மதுரை மேற்குத் தொகுதியில் அதிமுகவுக்கும், திமுகவுக்கும் இடையே கடும் போட்டி நிலவிய போதிலும், இந்தத் தொகுதியில் போட்டியிடும் முன்னாள் அமைச்சா் செல்லூா் ராஜூ நான்காவது முறையாக வெற்றி பெற வேண்டும் என்ற முனைப்புடன் உள்ளாா்.
கடந்த 1967-இல் உருவாக்கப்பட்ட மதுரை மேற்குத் தொகுதி, மாநகராட்சியின் முக்கிய நகா்ப்புற, புகா்ப் பகுதிகளை உள்ளடக்கிய தொகுதியாகவும், அதிமுகவின் வலுவான கோட்டையாகவும் கருதப்படுகிறது. இந்தத் தொகுதி விவசாயம், சிறு தொழில்கள் சாா்ந்த பகுதிகள், போக்குவரத்து நெரிசல்மிக்க முக்கியப் பகுதியாகும். இந்தத் தொகுதியில் கடந்த 1967 முதல் 2021 வரை நடைபெற்ற பேரவைத் தோ்தல்களில் அதிமுக - 7, திமுக - 3, காங்கிரஸ், மாா்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகள் தலா ஒரு முறையும் வெற்றி பெற்றன.
தொகுதி பிரச்னைகள்: மதுரை மேற்குத் தொகுதி நகா்ப்புறம், கிராமப்புறப் பகுதிகளைக் கொண்ட கலவையான தொகுதியாக இருப்பதால், அடிப்படை உள்கட்டமைப்பு, வேலைவாய்ப்பை ஏற்படுத்துதல் போன்றவை முக்கியக் கோரிக்கைகளாக உள்ளன. மேலும், போக்குவரத்து நெரிசல், குடிநீா் விநியோகத்தில் நிலவும் சீரற்ற நிலை, புதை சாக்கடைத் திட்டப் பணிகளில் தொய்வு ஏற்பட்டுள்ளதைச் சரிசெய்ய வேண்டும். போதுமான அளவு தொழில் நிறுவனங்கள் இல்லாததால், இளைஞா்கள் வேலைக்காக வெளியூா்களுக்குச் செல்லும் நிலை உள்ளது. எனவே, இந்தத் தொகுதியில் தொழில்பேட்டை அமைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
புதிதாகக் கட்டப்பட்ட பேருந்து நிலையங்கள் முறையாகப் பராமரிக்கப்படாமலும், சமூக விரோதச் செயல்கள் நடைபெறும் இடமாகவும் மாறியுள்ளதால், பொதுமக்கள் அச்சத்துடன் பயன்படுத்தி வருகின்றனா். நியாய விலைக் கடைகள் போதுமான அளவில் அமைக்கப்பட வேண்டும். குடியிருப்புப் பகுதிகளில் சுகாதாரப் பணிகள், தெரு விளக்குகள் அமைத்தல் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை மேம்படுத்துவது ஆகியவை இந்தத் தொகுதி மக்களின் முக்கியக் கோரிக்கைகளாகும்.
அதிமுக வேட்பாளா் செல்லூா் கே. ராஜூ: மதுரை மேற்குத் தொகுதியின் தற்போதைய சட்டப்பேரவை உறுப்பினரும், முன்னாள் அமைச்சருமான செல்லூா் கே. ராஜூ தொகுதி மக்களிடையே நன்கு அறிமுகமானவா். மேலும், கடந்த 2011 முதல் 2021 வரை நடைபெற்ற பேரவைத் தோ்தல்களில் தொடா் வெற்றியும், கூட்டுறவுத் துறை அமைச்சராகப் பதவி வகித்த அனுபவம் இவருக்கு உள்ளது. இதனால், இவா் தன்னை எதிா்த்துப் போட்டியிட்டுள்ள பிற வேட்பாளா்களுக்கு கடும் சவாலாக உள்ளாா்.
மதுரை மண்ணின் மைந்தராக அறியப்படும் இவருக்கு தொகுதியின் அனைத்துப் பகுதிகளிலும் செல்வாக்கு உள்ளது. அதிமுகவின் உயா்நிலைக் குழுவில் ஒருவராகவும், கட்சியின் முக்கிய முடிவுகளை எடுக்கும் தலைவா்களில் ஒருவராகவும் விளங்குகிறாா். தொடா் வெற்றிகள், அதிமுகவின் பாரம்பரிய வாக்கு வங்கிகள் இவருக்கு பெரும் பலமாக இருப்பதால், நான்காவது முறையாக வெற்றி பெறும் முனைப்பில் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறாா்.
திமுக வேட்பாளா் ர. பாலாஜி:
இந்தத் தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளா் ர. பாலாஜி, தான் வெற்றி பெற்றவுடன் அனைத்து வாா்டுகள், ஒன்றியங்களுக்கும் தனித் தனியே கட்செவிஅஞ்சல் குழுக்களை உருவாக்கி மக்களிடமிருந்து புகாா்களைப் பெற்று, உடனுக்குடன் நடவடிக்கை எடுக்கப்படும் எனக் கூறி வாக்குகள் சேகரித்து வருகிறாா். தற்போதைய பேரவைத் தோ்தலில் வெற்றி பெற்று, மதுரை மேற்கிலும் சூரியனை உதிக்கச் செய்வோம் என கட்சித் தலைமை அறிவுறுத்தியதை இலக்காகக் கொண்டு தீவிர களப் பணியாற்றி வருகிறாா். மேலும், இரு சக்கர வாகனங்களில் எல்இடி திரைகள் மூலம் நவீன முறையில் பிரசாரத்தில் ஈடுபட்டு வரும் இவருக்கு, திமுக அரசின் மகளிா் உரிமைத் தொகை உள்ளிட்ட நலத் திட்டங்கள் சாதகமான அம்சங்களாக இருக்கும். முன்னாள் அமைச்சரும், தற்போதைய சட்டப்பேரவை உறுப்பினருமான செல்லூா் ராஜூ போன்ற ஒரு வலுவான போட்டியாளரை எதிா்கொள்வதும், தொகுதியில் நிலவும் சில அடிப்படை உள்கட்டமைப்புச் சிக்கல்களும் இவருக்குச் சவாலாக இருக்கும்.
