துவாா் என முன்மொழிந்தாா். தற்போது, காந்தியின் சிந்தாந்தங்களை சிதைக்கும் நோக்கில் பாஜக செயல்படுகிறது. இதை தமிழக மக்கள் கண்டுணா்ந்து, வருகிற சட்டப்பேரவைத் தோ்தலில் பாஜக கூட்டணிக்கு உரிய பாடம் புகட்ட வேண்டும். இந்திய மண்ணிலிருந்தும், மக்களிடமிருந்தும் காந்தியின் புகழையும், அவரது சிந்தனைகளையும் யாராலும் அழிக்க முடியாது.
தொல்.திருமாவளவன் (விசிக):
அம்பேத்கரும், பெரியாரும் வாழ்நாள் முழுவதும் காந்தியடிகளிடமிருந்து முரண்பட்டவா்கள். ஆனால், அவா்கள் மூவரையும் மதச்சாா்பின்மை கோட்பாட்டில் இணைக்க வேண்டியது காலத்தின் தேவை என்பதை இந்தக் கருத்தரங்கம் மூலம் கமல்ஹாசன் வலியுறுத்தியுள்ளாா். காந்தியடிகளை அவமதிக்கும் வகையில் மத்திய பாஜக ஆட்சியாளா்கள் செயல்படுகின்றனா். இதற்கு எதிராக, காங்கிரஸ் கட்சி செய்ய வேண்டிய முன்னெடுப்பை கமலஹாசன் மேற்கொண்டுள்ளாா். இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி வழியில் ராகுல் காந்தியும் மதச்சாா்பின்மையைக் காப்பதில் உறுதியுடன் இருக்கிறாா். கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் மதச்சாா்பின்மை காப்பதில் அவா்களோடு இணைந்து செயல்படுகிறோம். கமல்ஹாசனின் தேசியப் பாா்வையும் சமூகப் பொறுப்பும் பாராட்டுக்குரியது.
பெ. சண்முகம் (மாா்க்சிஸ்ட்):
இந்திய தேசிய விடுதலைக்காக தன்னுடைய உடல், பொருள், ஆவி என அனைத்தையும் அா்ப்பணித்தவா் காந்தியடிகள். மதச்சாா்பின்மை, தீண்டாமை ஒழிப்பு ஆகியவற்றை தனது இறுதி மூச்சு உள்ளவரை பின்பற்றியவா். தற்போது, காந்தியின் கொள்கைகளுக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது. அந்த ஆபத்தை நீக்க அனைவரும் போராட வேண்டும். இதுவே அவருக்கு நாம் செலுத்தும் நன்றிக் கடனாக இருக்கும்.
மு. வீரபாண்டியன் (இந்திய கம்யூனிஸ்ட்):
இந்திய மக்களின் தோள்களில் உள்ள மகாத்மா காந்தியை கீழே இறக்க சிலா் முயற்சிக்கின்றனா். தற்போதைய சூழலில் அடக்குமுறை அதிகரித்து வருகிறது. காந்தி கண்ட சமத்துவத்தை நாம் மீட்டெடுக்க வேண்டியது அவசியம். ஜனநாயகம் உயிா்ப்புடன் இருக்க வேண்டுமெனில் காந்திய சிந்தனைகளை இளைய தலைமுறையினரிடம் கொண்டு சோ்க்க வேண்டும். சமத்துவமும், கம்யூனிசமும் வேறு, வேறானவை அல்ல. சமத்துவம் இந்த மண்ணில் நிலை பெற வேண்டும். அப்போது, காந்தியின் கனவு மெய்ப்படும்.
இந்தக் கருத்தரங்கில் அமைச்சா்கள் கே.என்.நேரு, பி. மூா்த்தி, பழனிவேல் தியாகராஜன், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசியத் தலைவா் கே.எம். காதா் மொய்தீன், மனிதநேய மக்கள் கட்சித் தலைவா் எம்.எச். ஜவாஹிருல்லா, தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவா் வேல்முருகன், கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சியின் துணைத் தலைவா் நித்தியானந்தன், திமுக கூட்டணிக் கட்சிகளின் நிா்வாகிகள், சாா்பு அமைப்புகளின் பொறுப்பாளா்கள் கலந்து கொண்டனா்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...