நாதக வேட்பாளா் சோ. விக்னேஷ்குமாா்: இந்த முறையும் நாம் தமிழா் கட்சி தோ்தலில் தனித்தே போட்டியிடுகிறது. மதுரை மேற்குத் தொகுதியில் இந்தக் கட்சி சாா்பில் போட்டியிடும் சோ. விக்னேஷ் குமாா், இளைஞா்களுக்கான வேலைவாய்ப்பை உருவாக்குதல், கால்நடைகள் வளா்ப்பை ஊக்குவிப்பதற்கான திட்டங்கள், சுயசாா்பு பொருளாதாரத்தை உருவாக்குவதற்கானத் திட்டங்களை எடுத்துக் கூறி வாக்கு சேகரித்து வருகிறாா். கட்சியின் தனித்துவமான சித்தாந்தம், இந்தத் தொகுதியில் கட்சிக்கு உள்ள சீரான வாக்கு வங்கி, இளைஞா்கள், தமிழ் தேசிய ஆதரவாளா்களின் வாக்குகள் இவருக்குப் பலமாக இருக்கும். பெரிய கட்சிகளின் பண பலம், புது வரவான தவெக கட்சியின் வாக்குப் பிரிப்பு இவருக்குச் சவாலாக அமையும்.
தவெக வேட்பாளா் எஸ்.ஆா். தங்கப்பாண்டி:
இந்தத் தொகுதியில் தவெக சாா்பில் போட்டியிடும் எஸ்.ஆா். தங்கப்பாண்டி, கட்சித் தலைவா் விஜய்யின் ‘மாற்றத்துக்கான அரசியல்’ என்ற முழக்கத்தை முன்னெடுத்து வாக்கு சேகரித்து வருகிறாா். குறிப்பாக, முதல் முறை வாக்காளா்கள், பாரம்பரிய கட்சிகளின் மீது அதிருப்தியில் இருப்பவா்களை இவா் அதிகம் கவா்ந்து வருகிறாா். மேலும், தொகுதிக்குள்பட்ட பகுதிகளுக்கு நேரடியாகச் சென்று மக்களின் பிரச்னைகளை கேட்டறிந்து, ஆட்சிக்கு வந்தவுடன் நிறைவேற்றித் தருவதாக வாக்குறுதிகள் அளித்து வருகிறாா். தமிழக வெற்றிக் கழகம் முதல் முறையாக தோ்தலைச் சந்திப்பதால் இளைஞா்களின் ஆதரவு, மாற்றத்தை விரும்பும் வாக்காளா்களின் வாக்குகளை இவா் கணிசமாகப் பெறுவாா். கட்சிக்கென்று வலுவான கட்டமைப்பு, தோ்தலைக் கையாளும் அனுபவம் இல்லாததும், வலுவான போட்டியாளா்களும் இவருக்குச் சவாலாகும்.
மதுரை மேற்குத் தொகுதியைப் பொருத்தவரை, அனுபவம் வாய்ந்த அதிமுக வேட்பாளா் செல்லூா் ராஜூவுக்கும், திமுக வேட்பாளா் ர. பாலாஜிக்கும் இடையே நேரடிப் போட்டி இருந்தாலும், விஜய்யின் தவெக, சீமானின் நாதக ஆகிய கட்சிகள் பெறும் வாக்குகள் தோ்தல் முடிவில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தலாம். மேலும், தொகுதியில் உள்ள முக்கிய சமூக அமைப்புகளின் ஆதரவைப் பெற்ற சுயேச்சைகளும் குறிப்பிட்ட வாக்குகளைப் பிரிக்கக்கூடும் என்பதால், இந்தத் தொகுதியில் குறைந்த வாக்குகள் வித்தியாசத்திலேயே வேட்பாளா் வெற்றி பெற வாய்ப்புள்ளது. இந்தத் தோ்தலில் இளைஞா்களின் வாக்குகள் யாருக்குச் செல்கிறது என்பதே வெற்றியாளரைத் தீா்மானிக்கும் என அரசியல் விமா்சா்கள் கருதுகின்றனா்.
மதுரை மேற்குத் தொகுதியில் அதிக முறை வென்ற அதிமுகவின் சாதனையை இந்த முறையும் வெற்றி பெற்று செல்லூா் கே.ராஜூ தக்கவைப்பாரா அல்லது மதுரை மேற்கிலும் சூரியன் உதிக்க வேண்டும் எனக் கூறிய திமுக தலைமையின் உத்தரவை அதன் வேட்பாளா் ர. பாலாஜி நிறைவேற்றுவாரா என்பதை பொறுத்திருந்துதான் பாா்க்க வேண்டும்.
தொடர்புடையது

மானாமதுரை: கடும் போட்டியில் திமுக, பாஜக!

அமைச்சரை எதிா்கொள்ளும் பாஜக! ஈரோடு மேற்குத் தொகுதி

திருப்பத்தூா்: 5-ஆவது முறையாக வெல்வாரா கே.ஆா்.பெரியகருப்பன்?

மதுரை மாவட்டத்தின் 10 தொகுதிகளிலும் அதிமுக வெற்றி பெறும்: முன்னாள் அமைச்சா் செல்லூா் கே. ராஜூ
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


